புத்தக அறிமுகம் ! கடவுள் சந்தை






புத்தக அறிமுகம்
கடவுள் சந்தை
மீரா நந்தா
தமிழில்: க.பூரணச்சந்திரன்
விலை ரூ.300
அடையாளம்


கடவுள் சந்தை நம்முன் வைப்பது நாம் நுகர்வு வேகத்தில் கவனிக்க மறந்துவிட்ட கடவுள் சந்தையை. வளர்ச்சி வேகம் அதிகரிக்கிறது, முதலீடுகள் உயருகிறது, கட்டிடங்கள் விண்ணைத் தொடும்படி உயர்வது, நடுத்தரவர்க்கம் அதிகரிப்பு ஆகிய விஷயங்கள் நடந்தாலும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, கணேஷ் சதுர்த்தி, திருவண்ணாமலை தீபம், கோயில்களின் கும்பாபிஷேகம் என அனைத்தும் நாம் கவனிக்காதபடி வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கான நிதியளிப்பது எல்லாம் ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க சோம்பல்படும் பெரு் முதலாளிகளான அம்பானி, அதானி,டாடா, பிர்லாக்கள்தான்.

உலகமயமாக்கம் தொண்ணூறுகளில் அமுலாகி  இத்தனை ஆண்டுகளில் நுகர்வுவெறி எப்படி தீவிரமாக புத்திமேலேறி அதன் பின்னணியில் இந்து மதம் பூதமாய் வளர்ந்திருக்கிறது என்பதை மீரா நந்தா துல்லியமான ஆதாரங்களோடு இந்நூலில் விளக்கியிருக்கிறார். சொகுசு சாமியார்கள் வேதம், பாரம்பரியம் வளர்க்கிறேன் என நிலத்தை வளைக்கும் கதைகள், சமஸ்கிருதம் வளர்க்கும் நிறுவனங்களின் திகு திகு வளர்ச்சி, இயற்கையை சீரழித்து தொழில் நடத்தும் வேதாந்தாவின் அனில் அகர்வால், முகேஷ் அம்பானி உட்பட பலரும் மறக்காமல் கோயிலுக்கு நிதியளிப்பதின் சூட்சுமங்கள் ஆகியவற்றை இந்நூல் சுட்டிக்காட்டி மக்களைச் சுற்றி கட்டப்படும் பல்வேறு மாய வலை பற்றிய விஷயங்களை தீர்க்கமாக புரிய வைக்கிறது.

குருட்டு பிடிவாதமான மத நம்பிக்கை எப்படி அறிவியலையும் கையகப்படுத்துகிறது என்று கூறுவதற்கு நடைமுறை உதாரணம், மோடி புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என விநாயகரை இடம்சுட்டி விளக்கிப் பேசியது உங்கள் நினைவுக்கு வரலாம். அதேதான் நூலின் நோக்கமும்.  மதம் என்ற ஒற்றைப் பெயரைக்கொண்டே மக்களை ஏமாற்ற உலகமயமாக்கல் எப்படி முக்கிய காரணமாகிறது என்பதை சொன்ன விதத்தில் க.பூரணச்சந்திரன் மொழிபெயர்த்துள்ள கடவுள் சந்தை முக்கிய நூல் என்பதில் சந்தேகமில்லை.

-கோமாளிமேடை குழு