நூல் விமர்சனம்! -கோமாளிமேடை டீம்
இந்தியா- சீனா போர்
நெக்ஸ் மாக்ஸ்வெல்
தமிழில்:ஜனனி ரமேஷ்
கிழக்கு
நவீன தாராளமய உலகில் நண்பன்,பகைவன் என்ற டேக்குகளுக்கு வேலையில்லை. எனது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக மூலாதாரம் தந்தால் நட்புநாடு இல்லையா எதிரி என கட்டம் கட்டிவிடுவது வல்லரசு நாடுகளின் வழக்கம். இ்ந்தியா- சீனா போரும் இது போன்ற எண்ணத்தில் தீவிரமாகி நாட்டை அவமானத்துக்குள்ளாக்கியதோடு நேருவின் அரசியல் வாழ்வையும் சுபமாக முடித்து வைத்துவிட்டது.
1950 களிலிருந்தே இந்திய சீனாவுக்கான எல்லைப்போர் வார்த்தை அளவில் தொடங்கிவிட்டது. பின்னர் இதை அரசியல் லாபத்துக்காக காங்கிரசும், வலதுசாரி கட்சிகளும் பிற உதிரிகளும் ஊதிப்பெரிதாக்கின. அனைத்துக்கும் முக்கிய காரணம், இங்கிலாந்து வகுத்த தோராயமான அளவீடுகளால் உருவான மக்மோகன் எல்லைக்கோடுதான்.
1962 ஆம் ஆண்டு போரைத் தடுக்க சீனாவின் சூ என் லாய் எவ்வளவோ முயன்றும் நேரு சம்மதிக்காமல் போனதற்கு சூழல் ஒரு காரணம் என்றாலும் தன் ஆளுமை அடிப்படையில் வெளியுறவு கொள்கையை உருவாக்கிய பலவீனமும் முக்கிய காரணம். அன்றைய சூழல்களை இன்றைய காலகட்டத்தில் நின்று பார்ப்பது நேர்மையல்ல என்றபோதும், அமைதி உடன்படிக்கைகளுக்கான வாய்ப்புகளை தன் சொந்த சுயநலன், செல்வாக்கு வளர்வதற்கான நிராகரித்த நேருவின் தன்மை பின்னாளில் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதித்தது குறித்த துல்லியமான தகவல்களை டைம் பத்திரிகையாளரான நெவில் மாக்ஸ்வெல் எழுதியுள்ளார்.
தளபதி திம்மையா,பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷணமேன்ன், கௌல் ஆகியோருக்கிடையேயான உறவு சிக்கல்கள் போர் நிலைமைகளை இன்னும் மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றன. இதில் ரஷ்யா -சீனா எல்லைக்கோடு, பர்மா-சீனா எல்லைப் பிரச்னை, அமெரிக்கா - சீனா அதிகாரப்போட்டி என பல்வேறு விஷயங்கள் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கின்றன. நாட்டின் தலைவர் தன்னிச்சையாக ஆலோசனைக் குழுவின்றி, துதிபாடிகளின் வெற்று உளறல்களை நம்பி செயல்பட்டால் நிலைமை என்னாகும் என்பதற்கு நேரு தொட்ங்கிய இந்திய சீனாப்போர் மிகச்சிறந்த உதாரணம். சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவின் பிரச்னைகளை புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல் இது. ஜனனி ரமேஷ் மொழிபெயர்ப்பில் தலைவலியின்றி வாசிக்க முடிவது நூலின் பிளஸ் பாய்ண்ட்.