இந்தியர்களின் பாரீன் விவசாயம்-ச.அன்பரசு
இந்தியர்களின் பாரீன் விவசாயம்-ச.அன்பரசு
விவசாய
டிஎன்ஏவின் அதீத வேகத்தால் உள்ளம் கேட்குமே மோர் என
அமெரிக்கா, கனடா என
பறந்து விவசாயம் பார்த்த பஞ்சாபியர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,
வட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவில் அரசு மானிய விலையில் ஒரு ஏக்கர் ரூ.
500 க்கு கிடைத்தவுடன், அத்தனை அங்கேயே குவிந்து டீமாக நிலத்தை பயிரிட தொடங்கிவிட்டனர். அதோடு அரசின் பல்வேறு உப
உதவிகளும் பஞ்சாபியர்களுக்கு பாரம்பரிய பாங்க்ரா இசைக்க, உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்?
பஞ்சாபின் ஃபாஸில்கா மாவட்டத்திலுள்ள ஜலாலாபாத்தைச் சேர்ந்த விவசாயியான உபேந்திரகுமார், எத்தியோப்பியாவின் பாஹிர் டார் பகுதியில் ஆயிரத்து
500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்."உரம் தேவைப்படாத நல்ல வளமான நிலம் அது. முதலில் காய்கறிகள் பின்னர் வாசனைப்பொருட்களுக்கான பயிர்களை பயிரிட்டேன்.அருகிலேயே விமானநிலையம் இருப்பது போய்வர வசதி"
என்பவர், தற்போது அங்கு விவசாயத்தை கைவிட்டிருக்கிறார். காரணம், தொலைதூர நிர்வாக சிக்கல்தான். எத்தியோப்பியா, ஜிம்பாவே, மொசாம்பிக் ஆகியவை பஞ்சாபியர்களின் விவசாய சாய்ஸில் முன்னணி வகிக்கின்றன.
கருங்கடல், காகஸ் மலை சூழ இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான ஜார்ஜியாவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை 20
ஆயிரம் என அரசு அறிவித்தவுடன் அங்குள்ள நிலங்களிலும் உழைப்பாளிகளான பஞ்சாபியர்களின் டர்பன்தலைகள் தட்டுப்பட ஆரம்பித்து விட்டன.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்தே ஜார்ஜியாவின் தலைநகர் பிலிஸியிலும், அங்கிருந்து நூறு கி.மீ தொலைவிலுள்ள சோனோரி எனும் காகசியன் மலைகள் சூழ்ந்த கிராமத்திலும் ஏறத்தாழ இரண்டாயிரம் பஞ்சாபிய குடும்பங்கள் குடியேறியுள்ளது ஆச்சரியமான ஒன்று.
"அதிகரிக்கும் விவசாய செலவுகள், இன்சூரன்ஸ் இல்லை, தரகர்களின் தொல்லை, அரசின் ஆதரவின்மை,
விவசாயிகள் தற்கொலை, போதைக் கலாசாரம்,
விவசாய நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறும் அவலத்தை எவ்வளவுநாள் பொறுத்திருப்பது? எனவே ஐரோப்பிய நாடுகளில் பஞ்சாபியர்களின் குடியேற்றங்கள் ஆச்சரியமான ஒன்றல்ல"
என்கிற விவசாயி குஷ்வந்த் சிங், அவரது குடும்பத்தில் மூன்றாவது ஜெனரேஷன்.
எண்பதுகளில் ஆஸ்திரேலியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.பாரீன்
விவசாயம் விவசாயிகளை ஈர்க்க காரணம்,
ஊழலற்ற எளிய நடைமுறைகள்,
குற்றங்கள் குறைவு என்ற நிம்மதியான சூழல்தான்.
மேலும் பஞ்சாபியர்கள் தங்கள் குடும்பத்தோடு இங்கு செட்டிலாவது இதுவே முக்கியக் காரணம்.
உலகளவில் ஈஸியாக தொழில் தொடங்க உதவும் நாடுகளில் ஜார்ஜியாவுக்கு 17 வது இடம். அதோடு நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.7,059
மட்டுமே. நூறு தொழில்களை செய்வதற்கு ஒரே அனுமதிதான்.
விவசாய நிலங்கள் லொகேஷனைப் பொறுத்து 60 ஆயிரம் - 1 லட்சம் வரை குத்தகைக்கு கிடைக்கின்றன. தரமில்லாத உரங்கள், வணிக மின்சாரக் கட்டணம்,
சொத்துவரி, விலையுயர்ந்த விதைகள் ஆகியவற்றோடு மொழி, உணவு உள்ளிட்ட மைனஸ் பக்கங்களும் இதில் உண்டு.
இந்திய
விவசாயிகள் மட்டுமல்ல சீனர்கள், ஈரானியர்கள், ரஷியர்கள் ஆகியோரையும் ஜார்ஜியா அரசு வரவேற்று உணவு தன்னிறைவுக்காக விவசாயத்தில் ஈடுபடுத்தியதை உள்ளூர் விவசாயிகளை ரசிக்கவில்லை. வெளிநாட்டு மக்கள் ஜார்ஜியாவில் நிலங்களை வாங்குவதற்கு தடை விதிக்க உள்நாட்டு விவசாயிகள் ஆக்ரோஷ போராட்டம் நடத்தியதால், 2014 ஆம் ஆண்டு அரசு இதற்கான தடைசட்டத்தை கொண்டுவந்தது. எனவே நஷ்டத்திலிருந்து தப்ப பஞ்சாபியர்கள் நிலத்தை விற்க, லீசுக்கு பெற்றிருந்த நிலத்தை குறைத்துக்கொள்ளவும் தொடங்கினர்.
காய்கறி, கோதுமை என
விவசாயம் செய்தவர்கள் பின்னாளில் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல் சுற்றுலா வாகனங்கள் என
தொழில் நிறுவனங்களை தொடங்கியது இந்தியர்களின் ஆன் தி
ஸ்பாட் சமயோசித புத்தி.
ஜார்ஜியா, எத்தியோப்பியா நாடுகளில் விவசாயம் செய்யும் பஞ்சாபியர்கள் மனதில் பஞ்சாப் சீராகும் என்ற நம்பிக்கை தேயவில்லை என்பதே அயல்தேசத்தில் அவர்களை உற்சாகத்துடன் வாழ வைக்கிறது.
அக்ரி தேசம் ஜார்ஜியா!
ஜார்ஜியாவில் முன்பு பயிரிடப்பட்டவை தேயிலை,
சோளம், திராட்சை ஆகியவை மட்டுமே.
சோவியத்திலிருந்த போது 428 ஹெக்டேர்கள் நிலம் கூட்டுப்பண்ணை முறையில் இருந்ததன.
பின்னர் சோவியத்திலிருந்து பிரிந்து உள்நாட்டுப்போர் சிக்கல் ஏற்பட்டபோது நிலங்கள் தனியார்மயமாயின. 1990க்கு முன் தனியாரிடமிருந்த நிலங்கள்
7%. பின் மில்லினியத்தில் 37% என உயர்ந்து இன்று
100% விவசாய உற்பத்தி தனியாரிடமே உள்ளது. கிராம மக்களுக்கு நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டதில் தனியார் நிலத்தின் அளவு
0.96%. இதில் 5%
விவசாய பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேர்களுக்கும் அதிகம். ஜார்ஜியாவின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 8.4%(2012). விவசாய ஏற்றுமதி மதிப்பு
1.1 பில்லியன் டாலர்கள்(2012)
(www.wikipedia.org, www.moa.gov.ge தகவல்படி)
எத்தியோப்பியா
தேன்
மற்றும் தேன்மெழுகு தயாரிப்பில் முன்னணி நாடு. நைஜீரியாவுக்கு அடுத்து அதிக மக்கள்தொகையாக 96 மில்லியன் மக்கள்தொகை கொண்ட எத்தியோப்பியாவில் 85% மக்களின் தொழில் விவசாயம்தான். பொருளாதாரத்தின் விவசாயத்தின் பங்கு 36.7%, ஜிடிபி வளர்ச்சி விகிதம்
7%. காஃபி, பருப்புகள், தோல் பொருட்கள் முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள்.
நன்றி:குங்குமம்
தொகுப்பு: விபானா கிரிஷ், சுசுகி சுப்பு