பெண்நீதிபதிகள் தேவை!- ச.அன்பரசு


நீதிபதி பானுமதி


நீதிபதிகள் நியமனத்தில் பாலின தீண்டாமை - 67 ஆண்டுகளாக தொடரும் வேதனை - .அன்பரசு

அண்மையில் இஸ்லாமிய பெண்களின் வாழ்வைக் காப்பாற்றும் விதமாக தலாக் தீர்ப்பு வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. 5 நீதிபதிகள் கொண்ட பென்ச் வரலாற்று புகழ்மிக்க தீர்ப்பை வழங்கி முத்திரை பதித்தது. இதில் தீர்ப்பளித்த  வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவரும் ஆண்கள் என்பதோடு, இதில் ஒரு பெண் நீதிபதிகூட இல்லை என்பது மக்கள் பலரும் கவனிக்க மறந்துவிட்ட சோகம்.

ஆதார் பிரைவசி விவகாரத்தில் தீர்ப்பளித்த 9 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவிலும் பெண் நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் மக்களுக்கு சமத்துவ சகோதரத்துவம் போதிக்கும் நீதித்துறையிலும் பாலின தீண்டாமை நிலவுகிறதோ என்ற சந்தேகத்தை இச்சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தியுள்ளன. ஆம் என தலையசைக்கும்படிதான் இதுவரையிலுமான உச்சநீதிமன்ற வரலாறு அமைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு 229 நீதிபதிகள் பணியமர்த்தப்பட்ட போது அதில் பெண்களின் எண்ணிக்கை 5. அதற்குப் பிறகு அடுத்த பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி இருக்கையில் அமர 39 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1989 ஆம் ஆண்டு அப்படி தேர்வானவர்தான் பாத்திமா பீவி. அடுத்து 7 ஆண்டுகள் கழித்து சுஜாதா வி மனோகர் என 23 ஆண்டுகளில் வெறும் 4 பெண் நீதிபதிகள் உருவாகியுள்ளனர். ஏன் இன்றைய 25 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா? ஆர்.பானுமதி என்ற ஒரேஒரு பெண் நீதிபதிதான். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு பின்னர் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக முன்னேறிய பெண்மணி இவர். 2012 டிசம்பர் 16 அன்று நிகழ்ந்த நிர்பயா விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் பென்ச்சில் இவரும் ஒருவர்.

"பெண்களின் வாழ்வை பாதிக்கும்படியான வழக்கை விசாரிக்க கூட பெண் நீதிபதிகளுக்கு அனுமதியில்லை என்பது நமது நீதித்துறையின் தனித்துயரம்" என்று விரக்தியான குரலில் பேசுகிறார் மூத்த வழக்குரைஞரான ரெபெக்கா ஜான். உச்சநீதிமன்றம் முன்னமே நீதிபதிகளின் எண்ணிக்கையை 31 ஆக அதிகரிக்க பரிந்துரைத்தும் இன்றுவரை நீதிபதிகளின் எண்ணிக்கை 25 யைத் தாண்டவில்லை. 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், நீதிபதிக்கான பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசியலமைப்பு குழுவிடம் மனு அனுப்பியது. இதில் பொது மற்றும் தனியார் அமைப்புகளில் பெண்களை பங்கேற்ற அனுமதிக்கும் சட்டத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர் எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

 "கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகளிலும் கூட  பெண்கள் யாருமில்லை. டெல்லியைச் சேர்ந்த நீதிபதியான ஜி.ரோகிணி, மும்பையைச் சேர்ந்த மஞ்சுளா செல்லூர் ஆகியோர் தகுதியிருந்தும் இப்பணிக்கு பரிசீலனைகூட செய்யப்படவில்லை எனில் இதற்கு ஒரே காரணம், பாலினத்தீண்டாமைதான்" என தனது ஆவேசமாக அவசிய உண்மைகளை உடைத்துப் பேசுகிறார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான பிரபாதேவன்.
சூப்பர் சிக்ஸ் நீதிபதிகள்!

பாத்திமா பீவி(1989-92)

கடவுளின் தேசமான கேரளாவில் பிறந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றம் உருவாகி 39 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. 1983 இல் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர், நீதிபதியாக தனது பயணத்தை தொடங்கியவர் 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டின் ஆளுநராக(1997-2001) பதவி வகித்தவர், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வராக நீடிப்பது குறித்த கடுமையான ஆட்சேபம் தெரிவித்த தில் பெண்மணி பாத்திமா பீவி.

சுஜாதா வி மனோகர்(1994-1999)

மும்பையில் பிறந்த சுஜாதா வி மனோகர் மும்பை உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி. 20 ஆண்டுகள் கீழ்கோர்ட்டுகளில் வழக்குரைஞராக பணியாற்றியவர், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான விசாகா எனும் பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்தளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் இடம்பெற்ற புரட்சிகர நீதிபதி சுஜாதா வி மனோகர்.

ரூமா பால்(2000-2006)

பணி ஓய்வுவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக தளர்வறியாது பணியாற்றிய ரூமா பால், மனித உரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை அளித்தவர். 1990 ஆம் ஆண்டு கொல்கத்தா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றவர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழலை கடுமையாக விமர்சித்த மூன்றுபேர் கொண்ட கொலோஜியம் நீதிபதிகளின் குழுவின் நீதியின் குரல் இவருடையது.

கியான் சுதா மிஸ்ரா

கீழ்கோர்ட்டில் 4 ஆண்டுகளும் ஜார்கண்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2 ஆண்டுகளும் பணியாற்றிய தளர்வறியாத நீதிபதி சுதா மிஸ்ரா. பாட்னா, ராஜஸ்தான் ஹைகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி சுதா மிஸ்ரா, கிரிக்கெட் வாரியத்தின் நாராயணஸ்வாமினிவாசன் ஊழல்வழக்கு, அருணா ஷான்பெக்கின் பாலியன் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்த பெருமைக்குரியவர். கோர்ட்டுக்கு ஆல்டைம் தாமதமாக வருவது இவர்மீதான ஒரே குறை.

ரஞ்சனா பிரகாஷ் தேசாய்(2011-2014)

க்ரைம் வழக்குகளில் கில்லி என்பதால் 1986 ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக பணியாற்றத்தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பிற்கு மரணதண்டனை விதித்த நீதிபதிகளில் இவரும் ஒருவர். ஜாமீன் இல்லாத குற்றங்களுக்கு எஃப்ஐஆரை பதிவுசெய்வது, நோட்டா வழக்கு ஆகியவற்றில் முக்கியமான தீர்ப்பளித்த நீதிபதி. பெண்களுக்கான தனி நீதிபதிக்குழுவை தொடங்கிய புதுமை பெண்மணி.
ஆர்.பானுமதி(2014-)

தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒரே பெண் நீதிபதி. மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பானுமதி, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்தவர். 2003 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டில் பாதுகாப்பு விதிகளை வகுத்தளித்த பெருமைக்குரியவர் என்பதோடு, நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்த பெருமைக்குரியவர். சட்டவிதிகளை கறாராக கடைப்பிடிக்கும் நீதிபதி பானுமதி.


கோர்ட் வரலாறு!
இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை 24. உயர்நீதிமன்றத்தில் கீழே சிவில், குற்றவியல், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு வகை நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. அரசியலமைப்புச்சட்டம் பகுதி 6 அத்தியாயம் 5, ஆர்ட்டிகிள் 214 படி உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதி, மாநில ஆளுநர் ஆகியோரின் வழிகாட்டுதல் ஆலோசனைப்படி உயர்நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். நீதிமன்றத்திற்கான நீதிபதி நியமனம் என்பது அந்நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவாகும் வழக்குகளைப் பொறுத்ததே. சென்னை,மும்பை, கொல்கத்தா, அலகாபாத் ஆகியவை தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் மிக பழைமையான 4 உயர்நீதிமன்றங்களாகும்.


நீதிபதிகள் தேவை!

இந்தியா முழுக்க தேங்கியுள்ள வழக்குகள் - 2.8 கோடி வழக்குகள்
கிடப்பிலுள்ள வழக்குகளை விசாரிக்க தேவை(2 ஆண்டு) -20,312
கிடப்பிலுள்ள வழக்குகளை தீர்க்க தேவை - 24,839
சட்டகமிஷன்/சிஜேஐ பரிந்துரைப்படி தேவை - 60,476
இந்தியா முழுக்க தேவையான நீதிபதி பணியிடங்கள் - 60,000. கீழ்நீதிமன்றம் - 16,119, உயர்நீதிமன்றம் - 598, உச்சநீதிமன்றம் -26)
 (Vidhi research 2016,Court News 2016, Indian Judiciary Annual Report 2015-2016’ தகவல்படி)


 நன்றி: குங்குமம் வார இதழ்
    

    



பிரபலமான இடுகைகள்