இது மனித டிஎன்ஏ பேக்! -தொகுப்பு: குருஜி
டிஎன்ஏ கோட் |
இது மனித டிஎன்ஏ பேக்! -தொகுப்பு: குருஜி
முதலை, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை
கொன்று அதனை உடைகள் மற்றும் பெல்ட்டுகளாக வடிவமைத்து அணிவதற்கு உலகெங்கும் எதிர்ப்பு
வலுத்து வருகிறது. மேலும் வணிகத்திற்கான உயிரினங்களை அழிப்பது
இயற்கை சூழலுக்கு மீள முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆசிரியரின் டிஎன்ஏ மூலம் பேக் ஒன்றை தயாரித்து
அதிர வைத்துள்ளார். மனித தோலில் பைகளை தயாரிப்பது சரியா தவறா
என்பது தாண்டி இது எப்படி சாத்தியம் பார்ப்போமா?
1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்ட்ரல் செயின்ட் மார்டின் எனும் கலைக்கல்லூரியில்
ஆடை வடிவமைப்புத்துறையில் புகழ்பெற்ற ஆசிரியர்களில் ஒருவரான அலெக்ஸாண்டர்
மெக்வீன், 2000 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவரது மாணவி டினா கோர்ஜாங்க், மெக்வீனுக்கு அஞ்சலி
செலுத்தி பொக்கே வைத்துவிட்டு சென்றுவிடவில்லை. அவரை உலகமே நினைவில்
வைத்திருக்கும்படி ஒரு காரியத்தை தில்லாக செய்திருக்கிறார். மெக்வீனின்
தலைமுடியை அவரது உறவினர்களிடம் பெற்று டிஎன்ஏ மூலம் அவரின் தோல் உள்ளிட்டவற்றை ஆய்வகத்தில்
வளர்த்து பேக் செய்யும் திட்டத்தை தற்போது செயல்படுத்தியே விட்டார்.
ஐடியா தோன்றியது
எப்படி?
முதலில் தனது பட்டயப்படிப்பிற்கான புரொஜெக்டிற்காக
பன்றியின் தோலின் மூலம் ஆடைகள் மற்றும் பேக்குகள் தயாரிப்பதுதான் டினா திட்டம். அதை செய்து
பார்த்த நம்பிக்கையில் தனது ஆசிரியரான மெக்வீனின் டிஎன்ஏவை இம்முறையில் பயன்படுத்தலாம்
என்ற சின்ன ஸ்பார்க் தோன்ற அதற்கான முயற்சியில் இறங்கினார்.
இதற்கு டி-எக்டின்க்சன்
எனும் நுட்பம்(அழியும் நிலையிலுள்ள உயிரிகளை இனப்பெருக்க பயன்படுவது)
மூலம் உயிரியல் நீர்மத்தை முடி
மீது செலுத்தி மரபு தொடர்பான விவரங்களை சேகரிக்கமுடியும். முடி சரியாக பதப்படுத்தப்பட்டிருந்தால் அவரின் தோல்,
நிறம் குறித்த தகவல்களை மிகத்துல்லியமாக பெற முடியும். டிஎன்ஏ மூலம் கிடைத்த விவரங்களை கொண்டு செல்களை சில குறிப்பிட்ட முறைகளின்
மூலம் ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கலாம். பதப்படுத்தப்பட்ட தோலாக
இதனை மாற்ற கடுமையான வெப்பத்தை தோலில் செலுத்தி அதில் உள்ள உயிர் செல்களை அழிக்க வேண்டும்.
இம்முறையில் பதப்படுத்தப்பட்ட தோலில் எந்த உயிரியல் தகவலையும் அறிய முடியாது.
அதில் உள்ள செல்கள் உயிருடன்
இல்லை என்பதுதான் காரணம். பயோ பிரிண்ட் முறையில் இந்த சிக்கலை
தீர்க்கலாம் என்றாலும் அது அதிக செலவு பிடிக்கும் செய்முறை என விரிவாக விளக்குகிறார்
டினா கோர்ஜாங்க்.
தோலின் செல்கள் ஆய்வகத்தில் வளர்க்கலாம்
என்றாலும்,
அப்படியே நமது தோல் போல இருக்காது. ஆய்வகத்தில தோலின் இரு அடுக்குகளை மட்டுமே வளர்க்கப்படுகிறது.
செல்களை பழுப்பு நிறமாக்கி வண்ணம் சேர்க்கும்போதுதான் உண்மையில் பதப்படுத்தப்பட்ட
தோலாகிறது.
ஈசலாய் எழும் கேள்விகள்
மனிதனின் தோலின் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள்
என்ற வகையில் டினாவின் கிரியேஷனுக்கு உலகெங்கும் சர்ச்சைகள் சுழன்றடித்தாலும் மனுசி
அசரவேயில்லை.
உயிரியல் துறையில் முக்கியமான தகவல்கள் தொழில்நுட்பத்தின் மூலம் வெளியாகின்றன
அதனை சட்டம் ஏன் தடுக்கவில்லை எனும் கேள்வியை முன்வைக்கும் படைப்புதான் இது என கடுகாய்
பொரியும் டினா தன்னுடைய டிஎன்ஏ பேக்குக்காக காப்புரிமை விண்ணப்பித்திருக்கிறார்.
வணிகம் தவிர்த்து மரபுரீதியான தகவல்களை காப்புரிமை செய்வதோடு அதனை எப்படி
சாத்தியமான வகையில் பயன்படுத்தமுடியும் என்று ஆராய்ந்து வருகிறார்.
தனது ஆசிரியரின் டிஎன்ஏவைப் பயன்படுத்த காரணம்
அவர் இத்துறையில் புகழ்பெற்ற ஒருவர் என்பதோடு அவரின் உயிரியல் சார்ந்த தகவல்களும் பாதுகாக்கப்படவேண்டும். என்பதால்தான் என அக்கறையோடு பேசும்
டினாவிடம், மனித தோலில் பைகள், ஆடைகள் செய்வது
சரியானதுதானா? என்றால் நீங்கள் இதனை சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த தோலினை பயன்படுத்துவதால் விலங்குகளை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இது மனிதர்களை துன்புறுத்தி பெறப்படுவதல்ல. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு பெறப்படுவதுதான். இதைக் குற்றம்
என்றால் விலங்குகளின் தோலினால் ஆன பொருட்களை பலரும் தினசரி பயன்படுத்திக் கொண்டுதானே
இருக்கிறார்கள்? என எக்ஸ்ட்ரீம் சூடாகிறார்.
சரி, பைகளை செய்தாயிற்று. இதனை எப்படி பராமரிப்பது என்று கேட்டபோது, பதப்படுத்தாத
மனித தோல், விலங்குகளின் தோல் போல வெயிலுக்கு தாங்காது கறுத்துவிடும்.
அதனைத் தவிர்க்க லோஷன் தடவி பாதுகாக்கவேண்டும் என்னும் டினா, டிஎன்ஏ தோலில் டாட்டூக்கள்,
கருப்பு வெளுப்பான இடங்களையும் உருவாக்க முடியும் என திகைப்பு பிளஸ்
ஆச்சரியம் தருகிறார். சரி உலகையே கவனிக்க வைக்கும் இந்த தில்லுக்குத்தானே
துட்டு கிடைக்கும். தோலுக்காக
விலங்குகளை கொல்லக்கூடாது என பகீர் விளம்பரங்களை உருவாக்கும் பீட்டா அமைப்புகள் இதற்கு
என்ன சொல்லப்போகிறதோ? என்பதுதான் நமது கவலை.
நன்றி:
-ச.அன்பரசு