உலகை உலுக்கிய கொலைகள்! - ச.அன்பரசு

கொலைகள் நம்மை திகிலுக்குள் தள்ளுவது உண்மைதான். அதோடு குறிப்பிட்ட கொலையை செய்த மனிதர்களுக்கும் அன்றைய சமூகத்திற்குமான பிரச்னைகளுக்கும் தொப்புள்கொடி உறவுண்டு. அப்படி பரபரப்பாக பேசப்பட்ட சில கொலை வழக்குகள் இதோ..!

எலிஸபெத் ஷார்ட்

1947 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்கு பகுதியிலுள்ள தெருவில் கடுமையான கத்தி வெட்டுக்களோடு நிர்வாணமாக கிடந்த பெண் எலிஸபெத் ஷார்டின் உடல், கண்டெடுக்கப்பட்ட அன்றே  பிரேக்கிங் நியூஸ் அமுலானது. மார்புகள், மற்றும் கால்களில் வெட்டுக்கள் ஆழமாக இருந்தன. இடுப்பு, மற்றும் கீழ்பகுதியின் வெட்டுக்களால் மேல்பகுதி, கீழ்ப்பகுதியை விட சரிந்து கிடந்தது. எலிஸபெத்தின் உடலில் கத்தியால் கோலம்போட்ட கொலையாளியை பைனாகுலரில் பார்த்தும்கூட கண்டேபிடிக்கமுடியவில்லை போலீசாரினால். திரைப்படங்கள், நாவல்கள், டிவி நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட எலிஸபெத் ஷார்ட் கொலை, இன்றுவரை தீர்க்கப்படாத புதிரான வழக்கு.

ஜேம்ஸ் பல்ஜெர்

1993 பிப்ரவரி 12 அன்று  இங்கிலாந்தின் மெர்சேசைட்டில் கிர்க்பை பகுதியைச்சேர்ந்த ஜேம்ஸ் பல்ஜெர், இரு சிறுவர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது அவன் வயது 2. பூட்டில் பகுதியிலுள்ள நியூஸ்‌ராண்ட் ஷாப்பிங் மாலில் பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 3.40 க்கு தன் அம்மாவோடு ஷாப்பிங்கில் இருந்த ஜேம்ஸை, பத்து வயது சிறுவர்களான ஜோன் வெனபில்ஸ், ராபர்ட் தாம்ப்சன் ஆகியோர் இருவரும் அவன் அம்மாவை ஏமாற்றி டெக்னிக்காக கடத்தினர். 3 கி.மீ ஜேம்ஸை நடத்தி சென்று, லிவர்பூல் பகுதியிலுள்ள வால்டன் ரயில்நிலையத்தில் இரு சிறுவர்களும் டார்ச்சரை தொடங்கினர். ஜேம்ஸின் கண்களில் பெயிண்டை ஊற்ற, இன்னொருவன் பேட்டரிகளை வாயில் திணிப்பது என தொடங்கிய சித்திரவதையில் பறிபோனது ஜேம்ஸின் உயிர். ஜேம்ஸின் உடல் ரயில்வே தண்டவாளத்தில் இரு நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டபோது உடலில் பொட்டுத்துணியில்லை. சைக்கோ சிறுவர்களுக்கு சிறைதண்டனை கிடைத்தது.

சில்வியா லைகென்ஸ்

அமெரிக்காவில் 16 வயது பெண்ணான சில்வியா லைகென்ஸையும் அவரது தங்கையையும் அவரது அம்மா, அருகிலிருந்த கர்ட்ரூட் பெனிஸேவ்ஸ்கி என்ற பெண்மணியின் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்க வைத்து பராமரிப்பு செலவிற்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் கர்ட்ரூட் குடும்பமே சில்வியாவிடம் கொடூர வன்முறையில் இறங்கியது. மாடியிலிருந்து தள்ளிவிடுவது, சிகரெட்டில் சுடுவது, நிர்வாணமாக்குவது, காயங்களில் உப்பு தடவுவது, மலத்தை தின்னவைப்பது என டார்ச்சர்கள் வெகுநீளம். 1965 அக்டோபர் 26 அன்று இறுதியாக போலீசார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்தபோது சில்வியாவின் உடலில் கண்ணீர்விடக்கூட நீரில்லை. தீக்காயங்கள், கொப்புளங்கள், வீக்கம், ஊட்டச்சத்துக்குறைவு என மூளைச்சாவு அடைந்திருந்தார் சில்வியா. பெனிஸேவ்ஸ்கிக்கு 14 ஆண்டு சிறைதண்டனை கிடைத்தது.

கெல்லி அன்னே பேட்ஸ்


இங்கிலாந்து பெண்ணான கெல்லி தன் 17 வயதில் 1996 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் அவரது காதலன் ஜேம்ஸ் பேட்டர்சன் ஸ்மித் என்பவரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நான்கு வாரங்கள் ஜேம்ஸினால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கெல்லிக்கு அடுத்து நடந்ததுதான் உச்சகட்ட கொடூரம். கெல்லியை பாத்டப்பில் கொல்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே அவரின் இரு கண்களையும் பிடுங்கியிருந்தார் ஜேம்ஸ். கெல்லியின் வழக்கை ஆராய்ந்த ஜோசப் மோனகன், "எனது 15 ஆண்டு போலீஸ் வாழ்வில் இவ்வளவு கொடூரமான வழக்கை சந்தித்ததேயில்லை" என வாய்விட்டே கூறிவிட்டார். தன் காதலிகளை கொடுமைப்படுத்துவதில் ஜேம்ஸ் கைதேர்ந்தவர் என்று போலீசார் கண்டுபிடித்து, கையில் காப்பு மாட்டி  1997 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதித்தபோதும் ஜேம்ஸ் கூறிய வார்த்தை "நான் கெல்லியை கொல்லவில்லையே?" என்பதுதான்.
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம்

பிரபலமான இடுகைகள்