தலைவன் இவன் ஒருவன்! -பகதூர் ராம்ஸி
தலைவன் இவன் ஒருவன் 1
டோனெல் பைர்ட்
"நம்முடைய குழந்தைகளை நோயில் தள்ளுவதே நாம்
வாழும் பழைய இந்த வீடுகள்தான்" என பரபரவென பேசும் மாற்றத்தின்
தலைமகனான டோனெல் பைர்ட் மோசமான சூழல் கொண்ட நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் ஒற்றை
படுக்கை வீட்டில் வளர்ந்தவர். கயானாவில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களால்
அமெரிக்காவுக்கு கிளம்பி அகதிகளாக வந்தவர்கள்தான் டோனெல்லின் பெற்றோர்கள்.
2013 ஆம் ஆண்டு சூழலினை பாதிக்காத வகையில் காற்றோட்டமும்
ஆற்றலை சேமிக்கும் வகையில் வீடுகளை ஏழைமக்களுக்கு குறைந்தவிலையில் கட்டித்தரும்
BlocPower எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் டோனெல் பைர்ட்.
இந்த திட்டத்தை தொடங்க காரணமே பால்யத்தில் இவர் சிறிய வீட்டில் வசிக்க
நேர்ந்த துயரம்தான்.
"நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் நாங்கள்
வாழ்ந்த இடம் நெருக்கடியானது. வீட்டில் சமையல் செய்தால் அந்த
வெப்பம் எளிதில் வெளியே போகும் வசதி கூட இல்லை. என்னுடைய
6 வயதில் தெருவிலிருந்த கடையில் மிட்டாய் வாங்கிக்கொண்டு வந்தபோதுதான்
ஒரு இளைஞர், மற்றொருவரை தலையில் துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்து
ஷாக்கானேன். கிடுகிடுவென கைகளில் தொடங்கிய நடுக்கம் உடல் முழுக்கவும
பரவ வீட்டுக்கு தலைதெறிக்க ஓடிவிட்டேன். அடுத்தநாள் அந்த இடத்தை
விட்டு எங்கள் அம்மா எங்களை கூட்டிப்போய்விட்டார். பலநாட்களுக்கு
பிறகுதான் தெரிந்தது, அவரும் நான் பார்த்தது போன்ற ஒரு காட்சியை
பார்த்திருக்கிறார் என்று" என்ற தன் சிறுவயது நினைவுகளைக்
குறித்து பரவசமாக பேசுகிறார் டோனெல் பைர்ட்.
டோனெல்லின் பெற்றோர் விவகாரத்து பெற்றவர்கள் என்பதால், இவர் தன் அம்மாவோடு அட்லாண்டாவில் வசிக்கத் தொடங்கினார். பள்ளிப்படிப்பை உதவித்தொகை பெற்று படித்தவர், பின் ட்யூக்
பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக வெளியே வந்தார்.
"நான் வளர்ந்த ப்ரூக்ளின் நகரத்தின் சூழல்
குழந்தைகளுக்கு உளவியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிஜம். பின்னாளில் கல்லூரிகளில் கம்யூனிட்டி ஆர்கனைசராக ஆர்வத்துடன் செயல்பட்டேன்.எங்கள் பகுதி சிறுவர்களிடையே எனக்கு கிடைத்த சில அரிய வாய்ப்புகள் என்னை உங்கள்
முன் நிறுத்தியிருக்கின்றன. எனவே சமூகத்திற்கு என்னுடைய பங்கை
திருப்பி செலுத்த நினைத்தேன்" என தன்னுடைய நிறுவனம் தொடங்குவதற்கான
உந்துதல்களை விரிவாக பேசுகிறார் டோனெல் பைர்ட். அப்படி பிறந்த
ஸ்டார்ட்அப் ஐடியாதான் பிளாக்பவர் கட்டுமான நிறுவனம். ஓப்பன்
சயின்ஸ் இன்ஸ்டிடியூட், எகோயிங் க்ரீன் ஆகிய நிறுவனங்களின் உதவித்தொகைகளைப்
பெற்று இன்று 70 ஆயிரம் டாலர்கள் லாபத்தோடும் பகுதிநேர ஊழியர்களின்
ஆதரவிலும் செயல்பட்டு வருகிறது பிளாக்பவர் நிறுவனம்.
"நாங்கள் கட்டித்தரும் வீடுகள் மூலம் கார்பன்
வெளியீடு மிக குறைவு. வீடுகளில் உருவாகும் வெப்பத்தை குறைத்தாலே,
எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கி ஓட்டுவதை விட சூழலுக்கு நிறைய நன்மைகளைச்
செய்ய முடியும்" என நம்பிக்கை பெருக பேசும் டோனெல் பைர்டின்
தலைமையில், பிளாக் பவர் நிறுவனம் சிகாகோ, பிலடெல்பியா, அட்லாண்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ
500 க்கும் மேலான பசுமை கட்டிடங்களைக் கட்டியுள்ளது.
பிளாக்பவர் கட்டும் கட்டிடங்கள் அப்படி என்ன புதுசு? கட்டிடங்களை ஆற்றலை சேமிக்கும் விதத்தில் உருவாக்குவது, அல்லது கட்டிய வீட்டில் பெருமளவு ஆற்றலை மிச்சம் செய்யும்படி பொருட்களை அமைப்பதே
இந்நிறுவனத்தின் சக்சஸ் மந்திரம்.2010 ஆம் ஆண்டு வாஷிங்டனில்
2.5 மில்லியன் டாலர் செலவில் உருவான 400 வீடுகளை
கட்டுவதில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு தன் ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறார்.
அதோடு தம் ப்ரூக்ளின் பகுதியிலுள்ள வேலையற்ற 20 நபர்களுக்கும் இவ்வகையில் வேலைவாய்ப்பை அளித்து, இதில்
ட்ரெய்னிகளாக பணிபுரியும் மக்களுக்கு உதவித்தொகையையும் கொடுத்திருப்பது இவரின் தனித்துவம்.
"பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் இப்பகுதிகளில்
அதிகம். தம் வீட்டைவிட ஜெயிலில்தான் இவர்களை அதிகம் பார்க்க முடியும்.
இப்படி க்ரைம் வரலாறு கொண்டவர்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?
இவர்களின் மீதமிருக்கும் வாழ்க்கையை நினைத்தாலே கவலையாக இருக்கிறது"
என கவலையோடு பேசுகிறார் டோனெல் பைர்ட்.
பள்ளி, நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள் என அனைத்தையும் ஆராய்ந்து குறிப்பிட்ட பட்ஜெட்டில் பசுமை
வீடுகளை உருவாக்குவதோடு, பலருக்கும் வேலைவாய்ப்பினையும் உருவாக்கித்தந்து
மக்களுக்கு ஏணியாக உதவும் டோனெல் பைர்ட் நம்மில் ஒருவர்தான்.
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: ஆல்பிரட் கெய்சர்