பிரபலம் என்ற மாயை மக்களிடம் செல்லாது -முத்தாரம் நேர்காணல்



"பிரபலம் என்ற மாயை மக்களிடம் செல்லாது"

நேர்காணல்: அமுல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர.எஸ். சோதி
தமிழில்: .அன்பரசு
நன்றி: Sohini Das,Soumya Gupta (business-standard,livemint)

குஜராத் கோ-ஆப்பரேட்டிவ் மில்க் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் லிட்(GCMMF) இயக்குநர் ஆர்.எஸ்.சோதி என்றால் பலருக்கும் தெரியாது. புள்ளிவைத்த கவுன் பாப்பா மாடலாக நடிக்கும் அமுல் என்றால் அனைவருக்குமே புரியும். 2016-2017 ஆம் ஆண்டில் அமுல் நிறுவனத்தின் லாபம் மட்டும் 27 ஆயிரம் கோடி ரூபாய். பொதுத்துறை நிறுவனமான அமுலின் வளர்ச்சி வேகம் 3.5%. அண்மையில் அமுலின் வளர்ச்சி, லீவரின் வழக்கு, எதிர்காலதிட்டம பலவற்றையும் நம்மோடு பகிர்கிறார் அமுலின் இயக்குநர் ஆர்.எஸ். சோதி.

லீவர் நிறுவனம் அமுல் நிறுவனத்தின்மீது தொடர்ந்துள்ள வழக்கு குறித்து கூறுங்கள்.

லீவரின் வழக்கில் கோர்ட்டில் பதிலளிக்க நாங்கள் ரெடி. பத்திரிகை, டிவி விளம்பரங்கள் எப்போதும்போல ஐஸ்க்ரீம், ஃப்ரோஸன் டெஸர்ட் வித்தியாசம் சொல்லும் தன்மையிலேயே வெளிவரும். இவ்வகையில் இந்த வழக்கு கூட எங்களுக்கு விளம்பரம்தான். விற்பனையில் நாங்கள் எங்களுக்கான இடத்தை பிடிப்போம். தந்தை மகள் தீமில் இரு பொருட்களுக்கான வித்தியாசம் பேசினோம் இனி அது, சற்றே மாற்றி இருபொருட்களைப் பற்றி வேறுவித தீமில் பேசுவோம்.

உங்களுடைய வருமானத்தில் 1% க்கும் குறைவாக விளம்பரத்திற்கு செலவழிப்பதோடு, பிரபலங்களையும் பயன்படுத்துவதில்லை. எப்படி அமுலை விளம்பரப்படுத்துகிறீர்கள்?

எங்களுடைய பிரபலம் அமுல் பட்டர் கேர்ள்தான். பிரபலத்தை காட்டி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அமுலின் மீதான நம்பிக்கையில் மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். உண்மையில் மக்களுக்கு பரிந்துரைக்கும் எத்தனை பொருட்களை நடிகர்கள் பயன் படுத்தியிருக்கிறார்கள்? பிரபலம் என்ற மாயை இனி மக்களிடம் செல்லாது.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் உடல்நலம் குறித்த பார்வைகள்  மாறியுள்ளன. நீங்கள் அதனை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

ப்ரெஷ்ஷான இயற்கையான பொருட்களையே இன்று மக்கள் அதிகம் வாங்க விரும்புகின்றனர். அமுல் இதனால்தான் குல்பி, மோர், லஸ்ஸி உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய பொருட்களில் அதிக கவனம் செலுத்தி சாதித்து வருகிறது.

இந்தியாவின் பால்துறையிலுள்ள சவால்கள் என்னென்ன?

பிஸ்கட்டுக்கு கோதுமை, சோப்புக்கு காஸ்டிக் சோடா போல பாலை விவசாயிகளிடமிருந்து எளிதாக பெறமுடியாது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற எங்களுக்கு 70 ஆண்டுகளானது. இந்தியாவில் பெரிய பிராண்ட் அமுல் என்றாலும் கர்நாடகத்தில் நந்தினி, பீகாரில் சுதா(அரசு கூட்டுறவுசங்கங்கள்) ஆகியவையே முதலிடம் வகிக்கின்றன. இத்துறை ஆண்டுதோறும் 4.5% வளர்ச்சி பெற்றுவருகிறது. நாங்கள் பிராண்ட் பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்கிறோம்.

உங்களுடைய வளர்ச்சியில் அமுல் விளம்பரத்திற்கு முக்கிய பங்குண்டு. அமுல், புதிய விஷயங்களை விளம்பரம் வழியாக வாடிக்கையாளருக்கு கூறுவது சலிக்கவேயில்லை. உங்களுக்கு இது எப்படி சாத்தியமானது?
அமுலின் Utterly Butterly Delicious  ஸ்லோகனுக்கு வயது 50. நாங்கள் தொடர்ச்சியாக புதிய தலைமுறையிடம் செல்ல விரும்பி, அவ்வப்போதைய நிகழ்வுகளை விளம்பரமாக்க உழைக்கிறோம். அதுவே எங்களை உயர்த்தியது. ரயிலில் பயணிக்கும்போது அமுலில் நான் வேலை செய்வதைக் கேட்பவர்கள், "உங்களுடைய அமுல் பெண்ணின் கார்டூன் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுதான் பேசத்தொடங்குகிறார்கள்" என உற்சாகமாக கைகுலுக்கி விடைகொடுக்கிறார் ஆர்.எஸ்.சோதி  
  

                              நன்றி: முத்தாரம்