அமேஸான் - ஒரு வெற்றிக்கதை - எஸ்.எல்.வி. மூர்த்தி
-மங்கள்தாஸ்







அமேஸான் இன்று ஒட்டுமொத்த உலகத்திற்குமான ஒரு மெகா கடை. அதன் லோகோவிலுள்ள ஏ டூ இஸட் அர்த்தத்திற்கேற்ப அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் இடம் அமேஸான் இணையதளம். எப்படி சாதித்தார் ஜெஃப் பெஸோஸ் என்பதை நறுக்கென எஸ்.எல்.வி மூர்த்தி எழுதியிருக்கிறார். தொடக்கமே  வளர்ப்புதந்தை மிகேல் பெஸோஸ், ஜெஃபிடம் நான் உன் தந்தை இல்லை என்று சொல்வதுதான். ஷாக் ஆகும் ஜெஃப், தன் வளர்ப்பு தந்தையிடம் நெருக்கமாகி பின்னாளில் தன் பிஸினஸ் கனவிற்கான முதலீட்டையே அவரிடம்தான் பெறுகிறார்.

நூல் எந்த இடத்திலும் தேங்கவில்லை என்பது முக்கியம். பரபரவென பறக்கிறது. அடுத்தடுத்த கட்டம். கனவை சேசிங் செய்வது என துறுதுறுப்பு ஒரு நானோ செகண்ட் கூட மிஸ் ஆகவில்லை. ஆர்வமாக செய்யும் எதிலும் ஒருவர் தோற்கமுடியாது என்பதே ஜெஃப் உலகிற்கு தன் வாழ்வு வழியே சொல்ல விரும்புவது. அதனை தன் வாழ்வு வழியாக பிராக்டிகலாக நிகழ்த்தியும் காட்டியுள்ளார் என்பது அனைத்திற்கு உதாரணம் தேடுபவர்களுக்கு உதவும்.

இந்நூலில் ஜெஃப் சோதனைகளால் துளைக்கப்படுவது, அமேஸான் தளத்திற்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில்தான். அந்த நேரத்தில் மனம் குலையாமல், தன் கம்பெனியை அன்றைக்கு நம்பர் 1 ஆக இருந்த புத்தக கடைக்காரர்களிடம் விற்காமல் இருந்த தன்னம்பிக்கை அநாயசம். .... அதோடு போட்டியாளர்களையும் மதித்து அவர்களிடமிருந்தும் தன் வாழ்விற்கான பலத்தை கற்றுக்கொள்ளும் குணம். ரவி சுரையா என்ற பங்குச்சந்தை பற்றி பத்திரிகையாளரை அவர், மில்லி ரவி என்று சும்மா சொல்லவில்லை. தன் குறைகளை நீக்கிக்கொண்டு சொல்லும் இடம்  மாஸ் சீன். அடுத்து பார்ன்ஸ் & நோபிள் என்ற கம்பெனியை சிம்பிளாக ஒதுக்கி தள்ளி வெற்றியால் வீழ்த்துவது, வரி, போட்டி, புகார்கள் என அனைத்தையும் சமாளிக்கும் ஜெஃப், புதிய சோதனை முயற்சிகளையும் கைவிடாமல் செய்து கொண்டிருந்தார் என்பதை நீங்கள் மறக்க கூடாது.

வெற்றிக்கான விஷயங்களாக மூர்த்தி அடுக்கும் மீட்டிங், பணியாளர்களிடம் பழகுவது, தன் கொள்கைகள், தொடர்ந்து பணியாளர்களை ஊக்கப்படுத்தி பேசுவது,  பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் என அத்தனையும் அவ்வளவு நேர்த்தி. 18 ஆம் பக்கத்தில் என் தாத்தாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்ற வரி தவறு. மற்றபடி இந்நூலில் தடுமாறும்படியான மொழிபெயர்ப்பு சிக்கல்கள் இல்லை. சரளமாக வாசித்துவிடலாம். அதிலும் இறுதியில் ஜெஃபின் இரண்டு முக்கிய கொள்கைகளை சொல்லும் க்ளைமேக்ஸ் பகுதி அட்டகாசம்.  முக்கியமான சம்பவங்களை நூலின் பின்னாடி கொடுத்திருக்கிறார்கள். ஐக்யூ  சிறுவனின் அசுரவெற்றி பற்றிய தடதடக்கும் வேகத்தில் பேசும்  நூல் இது.

நன்றி: குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன்