பிளஸ் பாய்ண்ட் - ஜெ.திருமால்முத்து

உடல்மொழி ரகசியங்கள்

இன்டர்வியூ அழைப்பு வந்ததும் உடனே குடும்பத்தையே தூக்கத்திலிருந்து எழுப்பி நம் சர்டிஃபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க வைத்து, ஆபீஸ் ரூட் மேப்பை நண்பர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து கேட்பது, அதை சாக்காக வைத்து பார்ட்டி கொண்டாடும் 'வேலைக்குப் போறேன்' பயங்கரவாதங்கள் சரிதான். ஆனால் இன்டர்வியூவில் பதில் சொல்லுவது கடந்து உடல்மொழியையும் கவனிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

சின்சியர் கைகுலுக்கல்!

நேர்காணல் நடத்துபவர்களுக்கு கைகொடுக்கும்போது கைகள் வளையாமல் இருப்பது சின்சியாரிட்டியை பளிச்சென அடையாளப்படுத்தும். அலுவலகத்தில் நுழைந்தவுடனே உங்களுக்கான உடல்மொழி தேர்வு தொடங்கிவிடும் என்பதால், உங்களுக்கு ஆபீசில் வழிகாட்டி உதவுபவர் முதற்கொண்டு, நேர்காணல் செய்பவர்களுக்கும் சரியான மரியாதை தந்து பேசுவது ரின் போடாமலேயே உங்கள் ஆளுமையை ஜொலிக்க வைக்கும். இன்டர்வியூ அறையில் போர்ட்ஃபோலியோ இருந்தால போதும். திநகர் ஜவுளிப்பைகள் போல இன்டர்வியூக்கு சென்றால் சால கஷ்டம்.

அட்டென்ஷன் ப்ளீஸ்!

இன்டர்வியூ அறையில் அவர்கள் அமரச்சொல்லும் முன்பே செகண்ட் கிளாஸ் சீட்டு பிடிப்பது போல முந்திக்கொண்டு உட்காருவது, ஸ்கர்ட் நடிகைகள் போல கால்மேல் போட்டு உட்காருவது போன்ற செயல்கள் உங்களை வேலை மேல் ஆர்வமில்லாதவர் என்றே லேபிள் குத்தும். சேரின் பரப்பில் முழுமையாக அமருங்கள், ஆர்வத்தை காண்பிக்கிறேன் என அதிகம் முன்னே செல்வது ஆவேச, அவசரக்காரர் என்ற பெயரையே வாங்கிக்கொடுக்கும். கால்களை குறுக்காக வைத்து அமர்வது நம்பிக்கை இல்லாததை காட்டிக்கொடுக்கும் சிம்பல்.

தலைசாய்ப்பது ஆபத்து!

இன்டர்வியூவில் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது கீழே சில்லறை தேடுவது போல தலையை கீழே கவிழ்ப்பது, நெகடிவ்வான கருத்தையே நேர்காணல் செய்பவர்களுக்கு ஏற்படுத்தும். தலையை சமநிலையாக வைத்து கண்களை நேராக பார்த்து பேசுவது சிறப்பு. கஜினி சூர்யா போல புரியாத கேள்விக்கு தலையைத் திருப்பி பார்த்தால் ஊரே மிரளாமல் என்ன செய்யும்?

நிமிர்ந்த நன்னடை! நேர்கொண்ட பார்வை!

கல்யாணப்பெண்ணைப் பார்ப்பது போல வெட்கப்படாமல் நேர்காணல் செய்பவர்களை கண்களைப் பார்த்து பேசுவது முக்கியம். கண்களைப் பார்த்து பேசுவது அவர்களுக்கு சரியான மதிப்பை கொடுக்கிறோம் என்று அர்த்தம். கீழே குனிந்து பதில் சொன்னால், அந்த ஆபீசில் என்றுமே நீங்கள் தலைநிமிர்ந்து வேலை செய்ய முடியாது.

கைகளை கவனியுங்கள்!

இன்டர்வியூவில் கைகளை இறுக்கிப்பிடிப்பது, தாடை, வாயை கைகளால் தாங்கிப்பிடிப்பது போன்ற சைகைகள் வேலையில் ஆர்வமில்லாததையும், எதிர்ப்பு, பாதுகாப்பு தேடும் மனநிலை என்பதையே எதிரிலுள்ளவர்களுக்கு உணர்த்தும். சர்ச்சில் யேசுவிடம் கைகளை குவித்து பிரார்த்திக்கும் படி கைகளை வைத்திருப்பது நம்பிக்கையின் அடையாளம். கைகளை தளர்வாக தொடைகள் மீது வைத்திருக்கலாம். தோள்களை குலுக்கியபடி பேசுவது பிரச்னைகளை தட்டிக்கழிப்பவர் என்று பொருள்.