ஆல் நியூ அறிவியல் - கா.சி.வின்சென்ட்





ஆல் நியூ அறிவியல் - கா.சி.வின்சென்ட் 


உலகின் முதல் ஹோலோகிராம் போன்!

டிஜிடல் கேமரா தயாரிப்பாளரான ரெட் விரைவில் ஹோலோகிராம் முறையில் இயங்கும் தனது ஹைட்ரஜன் ஒன் என்ற போனை வெளியிட ரெடியாக உள்ளது.


ரெட்டினா டிஸ்ப்ளே திரை கொண்டுள்ள ஹைட்ரஜன் ஒன் செல்போன், 2டி உருவங்களை 3டி முறையில் மாற்றும் திறன் கொண்டது என அதிரடியாக அறிவித்துள்ளது ரெட் நிறுவனம். இதில் ஸ்பெஷல், ஹோலோகிராம் உருவங்களை காண நாம் எந்த கண்ணாடியையும், ஹெட்செட்டையும் அணிய வேண்டியதில்லை என்பதுதான். 5.7 இன்ச் திரையளவு கொண்ட ஆண்ட்ராய்டு போன் ஹைட்ரஜன் ஒன். 2018 இல் ரிலீசாகும் இதன் விலை     1,02,770.


சீன சிறுவர்களை தாக்கும் நீலச்சுறா!-விக்டர் காமெஸி

ஆன்லைனில் உலகை சூறாவளியாக தாக்கிய தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் ப்ளூவேல் என்ற கேமைத் தொடர்ந்து தற்போது பரவி வரும் புது கேமில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் போக்கு ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது.

தற்போது சோஷியல் தளங்களில் உதடு, கால் உள்ளிட்ட இடங்களில் தோலில் நூலால் எம்ப்ராய்டரி செய்து ரத்தம் சொட்ட சொட்ட அதனை போட்டோ எடுத்து போடுவதுதான் புதிய ட்ரெண்ட். இதன் முன்னோடியான ப்ளூவேல் என்ற தற்கொலை விளையாட்டினால் ரஷ்யாவில் பறிபோன உயிர்கள் மட்டும் 130 என்பது நிலைமையின் தீவிரத்தை உங்களுக்கு சொல்லும்.

இதுதொடர்பாக உடலில் பல்வேறு உருவங்களை நூலால் எம்ப்ராய்டரி செய்யச்சொல்லி வற்புறுத்திய மனிதர் ஒருவரை சீனா காவல்துறை கைது செய்துள்ளது. ப்ளூவேல் என்ற கேமின் அடிப்படையும் இதுதான். அதில் அந்த கேமின் ரூல், தினசரி ஒரு டாஸ்க் என்பதுதான். 49 நாட்கள் தினசரி ஒரு டாஸ்க் என செல்லும் விளையாட்டு 50 ஆவது நாள் அன்றைய டாஸ்க்காக கேட்பது விளையாடுபவரின் உயிரை மட்டுமே. டாஸ்கை சவாலாக எடுத்துக்கொண்டு முடிப்பவர்கள் மெல்ல அதில் ஆழ்ந்து உலகையே மறந்திருப்பார்கள். அ்ந்நிலையில் 50 நாள் டாஸ்க்கையும் செவ்வனே நிறைவேற்றி உயிரை விட்ட பலநூறுபேர்தான் ப்ளூவேல் ஆபத்தை உலகுக்கு உணர்த்தினார்கள். இது தொடர்பாக தற்கொலைக்குத் தூண்டியவர் கூறியது "அவர்கள் உயிரியல் கழிவுகள், தன் இறப்பை கொண்டாடியவர்கள்" என பகீர் பதில் சொல்லி திகில் கூட்டியிருக்கிறார். அந்த இளைஞரின் வயது 21 தான்.

தொன்மை ரோம் மிஸ்ட்ரி!

தொன்மையான ரோமின் கான்க்ரீட் கற்கள் குறித்த 2000 ஆண்டுகால மர்மத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்து குழப்பத்திலிருந்து நம்மை கரைசேர்த்துள்ளனர்.

ரோமின் கடற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவர்கள் கடல்நீரினால் பல்வேறு வேதியியல் விளைவுகளுக்கும் ஆட்பட்டாலும் இன்றும் சிதைவுக்குள்ளாகாமல் இருப்பது குறித்த ஆராய்ச்சிதான் அந்த மிஸ்ட்ரி. எரிமலை சாம்பல், எலுமிச்சை, கடல்நீர் மற்றும் அலுமினியம் டோபர்மோரைட் ஆகியவற்றை கலந்து கட்டியிருப்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். "இன்றைய சிமெண்ட் சேர்ந்த கான்க்ரீட்டுகளை விட பாறை போன்ற உறுதியான வகையில் கட்டி கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்களை கூடுதலாகப் பெற்று கட்டிடத்தில் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திருக்கிறார்கள்" என ஆச்சரியம் மாறாமல் பேசுகிறார் உடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியா ஜாக்சன். தற்போதைய சிமெண்ட் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகளவு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. ஆனால் ரோமில் எரிமலை சாம்பல் பயன்படுத்தப்பட்டிருப்பது சூழலை பாதிக்காதது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

"ரோமானியர்களுக்கு இயற்கையின் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்று கட்டிடங்களை பெருமளவு கட்டுவதற்கு நாம் எரிமலைச்சாம்பலை நம்ப முடியாது. அதைப்போன்ற மாற்றைத்தான் தேடவேண்டும்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜாக்சன். ரோம் சுவரையொத்த கான்க்ரீட்டை உருவாக்கினால் அதைப்போல அதிக காலம் வராவிட்டாலும் 120 ஆண்டுகள் ஆயுள் உண்டுதான்.


அமெரிக்காவின் உண்மையான  சுதந்திரதினம் எது?

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4, வடகொரியா ஏவிய ஏவுகணை குறித்த பயத்தோடு எப்படியோ கழிந்துவிட்டது. ஆனால் அமெரிக்க சுதந்திரதினம் என்பது ஜூலை 4 என்பது நிஜமா? 1776 ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தருணத்தில் எதிர்கால அதிபரான ஜான் ஆடம்ஸ், "இத்தருணத்தை எதிர்காலத்தில் பல்வேறு வாண வேடிக்கைகளோடு கொண்டாடுவார்கள்" என்று கூறினார்.

ஆனால் ஜூலை 4 ஏன்? ஜூலை 2 சுதந்திரதினம் என்று முன்னர் கூறினாலும் அன்று அனைத்து மாநிலங்களும் அமெரிக்காவோடு இணைய கையெழுத்திடவில்லை. சுதந்திரம் வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு முறையாக வழங்கப்பட்ட நாள் ஜூலை 4, 1776தான். ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜெஃபர்ஸன் உள்ளிட்ட அமெரிக்க அதிபர்கள் இறந்ததும் கூட ஜூலை 4, 1826 தேதியில்தான். ஜூலை 4 டாப்பில் அமர்ந்ததற்கான காரணம் இதுதான்.


தடுப்பு மருந்தை தகர்க்கும் கொனேரியா வைரஸ்!

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் சிறுநீர்ப்பாதை, யோனி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் கொனேரியா நோய்க்கிருமி வேகமாக பரவி வருகிறது என WHO எச்சரித்துள்ளது.

உடலுறவு மூலம் பரவும் கொனோரியா(மேகவெட்டை நோய்) ஆன்டிபயாடிக் மருந்துகளையும் வீழ்த்தி வேகமாக முன்னேறி வருகிறது. இதுவரையில் இவ்வகையில் 3 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 2014 ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் கொனேரியா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரம். உலகில் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 78 மில்லியன். பெரும்பாலான நோயாளிகளின் வயது 25. உலகம் முழுவதும் WHO நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் 50 நாடுகளில் இந்நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் செயல்படவில்லை என்பதுதான் பயம் தரும் செய்தி. இந்நோய் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும்போது பார்வையிழப்பையும் ஏற்படுத்தும்.


இன்ஸோம்னியா ஏற்படுத்தும் 7 ஜீன்கள்!

இன்ஸோம்னியா பிரச்னைக்கு மூளையில் உள்ள சிக்கல்தான் காரணம் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அதற்கு மரபியல்ரீதியிலான 7 ஜீன்கள் காரணமுண்டு என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாதிரிகளை ஆய்வு செய்து ஐரோப்பாவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். இன்ஸோம்னியா பிரச்னைகளுக்கு மூளையில் ஏற்படும் சிக்கல்களைக் கடந்து அவற்றுக்கு மரபணுக்களும் காரணமாக இருக்கலாம் என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது என்கிறார் பேராசிரியர் வான் சோமெரென். குறிப்பிட்ட மரபணுக்களில் பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றை இந்த ஏழு ஜீன்கள் கொண்டிருந்தன. 50 வயதைக் கடந்தவர்களிடம் செய்த டெஸ்டில் ஆண்கள் 24%. பெண்கள் 53% தூக்கமின்மையால் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.  


பிட்ஸ் கார்னர்!

நீங்கள் அடம்பிடித்து துருவ கரடியின் ஈரலை தின்றால், அடுத்த நொடி மரணம்தான்.ஈரலிலுள்ள அதிக வைட்டமின் ஏ இதற்கு காரணம்.

Kakapo பறவையின் இறப்புக்கு அதன் உடலிலிருந்து எழும் அதன் எதிரிகளை ஈர்க்கும் வாசனையே பெரிதும் காரணம்.  

மனிதனின் மொத்த தலைமுடியும் தாங்கும் எடை எவ்வளவு தெரியுமா? 12 டன்

ஆசியர்களுக்கு மட்டுமே கருப்பு தலைமுடி உண்டு. பிற நாட்டினருக்கு கருப்பு போல முடி தெரிந்தாலும் அது அடர் ப்ரௌன் நிறமே.

மனிதர்களின் மூக்கினால் 50 ஆயிரம் நறுமணங்களை இனம் பிரித்து துல்லியமாக அறியமுடியும்.  


நன்றி: முத்தாரம் வார இதழ்