நீ எங்கே என் அன்பே!- விக்டர் காமெஸி




நீ எங்கே என் அன்பே!- விக்டர் காமெஸி

லூதியானாவில் பிறந்து டெல்லியில் செட்டிலான அழகான, ஹேண்ட்ஸமான 3 வயது கோல்டன் லேப்ரடார் ஆணுக்கு, அதே இனத்தில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண் தேவை. புகைபிடிக்கும், மது அருந்தும், பெண்ணியம் பேசும் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்ற  டெல்லியிலுள்ள டோனிகான் மார்க்கெட்டிலுள்ள சுவரில் ஒட்டியிருந்த விளம்பரத்தை பார்த்து இந்தியாவின் அனைத்து ஏ டூ இஸட் நாளிதழ்களும் ஆச்சர்யப்பட்டுவிட்டன. ஆண் நாய்க்கு பெண் இணை சேர்க்கும் விளம்பரம்தான் அது.

என் நாய்! என் உரிமை!

அச்சுவரில் இந்த விளம்பரம் மட்டுமல்ல, லாப்ரடார் நாய்க்கு அழகான, புத்திசாலியான, நேசம் கொண்ட குடும்பத்திற்கேற்ற பெண் தேவை என்ற மற்றுமொரு விளம்பரமும் பளிச்சிடுகிறது. இப்படி பண்ணுறீங்களே பாஸ்? என அதுல் கண்ணாவை கேட்டால், "நமக்கு மேட்ரிமோனியல் இருக்கும்போது நாய்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு ப்ரோ?" என உரிமைக்குரல் எம்ஜிஆராகும் இவர்தான் மேலே சொன்ன நாய் மேட்ரிமோனல் போஸ்டர் டைரக்டர். தன் இரண்டரை வயது நாய் மோல்டுவுக்கு பெண் தேடத்தான் இந்த புரட்சி போராட்டம். போஸ்டரை எழுதி, பிரிண்ட் எடுத்து கம் தடவி மார்க்கெட்டில் ஒட்டிய உழைப்பு வேஸ்ட் ஆகவில்லை. பெண் நாயோடு ஒருவர் அதுல் கண்ணாவை அணுகியிருக்கிறார். என்னாச்சு ப்ரோ என்றால் "அவசரப்பட்டா எப்படி? தொழிலில் பொறுமை அவசியம்" என நமக்கு லெக்சர் கொடுக்கிறார்.

பிஸினஸூக்கு லைசென்ஸ் தேவை!

நாய்களுக்கு ஒட்டும் போஸ்டர்களிலும் அதே ஜாதி தேவை என்பது பல விலங்கு ஆர்வலர்களிலும் முற்போக்குவாதிகளாக உள்ள கனவான்களுக்கு கடும் வருத்தத்தை தந்துள்ளது. ஆனால் நாய்களுக்கு ஃபேமிலி உருவாக்குவதே லைசென்ஸ் வாங்கி செய்யும் பிஸினஸ் என்பது மிராக்கிள்தானே!

"தங்கள் நாயின் மீது உயிரையே வைத்துள்ள சில ஓனர்கள் இப்படி செய்வதுண்டு. நாய் இனப்பெருக்கம் என்பது வளர்ந்துவரும் சூப்பர் பிஸினஸ் என்பதை பலரும் அறிவார்களா என்று தெரியவில்லை. மேலும் அதற்கு லைசென்ஸூம் தேவை. மேலும் நாய்களுக்கான இணை சேரும் வயது, நாய்க்குட்டிகள் பராமரிப்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவு நாய் வளர்க்கும், வளர்க்க விரும்பும் அனைவருக்கும் அவசியம்" என கொட்டும் தகவல்களில் அசர வைக்கிறார் தார் தன்னார்வ நாய் காப்பக இயக்குநர் பல்லவி தார்.

மாறும் வீட்டு சூழல்!

"சிறிய மற்றும் பெரிய நாய்கள் உள்ளிட்ட எதற்கும் இன்றுள்ள பளபளக்கும் டைல்ஸ் தரைகள் ஏற்றவையல்ல. மேலும் நம் க்ளைமேட்டுக்கும் அவற்றின் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு அதிக வாய்ப்பில்லை" என அப்டேட் தகவல்களை அடுக்கும் சீமாமோகன் தன் டீ எஸ்டேட்டில் பல்வேறு நாய்களை 'ஹார்லிக்ஸ்' அம்மாவாக அக்கறையாக பராமரித்து வருகிறார். தான் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு ஒரு வயதில் வலிப்பு நோய் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியான சீமா, 5 வயதில் அந்நாய் இறப்பதை கண்ணீரோடு பார்த்தார். அதன் பெண் இணையை தனியாக விடாமல் அதற்கென மற்றொரு ஜோடியை தேடிப்பிடித்து அதன் வாழ்வை முழுமையாக்கியிருக்கிற கருணை மனம் ஆச்சர்யம்.

"மனிதர் ஒருவருக்கு எப்படி கோத்திரம் பார்த்து திருமணம் செய்வார்களோ அதே விஷயங்களை நாய்களுக்கும் கடைபிடிப்பது அவசியம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் தேடிப்பிடித்து நாய்களுக்கான இணையை கண்டறியவேண்டும். அது உங்கள் கடமை. நாய்க்கான இணையைத் தேட தனி இணையதளமே உள்ளது" என மூச்சு விடாமல் பேசும் விலங்குகள் மருத்துவர் கிரண் ராவ் மிரட்சியூட்டுகிறார்.

இணை சேர தேவை ஆராய்ச்சி!

கோவாவில் நாய்கள் காப்பகம் நடத்தும் பிரிஞ்சால் தாஸ், "நான் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறேன். நாய்களை இணைசேர்க்கும்போது, கவனமாக இருக்கவேண்டும். இல்லையினில் ஜீன்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு" என்கிறார். ஜென் இஸட் காலத்திற்கு நாய்களுக்கும் வார்ம் வெல்கம்!

 நன்றி: முத்தாரம் வார இதழ்