ஏன்? எப்படி? எதற்கு? - தொகுப்பு ரோனி ப்ரௌன்



ஏன்? எப்படி? எதற்கு? -Mr. ரோனி

1366x 768 என்பது லேப்டாப் கம்ப்யூட்டரின் ரிசல்யூஷனாக இருக்க காரணம் என்ன?

திரையளவு 4:3 அளவில் இருந்தபோது 640 x 480, 800 x 600, 1024 x 768 என்ற ரிசல்யூஷன் படங்களையே வீடியோ கிராபிக்ஸ் கார்டு ஏற்றது. ஆனால் படங்களின் தெளிவுக்கு நீங்கள் மெனக்கெட்டால் 1280 x 1024, 1600 x 1200 அளவுள்ள கணினி திரைகளுக்கு தனி திறன்கொண்ட வீடியோ கார்டு அவசியம்.


எல்சிடி டிவிகளின் வரவால் 1024x768 என்ற துல்லியத்தில் படங்கள் அழகாக இருந்ததோடு இதற்கான தொகையும் குறைவு. இதன் அளவை சிறிது உயர்த்தினால் 16:9 என திரையளவு மாறும். கணினி மெல்ல வீடியோ பார்க்கவும் பயன்பட்டபோது அளவை மாற்றி, 1366x 768 என்பது இன்று பொதுவான கணினித் திரையளவாக மாறியதற்கு அப்டேட்டாகிய ஹார்ட்வேரின் பங்கும் முக்கியக்காரணம். தற்போதையை அனைத்து ஹெச்டி டிவிக்களிலும் 1080 பிக்சல் என்பது பொதுவான ஒன்று.


கூகுள் மேப்ஸ் ட்ராஃபிக்கை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் ஆர்வமாக வேலைக்கு பீக் ஹவரின் முன்பே கிளம்ப ஆயத்தமாகிவிட்டீர்கள். கூகுள் மேப்ஸை திறந்தால், எந்த ரூட்டில் சென்றால் எவ்வளவு நேரம் ட்ராஃபிக்கை துல்லியமாக நடராஜ் ஸ்கேலில் அளந்தது போல கூறிவிடுகிறது எப்படி சாத்தியம் இது என ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்கள்.

கூகுள் மேப்ஸ் உங்களுடைய இடத்தை இன்ஸ்டால் செய்ததுமே அந்த மைக்ரோ நொடியிலிருந்து, காரின் ஜிபிஎஸ் உட்பட உங்களின் பயணத்தை பதிவு செய்யத்தொடங்கிவிடும். இவற்றின் தொகுப்பு மூலம் வேஸ் ஆப் மூலம் ட்ராஃபிக் துறையில் கிடைக்கும் தகவல்களையும் சேமித்து நமக்கு இன்ஸ்டன்டாக வழி சொல்லி ஜமாய்த்து நம்மிடம் பாராட்டும் வாங்கிக்கொள்கிறது. நாட்டிலுள்ள அனைவரும்(சும்மா ஃபேன்டஸி கற்பனை) தமது இடம் குறித்த விவரங்களை சடக்கென ஆஃப் செய்துவிட்டால் கூகுளின் ஜீபூம்பா புத்திசாலித்தனம் பொசுக்கென உயிர் விட்டுவிடும்



அயர்லாந்தில் ஏன் பாம்புகள் இல்லை?

புனிதர் பேட்ரிக் தன் மந்திர சக்தியால் பாம்புகளை கடலில் மூழ்கடித்தார் என்ற கதையொன்று உலவுகிறது. அயர்லாந்து, ஹவாய், ஐஸ்லாந்து, நியூசிலாந்து, கிரீன்லாந்து, அன்டார்டிகா ஆகிய நாடுகளிலும் கூட பாம்புகள் கிடையாது. முன்பு பெரும் நிலப்பரப்பாக நீண்டிருந்த அயர்லாந்தில் அது பனிப்பாளங்கள் நிறைந்திருந்த காலகட்டம். அப்போது குளிர்ந்த ரத்தம் கொண்ட விலங்கினங்கள் நிறைந்திருந்தன. ஐஸ் ஏஜ் காலகட்டம் முடிந்து இன்று 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன. பனிக்கரடிகள், காட்டுப்பன்றிகள், காட்டுப்பூனை ஆகியவை மட்டும் இச்சூழலில் தப்பிப்பிழைத்துவிட்டன. ஆனால் பாம்புகளுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அங்கு பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்ப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் அவை விடுவிக்கப்பட்டாலும் கூட காடுகளில் தங்கி வாழ்வதில்லை என்பது புதுமை.


அமெரிக்க தூதரின் பணிகள் என்னென்ன?

ஆங்கிலப்படங்களில் தன் நாட்டினரை மீட்க ஜெயிலுக்குச்சென்று அன்பாக பேசும் தூதர்களை பார்த்திருப்பீர்கள். உண்மையில் அவர்களின் பணி என்ன? பிரான்ஸ், ரஷ்யா என நாட்டிற்கு நாடு பணிகள் வேறுபட்டாலும் உள்நாடு, வெளிநாடு உறவு சார்ந்த பணிகள் முக்கியமானவை. தூதரக ஊழியர்களுக்கான பணிகள், செயல்பாடுகள் ஆகியவற்றோடு, கருவூலம், சிஐஏ உள்ளிட்ட அரசு அமைப்புகளோடு இணைந்திருப்பார்கள். பல்வேறு மிஷனரிகள், பத்திரிகை நிறுவனங்கள் அதிபரின் அலுவலகத்தோடும் நெருங்கிய தொடர்பிலிருப்பார்கள். பிற நாடுகள் என்ன நினைக்கிறது என்பதை அமெரிக்காவிற்கும், அமெரிக்காவின் எண்ணங்களை பிற நாட்டிற்கும் கூறுபவராக தூதர் செயல்படுவார். தூதர்கள் உச்ச சம்பளம் பெற்றாலும், தீவிரவாதம் வளர்ந்து வரும் தேசத்தில் முதலில் குறிவைக்கப்படுவது அவர்களின் உயிர்தான். ஏன்? அப்போதுதானே அந்நாட்டில் என்னதான் நடக்கிறது தொடர்புடைய நாட்டோடு உலகமே உற்றுப்பார்க்கும்.    



கடல் நண்டுகளை ஏன் உயிரோடு சமைக்கிறார்கள்?

கடல்நண்டுகள்(lobsters) போன்ற ஓடு கொண்ட கடல் உயிரிகளில் நச்சு பாக்டீரியாக்கள் அதன் தசையில் இயல்பாக உற்பத்தியாகின்றன. கடல் நண்டுகள் இறந்தவுடன் இவை பெரும் எண்ணிக்கையில் உற்பத்தியாகி நச்சுப்பொருட்களை வெளியிடத்தொடங்கிவிடும். எனவே கடல் நண்டுகளை உயிருடன் சமைக்கிறார்கள். நண்டுகளுக்கு மூளை கிடையாது என்பதால் வலி கிடையவே கிடையாது என்று பொருளல்ல. நமக்கு காயம்படும்போது வலியை உணர வைக்கும் ஹார்மோனான கார்டிசோல் நண்டுகளுக்கும் உண்டு. வெப்பத்தில் தசை சிதையும்போது அதன் பின்புறம் துடிப்பது வலியினால்தான். நண்டுகளை 15 நிமிடம் ஐஸில் வைத்து, பின் வெந்நீரில் அமிழ்த்தி சமைத்தால் அதற்கு வலிக்காது என்பது சுவாரசிய கற்பனை.

நன்றி: முத்தாரம் வார இதழ்