ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று!




ஜெனரிக் மருந்துகளை பரிந்துரை செய்வது மிக கடினமான ஒன்று!
நேர்காணல்: டாக்டர். தேவி பிரசாத் ஷெட்டி

தமிழில்: .அன்பரசு

அண்மையில் இந்திய மருத்துவக்கழகம்(MCI), மருத்துவர்கள் அனைவரும் இனி நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசு, மருந்துகள் மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தில் ஜெனரிக் மருந்து விதியை இணைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நம்மோடு உரையாடுகிறார் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையின் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி.

தரமான விலைகுறைந்த மருந்துகள் மக்களுக்கு கிடைக்கச்செய்யும் இந்திய அரசின் இந்த உத்தரவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மத்திய அரசின் நோக்கத்திற்கும், இந்திய மருத்துவக்கழகத்தின் விதிகளுக்கும் நிறைய முரண்பாடு உள்ளதே?

அரசு ஜெனரிக் மருந்துகளைப் பயன்படுத்த எடுத்த முடிவை வரவேற்கிறேன். இதனை அரசு முன்னமே செயல்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் இதனை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. 30 ஆயிரம் நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்து டன் கணக்கில் தள்ளுகின்றன. நோயாளிக்கு பொதுவாக ஜெனரிக் மருந்து எழுதி கொடுத்தால், மருந்துக்கடையில் அவரை பிராண்ட் பொருட்களே வரவேற்கும். அப்போது சிரமத்திற்கும் தவிப்பிற்கும் ஆளாவது நோயாளிகள்தானே! இதற்கு யார் பொறுப்பேற்பது? மருந்துகளின் சோதனைகள் குறித்து அரசு இறுக்கமான விதிகள் தேவை. ஜெனரிக் பகுதிப்பொருட்களின் ஆற்றல் குறித்து சில ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் முடிவு செய்வதே சிறப்பு.





மருந்துகளை மேம்படுத்த சில ஆண்டுகள் தேவை என்கிறீர்கள் சரி, ஆனால் எம்சிஐ தனது மருந்து கொள்கை குறித்து மாநில அரசுளுக்கு தகவல் கொடுத்த பின்தானே அதனை விதியாக மாற்றுகிறது? மருந்து நிறுவனங்களிலிருந்து அதிகாரம், மருந்து கடைகளுக்கு மாறுகிறதா?

அதன் நோக்கம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் மருந்து குறித்து அரசும் மக்களும் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். தரம்! மாத்திரையை சாப்பிடுவதற்கு முன்பு அதனை தயாரித்த நிறுவனம் குறித்து பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஜெனரிக் மருந்து விஷயத்தில் அது யாரால் தயாரிக்கப்பட்டது என்ற தெரியாததால் அதன் தரம் மீது பயமெழ வாய்ப்புள்ளது.

ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைப்பதில் உங்களுக்கு விருப்பந்தானா? ஜெனரிக் மருந்துகள் புழக்கத்திற்கு வந்தபின் உங்களது பரிந்துரை ஜெனரிக் மருந்துகளுக்காக இருக்குமா அல்லது பிராண்டட் மருந்துகளுக்காக இருக்குமா? நேர்மையாக பதில் தேவை.

பிராண்டட் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜெனரிக் மருந்துகள் கிடைத்தால் எனக்கு அதில் நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்கான சாய்ஸ் கிடைக்கும் அவ்வளவுதான். நோயாளிக்கு கொடுக்கவேண்டிய டோஸ் அளவை விழிப்பாக கண்காணிப்பேன்.

சரி அரசின் இக்கொள்கை நோயாளிகளுக்கு உதவக்கூடியதா அல்லது எதிரானதா?

சந்தேகமே வேண்டாம்! நிச்சயமாக இது நோயாளிகளுக்கு உதவக்கூடியதுதான். ஆனால் இதனை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மட்டுமே பிரச்னை. அமெரிக்காவில் உள்ள மருந்து சந்தையில் 300 மருந்து கம்பெனிகள் உள்ளதால் அதனை எளிதாக கண்காணிக்க முடியும். ஆனால் 30 ஆயிரம் கம்பெனிகளுக்கும் அதிகமுள்ள இந்தியாவில் அவற்றை எப்படி கண்காணித்து தரத்தை உறுதிப்படுத்துவது? கூறுங்கள்.

நன்றி:Shreenbhan, Livemint 
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ் 








பிரபலமான இடுகைகள்