உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு! -ச.அன்பரசு




மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு! -.அன்பரசு

கர்நாடகாவின் காகல் கிராமம். கடந்தாண்டு மே மாதம் 16 ஆம் தேதி கடற்கரையில் சிலிகா மணல் தொழிற்சாலையை சிலர் உருவாக்கி, மணல் அள்ளத்தொடங்கினார். முதலில் குறைவாகவும் பின்னர் டன் கணக்கிலும் அள்ளத்தொடங்கினர். சும்மாயிருக்குமா கடல்?, மெல்ல ஊருக்குள் தலைகாட்டத் தொடங்கியது. கடலையொட்டி வாழ்ந்து வந்த துர்க்கி நாயக் என்ற பெண்மணி உட்பட ஆறு குடியிருப்புவாசிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை. அப்போதுதான் உதவிக்கு வந்தார் நமதி சூழல் சட்ட அமைப்பைச் சேர்ந்த வினோத் பட்கர்.



பரபரவென சட்டவிரோத மணல் நிறுவனத்தைப் பற்றி ஆதாரங்களை திரட்டி நகர கமிஷனருக்கு அனுப்ப, கள விசாரணை நடந்ததோடு ஏற்படுத்திய சூழல் கேட்டிற்கான அபராதம் 6.3 லட்சம் அபராதம் கட்ட உத்தரவானது. "கிராமத்து மக்களின் ஒத்துழைப்பினால் பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடிந்தது" என மலர்ச்சியாகப் பேசுகிறார் சட்ட ஆலோசகர் வினோத். தற்போது மணல் அள்ளப்பட்ட பகுதிகளில் வேலமரக்கன்று, சவுக்குமரக்கன்றுகள் நடப்பட்டு மண் அரிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.


இங்குள்ள போக்ரிபெய்ல் என்ற கிராமத்தில் கட்டப்பட்ட கிரஷர் நிறுவனம், தினசரி 18 மணிநேரம் மெஷின்களை இயக்க, கற்கள் தூளாவதால் எழும்பிய கடும் தூசிக்காற்றால் வாழை, முந்திரி, தேங்காய், மாமரம் மற்றும் அறுவடைப் பயிர்கள் உட்பட அனைத்து தாவரங்களும் சோபையிழந்து விளைச்சல் டல் ஆனது. சளி, இருமலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விதிமுறைகளை காலில் மிதித்து மூர்க்கமாக இயங்கும் கிரஷர் ஃபேக்டரிதான் பிரச்னையின் மூலாதாரம் என்று கூட தெரியாததுதான் பரிதாபம். இங்கும் உதவிக்கு வந்தது நமதி சட்ட நிறுவனத்தின் உறுப்பினர்கள்தான். சட்ட உதவியாளரான மாருதி கௌடா, ஜூன் 2016 ஆம் ஆண்டிலேயே கிரஷர் நிறுவனத்தின் லைசென்ஸ் முடிவடைந்ததையும், குடியிருப்பு பகுதியிலிருந்து 500 மீ. தள்ளி தொழிற்சாலை அமைந்திருக்க வேண்டும் என்கிற விதிமீறலையும் கண்டுபிடித்தார். மேலும் கிளிஞ்சல்களை சேகரிப்பதற்கான உரிமை, சந்துமாத் கிராமத்திற்கு நீர் தரும் நிறைவடையாத அணைப்பணியை முழுமையாக்க சட்ட போராட்டம் செய்து மக்கள் சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறார் மாருதி கௌடா.
மக்களுடன் இணைந்து நமதியின் மாருதி கௌடா போராடியதற்கு பயனாக, ஒரு தென்னை மரத்திற்கு ரூ.100, முந்திரி,மாமரம் ஆகியவற்றுக்கு தலா ரூ.300, ஆரோக்கிய சீர்கேட்டிற்கு ஒருவருக்கு ரூ.6000, குழந்தைகளுக்கான மருத்துவச்செலவு என இழப்பீட்டை பாதிப்பிற்கேற்ப கிரஷர் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனாலும் களப்பணியில் கிடைத்த ரிப்போர்டை மக்களுக்கு வெளிப்படையாகக் கூற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்வரவில்லை.

"ஒவ்வொரு முறையும் பிரச்னை தீவிரமாகும்போது சிறிது பணத்தை கொடுத்துவிட்டு தொடர்ந்து தவறைச் செய்யலாம் என்ற நிறுவனங்களின் இரக்கமற்ற மனநிலைக்கு, உள்ளூர் அதிகாரிகளும் துணைபோவது ஆபத்தானது" என எச்சரிக்கிறார் நமதி இந்தியா குழு உறுப்பினரான மஞ்சு மேனன்.

அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு இந்திய வம்சாவழியைச்சேர்ந்த விவேக் மேரு என்பவர் தொடங்கிய நமதி என்ற உலகளாவிய தன்னார்வ அமைப்புதான் மேற்கண்ட இரு நிகழ்வுகளிலும் மக்கள் தம் அடிப்படை உரிமையைக் காக்க உதவியுள்ளது. "அதிகாரத்தை கேள்வி கேட்கும்வகையில் மக்களின் குரலை ஜனநாயக முறையில் வலுப்படுத்துவதே நமதியின் பணி" என புன்னகைக்கிறார் விவேக் மேரு.

இவர்களின் பணிதான் என்ன? நமதியின் உறுப்பினர்கள் யாரும் கோர்ட் படி ஏறுவதில்லை. சட்ட உதவி தேவைப்படும் மக்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்க நம்பிக்கை தருகிறார்கள் அவ்வளவே. குறிப்பிட்ட பகுதியின் முக்கியப் பிரச்னைகளை தீர்ப்பதற்கான சட்டத்தீர்வுகளை இந்த பயிற்சி பட்டறைகளிலே ஸ்பெஷலாக வழங்குவது நமதியின் ஆசம் ஸ்டைல். தற்போது நமதி டெல்லி, கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களில் சூழல் குறித்த சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக தீவிர சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த நமதிக்கு, பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் பன்னாட்டு சட்ட விதிகளுக்கு ஏற்ப எளிய மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறது. " 'உலகிற்கான நீதி என்பது நெடியது. ஆனால் அது உண்மைக்குள் உள்ளடங்கியது' என்ற மார்டின் லூதர்கிங் ஜூனியரின் வார்த்தைகளிலிருந்துதான் நமதியை உருவாக்கி, செயல்பட்டு வருகிறோம்" என்கிறார் விவேக் மேரு.


நலன் காக்கும் நமதி!
நமதி, உலகின் பல்வேறு இனக்குழு சார்ந்த மக்களுக்கு அதிகாரமளிக்கும் உலகளாவிய சட்ட அமைப்பு. உலகெங்கும் 1187 அமைப்புகள், 4644 தனிநபர்கள் உதவியுடன் மக்களின் குடியிருப்பு, உடல்நலம், அடிப்படை உரிமைகள், சூழல்கேடு ஆகியவற்றை எல்லை கடந்தும் சட்டத்தின் உதவியோடு காப்பாற்றி மீட்பதே நமதியின் லட்சியம். நமதியின் இயக்குநரான விவேக் மேரு, 2003 ஆம் ஆண்டு சியரா லியோனில் உள்நாட்டுப்போர் முடிந்தபின் மக்களின் உரிமைகளைப் பெற டீமேப் என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்தினார். அக்காலகட்டத்தில் அங்கிருந்த வழக்குரைஞர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவு. Open Society Foundation, UK DFID, AusAID, and UNDP ஆகிய அமைப்புகள் நமதிக்கு உற்றதுணை. நம் பிரச்னைகளுக்கான தீர்வை ஒன்றிணைந்து தீர்ப்போம் என்பதே இவர்களது கொள்கை.     

நன்றி:குங்குமம்
தொகுப்பு: கிரண் ராஜூ, சுப்ரீம் தேஜா   
 
    
  

  


பிரபலமான இடுகைகள்