கன்சர்வேஷன் இந்தியா! - இணைந்த கைகள்- ச.அன்பரசு
இணைந்த கைகள்- கன்சர்வேஷன் இந்தியா உருவாக்கிய இரு நண்பர்களின் கதை.
சேகர் தத்தாரியா |
இன்றைய ட்ரெண்டிங்கில் வீக் எண்ட் பிளானில் இரு
நண்பர்கள் ஒன்றாக சந்தித்தால் என்ன நடக்கும்? விக்ரமன் படம்
போல ஈஸியாக யூகிக்க கூடியதுதான். கத்தரிக்காய் சட்னியோடு பிரியாணி
சாப்பிட்டு பாட்டில் எடுத்து கொண்டாடுவார்கள். சிச்சுவேஷன் அதேதான்.
ஆனால் ஸ்டோரிதான் வேறு மாதிரி. இரு நண்பர்களின்
சந்திப்பில் வனங்களை பாதுகாக்கும் ஆக்கப்பூர்வ அமைப்பு உருவாகியிருப்பது என்பது புதுசுதானே!
ஸ்பெஷல்? இருவருக்கும் அதுதான் முதல் சந்திப்பு.
சென்னைக்காரரான சேகர் தத்தாரியா பாம்புகளின் காதலர்
என்றால்,
பெங்களூர்வாசியான ராம்கி னிவாசன் தீராத பறவைகளின்
காதலர். இன்ட்ரஸ்ட் வெவ்வேறு என்றாலும் காட்டின் மீதான காதல்
ஒரே புள்ளியில் இருவரையும் ஒன்றிணைத்துள்ளது.
பிபிசி, நேஷனல் ஜியோகிராபி
என புகழ்பெற்ற டிவி சேனல்களுக்காக ஆவணப்படங்களை எடுத்துள்ள காட்டுயிர் திரைப்பட இயக்குநரான
சேகர், தன் பணிக்காக ஸ்வீடனின் ரோலக்ஸ், எட்பெர்க் ஆகிய உயரிய விருது அங்கீகாரங்களை பெற்றவர். தொடக்கத்தில் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் பணியாற்றியவர்,
பின்னாளில் மார்க்கெட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட்அப் தொடங்கி ஜெயித்தார்.
திடீரென காட்டுயிர்கள் மீது ஆர்வம் பிறக்க இன்று பறவையியலாளர் பிளஸ்
போட்டோகிராபர்.
ராம்கி சீனிவாசன் |
அதேசமயம் சேகரும் இதேகேள்விக்கான பதிலைத்தான் தேடிக்கொண்டிருந்தார். வனத்தை பாதுகாப்பதற்கு நான் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என சேகரைச் சூழ்ந்த ஆர்வக்கோளாறு
ஆட்கள், காட்டை பாதுகாப்பதற்காக வழிமுறையை காதுகுளிர கேட்டவர்கள்
எவரும் வேலை செய்வதற்கு ரெடியாக இல்லை. அவர்களில் ராம்கி மட்டும்
தேறினார். 2009 ஆம் ஆண்டில் ராம்கியின் வீட்டில் நடந்த சில மணிநேர
சந்திப்பில், சூழல் தளமான கன்சர்வேஷன் இந்தியா ப்ளூபிரிண்ட் ரெடி!
தன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அப்போதுதான் விற்றிருந்த ராம்கி,
இணையதளத்திற்கான பெயரையும் முன்னமே பதிவு செய்திருந்தார்.
"வனங்கள் குறித்து பலரும் அதிகம் அறியாததால், அறிவியல் இலக்கியம் மூலம் அதுகுறித்த விழிப்புணர்வு தரலாம் என்ற நம்பிக்கை
முயற்சி இது" என்று புன்னகைக்கும் ராம்கி - சேகர் இருவருக்கும் சூழலியலில் உயிரியலாளர் டாக்டர்.உல்லாஸ்
காரந்த் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷன்.
இணையதளத்தை ஸ்பான்ஸர்ஷிப் மூலம் உருவாக்குவதுதான்
இருவரின் பிளான். ஆனால் கமர்ஷியல் புயலில் லட்சியம்
பப்படம் ஆகிவிடும் என்ற பயத்தில் இருவருமே தங்கள் கையிருப்பை செலவழித்து கன்சர்வேஷன்
இந்தியா தளத்தை தொடங்கியுள்ளனர். "இத்தளத்திற்கென தனி ஊழியர்கள்,
சொத்துக்கள் கிடையாது. தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் விஷயங்களை நானும், தளத்தின் செய்திகளுக்கு
சேகரும் பொறுப்பு." என அழகாய் புன்னகைத்தபடி பேசுகிறார்
சூழலியலாளர் ராம்கி.
தற்போது கன்சர்வேஷன் தளத்தை விசிட் செய்யும்
பார்வையாளர்களின் எண்ணிகை 60 ஆயிரம். சராசரியாக
இதுவரை இத்தளத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன்.
"நம்பிக்கையான தரமான செய்திகள்தான் எங்கள் சொத்து. சேகரின் பங்கேற்பில் ஆழமான விரிவான கட்டுரைகள், செய்தித்
தொகுப்பு இவையே கன்சர்வேஷன் இந்தியா ஜெயிக்க காரணம்" நெகிழ்வாக
பேசுகிறார் ராம்கி.
"சூழலியலாளர்கள் பலரும் எங்களுடன் பணியாற்ற விரும்பினாலும் ஆர்வமுள்ளவர்களையே
நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். ஏனெனில் வனத்தின் நலன் என்பது ராம்கி-சேகர் என இருவரின் தனிப்பட்ட நலன் அல்ல." தீர்க்கமாக
விளக்கி பேசுகிறார் சேகர். கன்சர்வேஷன் தளத்தின் வசீகர செய்தித்
தொகுப்பிற்கு காரணமான சேகர், சென்னையில் மிடில்கிளாஸ் குடும்ப
வாரிசு. பள்ளிப்படிப்பை கடந்த புத்தக வாசிப்பு குடும்ப சொத்து.
தன் பத்து வயதில் சகோதரி கொடுத்த ஜெரால்டு டூரல்லின்
Rosie is my relative' என்ற நூலில் சிறு ஊற்றாக தொடங்கிய வாசிப்பு பனிரெண்டு
வயதில் பிரிட்டிஷ் கவுன்சிலில் உறுப்பினராக வைத்தது. ஜிம்கார்பெட்,
ஜேன் குட்ஆல், சலீம் அலி ஆகியோரின் நூல்களை விறுவிறுவென
படித்துமுடித்தவர், அடுத்த ஆண்டே பாம்பு பூங்காவில் தன்னார்வலராக
சேரமுடியுமா என தீவிர ஆர்வக்கோளாறில் அதன் இயக்குநர் விட்டேகரிடம் பர்மிஷன் கேட்டுவிட்டார்.
முதலில் அனுமதி மறுத்த விட்டேகர் சேகரின் ஆர்வத்திற்கு இணங்க,
பாம்பு பூங்கா பணி முழுநேரமும் பள்ளி பார்ட் டைமுமாக மாறியது.
லயோலா கல்லூரியில் படிக்கும்போது இருளர்களோடு காடுகளில் அலைந்து திரிந்து
பல்வேறு உயிரிகளைப் பற்றி கசடறக் கற்றது வாழ்வின் முக்கிய நிகழ்வு.
அப்போது பாம்பு பூங்காவை படம் எடுக்க அமெரிக்காவிலிருந்து
வந்த ஆவணப்பட இயக்குநர்களான ஜான் மற்றும் லூயிஸ் ஆகியோரின் உதவியாளராக பணிபுரிந்து
ஆவணப்பட நுணுக்கங்களை துலக்கமாக கற்ற சேகர், விட்டேகருடன்
இணைந்து ஈகோ மீடியா நிறுவனத்தை தொடங்கி Sanctuary asia என்ற இதழுக்கு
முதல் அசைன்மெண்டை தூளாக செய்தார். அதில் கிடைத்த புகழால்,
டிஸ்கவரி, நேஷ்னல் ஜியோகிராபி உள்ளிட்ட டிவி சேனல்களின்
படவாய்ப்பு காலிங்பெல் அடிக்க, 2010 இல் உலகறிந்த ஆவணப்பட இயக்குநரின்
பெயர் சேகர் தத்தாரியா.
"எனது லட்சியத்தில் நான் ஜெயித்ததோடு,
புகழ், பணம் போனஸாக கிடைத்தது என்றாலும் வனத்தை
பாதுகாக்க இவை அமீபா அளவும் பயன்படவில்லை என்ற அதிருப்தி நெஞ்சில் குறையவேயில்லை."
என்கிறார் சேகர். அதன்பிறகு செலக்டிவாக பணிகளை
ஏற்று செய்த சேகர், பெங்களூரைச் சேர்ந்த வைல்டுலைஃப் ஃபர்ஸ்ட்
என்ற சூழலியல் அமைப்புக்காக Mindless Mining:the tragedy of Kudremukh என்ற ஆவணப்படத்தை எடுத்தார்.
அமைப்பினரை பெரிதாக ஈர்க்காவிட்டாலும் கன்சர்வேஷன் தளத்தில் பதிவிடப்பட்ட
அப்படத்தின் மூலம் குட்ரேமுக்கிலுள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை உச்சநீதிமன்றம் மூட
உத்தரவிட்டது சேகரின் டாகுமெண்ட்ரி திறமைக்கு சூப்பர் சாம்பிள்.
ராம்கி- சேகரின் பணிகளில் முக்கியமானது
நாகலாந்தில் ஃபால்கன் பறவைகளின் அழிவை கட்டுப்படுத்த உழைத்ததுதான். "ராம்கி-சேகர் முயற்சிகளால் ஃபால்கள் பறவைகள் கொல்லப்படுவதை
பற்றிய விழிப்புணர்வு உருவானது" என்கிறார் சூழலியலாளரான
பானு ஹராலு. "வனப்பாதுகாப்பு மற்றும் மேம்பாடுகளுக்கு உரமே
செயல்பாடுகள்தான். உங்களின் விருப்ப விலங்குகள் கொல்லப்படுவதை,
வேட்டையாடப்படுவதை தினசரி பார்த்தால்தான் தீர்வுகளை தேட முடியும்.
காடுகளை பாதுகாக்கும் போரில் இங்கு தினசரி நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் ஜெயிக்கவில்லை என்றாலும் இப்பணிகளால் ஊக்கம்பெற்ற மற்றொருவர்
அதனைச் செய்வார் என்று முன்னகர்வதே இன்று நம்முன் உள்ள ஒரே நம்பிக்கை"
என உறுதியோடு கோரஸாக பேசுகிறார்கள் நண்பர்களான ராம்கி-சேகர். பசுமைத் தோழமை வெல்லும்!
பச்சை உடுத்திய காடு!
காற்றிலுள்ள கார்பன்- 103 மில்லியன்
டன்கள்
இந்திய சட்டத்தின்படி - 3 இல்
1 பங்கு காடு(அடர்த்தியான காடு 2.61%, அடர்த்தியற்றவை -9.59%, திறந்தவெளி காடு
-9.14%)
அடர்த்தியான காடு - மிசோராம்(88.93%),
அந்தமான்(1,930 கி.மீ),
உ.பி(572கி.மீ), தமிழ்நாடு(100 கி.மீ)
இயற்கை பேரழிவு!
காடுகளின் இழப்பு -
2,510 ச.கி.மீ(2013)
இழப்பில் முன்னணி - காஷ்மீர், உத்தரகாண்ட், மேகாலயா,
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா,
அருணாச்சல பிரதேசம்.
குடியிருப்பாக மாறிய காடுகள் -
2,254 ச.கி.மீ.
(The India
State Forest Report 2015தகவல்படி)
தொகுப்பு: பெல்லம் தேவி, சுப்ரீம் முரளி
நன்றி: குங்குமம் வார இதழ்