ரீசைக்கிள் சுகாதார புரட்சி -ச.அன்பரசு







ரீசைக்கிள் சுகாதார புரட்சி -.அன்பரசு
இந்தூர் சுகாதாரத்தின் முதலிடம் பிடித்தது எப்படி?

கொண்டாடுகிற நிஜம்தான். மத்திய பிரதேசத்தின் கமர்ஷியல் நகரங்கள் போபால், இந்தூர். இதில் இந்தூரில்தான் க்ளீன் அண்ட் கிளியர் மேஜிக் நடந்துள்ளது. நகரங்கள் பொதுவாக எப்படியிருக்கும்? மிக்சர் பாக்கெட்டுகள், வேர்க்கடலை பொட்டலங்கள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், அழுகிய பழங்கள், மீந்துபோன பிரியாணி, இறைச்சி கழிவுகளிலுள்ள எலும்புகளுக்கு போரிடும் தெருநாய்கள், மொய்க்கும் ஈக்கள் படை என்பது அஷ்டலட்சணங்கள் கொண்ட மினி டூ மெகா நகரங்களில் நாம் காணும் ரெகுலர் காட்சி.
ஆனால் இந்தூரில் இக்காட்சிகளை பைனாகுலர் வைத்து தேடினாலும் காணக்கிடைக்காது. தன் புல்லட் வேக அதிரடி பிளான்களால், சுகாதாரத்தில் 86 இடத்திலிருந்த இந்தூரை இரண்டே ஆண்டுகளில் ஸ்வட்ச் பாரத் லிஸ்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் முனிசிபாலிட்டி கமிஷனர் மனிஷ் சிங்.

2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆன மனிஷ்சிங், மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூர் இரண்டு நகரங்களுக்கும் 2015 ஆம் ஆண்டு முனிசிபல் கமிஷனரானதிலிருந்து தொடங்கியது அதிரடி. குப்பைகளை அகற்றும் தனியார் நிறுவனம் வேலையில் சுணங்கியதால், நகரமெங்கும் குப்பைகள் பெருகி புகார்கள் குவிந்தன. உடனே ஆக்ஷனில் இறங்கி நகரின் அசுத்தமான 1800 இடங்களுக்கு ஸ்கெட்ச் போட்டவர், 400 அலுவலர்களுக்கு வாக்கி-டாக்கி கொடுத்து நேரடியாக அந்த ஸ்பாட்டுகளை க்ளீன் செய்ய அனுப்பினார். "பிரச்னைகளின் மீது தண்ணீர் தெளிப்பது அதனை என்றைக்கும் தீர்க்காது" என நேர்பட பேசும் மனிஷ்சிங், சுத்தத்திற்காக நடத்தியது அட்சர சுத்தமாக வடிவில் அது ஒரு போர்தான். முதல் வேலையாக, நகரிலிருந்த 1400 குப்பைத்தொட்டிகளை தயவு தாட்சண்யமின்றி அகற்றினார். தினசரி உருவாகும் 1100 மெட்ரிக் டன் குப்பைகளை எங்கே கொட்டுவது? என பலரும் திகைத்தபோது, இருநாட்களுக்கு ஒருமுறை பணியாளர்களே வீட்டுக்கு வந்து குப்பைகளை பெற்றுக்கொள்வார்கள் என மக்கள் வயிற்றில் அமுதம் வார்த்தார் மனிஷ்சிங். இச்சேவைக்கு மாதக்கட்டணம் ரூ.60. பிற நகரங்களில் சாலைகளை இருமுறை குப்பைகளை அகற்றுகிறார்கள் எனில், இந்தூரில் தினசரி 3 முறை தூய்மைப் பணி பக்காவாக நடைபெறுகிறது.

"குப்பைத்தொட்டியில் போடப்படும் குப்பைகளை அது நிரம்பி கீழே சிதறுவதால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிகம். மக்கள் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால், குப்பைகள் வெளியே சிதறி, ஈக்கள் உருவாகின்றன. பின் நாய்கள், பசுக்கள் ஆகியவை அதனை கலைப்பதால் தொற்றுநோய் ஏற்படும் சான்ஸ் அதிகம். எனவே வீட்டுக்கே வந்து குப்பைகளை பெறும் பிளானை அமலாக்கினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு" என்று உற்சாகமாக பேசும் மனிஷ்சிங். பிளாட்பார்மில் பாதசாரிகளின் நலனுக்காக சிறிய குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். தன்னார்வ நிறுவனமான BASIX உட்பட 175 சிறு குழுக்கள் மூலமாக 400 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ரேடியோ,டிவி,நாளிதழ் என உருவாக்குவதோடு 1.5 .மீ. சுவரில் சுகாதார ஸ்லோகன்கள், ஓவியம் என நகரம் 'பளிச்' ஆனதற்கு நகர மேயர் மாலினி லக்ஷ்மண்சிங் கவுரின் ஆதரவும் முக்கிய காரணம்.

 பொது இடத்தில் குப்பை கொட்டினால் ஆன் தி ஸ்பாட் வரி என்பது இந்தூர் பாலிசி. அரசியல்கட்சி மாநாடுகளுக்கும் முனிசிபாலிட்டி வரி உண்டு. கட்டாவிட்டால், அடுத்தநாள் தினசரியில் இத்தகவல் கொட்டைஎழுத்தில் வெளிவரும். இப்படி கடந்த 18 மாதங்களில் கிடைத்த ஃபைன் வருமானம் மட்டுமே ரூ. 80 லட்சம். அரசு புறம்போக்கிலுள்ள 8 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, திறந்தவெளி குப்பைகூடங்களாக இருந்த 850 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இச்சாதனைகளை ஆபீசில் உட்கார்ந்துகொண்டு பஸ்ஸர் அழுத்தி மனிஷ் சிங் சாதிக்கவில்லை. அதிகாலை 5.30 க்கு சுறுசுறுப்பாக எழுபவர், அதிகாரிகள் குழு சூழ 6 டூ 9 மணிவரை அனைத்து வார்டுகளுக்கும் ரவுண்ட்ஸ் சென்று குறைகளை கேட்டு தீர்த்துவிட்டுத்தான் ஆபீஸ் சென்று சீட்டில் உட்காருகிறார் முனிசிபாலிட்டி கமிஷனர் மனிஷ்சிங்.

சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் கிடங்கில் மட்குபவை மட்காதவை பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள், என்ஜிஓ அமைப்பின் ரீசைக்கிள் மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலைப்பணி ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு விற்கப்படுகிறது. "60 கோடி செலவில் உருவாக்கப்பட்ட திட்டம் இது. சாலையில் குப்பை போடுவது தவறு என்று மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருப்பது எங்கள் குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி" என தங்கத்தலைவனாக நெகிழ்ந்து பேசுகிறார் மனிஷ்சிங். பிக் சல்யூட் சார்!



குவியும் கழிவுகள்!
உலகளவில் கழிவுகள்(தினசரி) - 4.7 மில்லியன் டன்கள்
2025 இல் அதிகரிக்கும் கழிவுகள் - 6 மில்லியன் டன்கள்
இந்தியாவில் கழிவுகள்- தினசரி பெறப்படும் கழிவுகள்- 1,17,645 மெ.டன்கள்- 83%, மறுசுழற்சி -33,665 மெ.டன்கள் 29%)
உலகெங்கும் பிளாஸ்டிக் உற்பத்தி - 300 மில்லியன் டன்கள்(ஓராண்டுக்கு)
பிளாஸ்டிக் கழிவுகள்(தினசரி) - 15,342 டன்கள்
(Central Pollution Board of India 2015-2016, Center for Science and Environment, Council of Scientific and Industrial Research (CSIR))

சூப்பர் சுத்தம்!
சுகாதார நகரங்களில் முதலிடம்(434 நகரங்களில்) - இந்தூர்(மத்தியப்பிரதேசம்)
அசுத்த நகரங்கள் - கோண்டா(.பி), பூசாவல்(மகாராஷ்டிரா)
பிளாஸ்டிக் மறுசுழற்சி - ஜப்பான்(72.1%), ஐரோப்பா(48.3%), இந்தியா(65%) அமெரிக்கா(31%)
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் - 13 டன்கள்(ஓராண்டுக்கு இழப்பு 13 பில்லியன் டாலர்)

 (Swachh Survekshan 2017, United Nations Environment Programme)

தொகுப்பு:ரிதேஷ் முத்ரா, பத்ரலேகா
நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்