விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்




விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்


நிறவெறி க்ளவுஸ்!

பட்டம் ஜெயித்தவுடன் உலக அழகிகள் என்ன செய்வார்கள்? உலகில் தேடிப்பிடித்து ஏழையின் குடிசைக்குள் நுழைந்து குழந்தைகளின் வாயில் பாதாம்பாலை ஊற்றி அதை போட்டோவில் கவர் செய்து கருணைமாதா ஆவது வழக்கம். இங்கும் அதே சீன்தான். என்ன? சாப்பாடு கொடுக்கும்போது க்ளவுஸ் கையில் ஏறியதால் உலக அழகியின் கௌரவம் கீழே விழுந்துவிட்டது.

மிஸ்.தென் ஆப்பிரிக்கா பியூட்டியான நெல் பீட்டர்ஸ், ஐகாகெங்க் என்ற ஹெச்ஐவி பாதிப்பு கொண்ட குழந்தைகள் மையத்திற்கு கருணை குபீரென பொங்க ஷேர் ஆட்டோ பிடித்து போனார். பெருமிதமாக உணவை குழந்தைகளுக்கு வழங்கினார். உணவுகளை பாதுகாப்பு க்ளவுஸ் அணிந்து வழங்கியதுதான் அகில உலகத்திலும் நிறவெறி சர்ச்சையாகிவிட்டது. உணவுகளை வழங்கும்போது க்ளவுஸ் அணிவது உலகவழக்கம்தானே என்ற நெல் பீட்டர்ஸின் விளக்கத்தைக் கேட்கவெல்லாம் யாரும் தயாராக இல்லை. ஏனெனில் அந்த மையத்தில் உணவு வழங்கியவர்கள் அனைவரும் அணிந்திருந்தது சாதாரண க்ளவுஸ்; ஆனால் ஆப்பிரிக்க அழகி அணிந்திருந்தது லேடக்ஸ் க்ளவுஸ் என்பதோடு, முன்னர் வெள்ளையின குழந்தைகளோடு நெல்பீட்டர்ஸ் எடுத்திருந்த பாச அணைப்பு படங்களையும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு அவரை வறுத்து எடுத்துவிட்டனர் நெட்டிசன்கள்.   

 சிவலிங்கம் செய்யும் முஸ்லீம் பெண்! -ரோனி

பல்வேறு மாநிலங்களிலும் பசு, தொழில், பிரியாணி என இந்தியர்களின் தினசரி நடவடிக்கைகள் அனைத்திலும்  மதச்சாயம் பூசப்படும் நிலையில் முஸ்லீம் பெண் ஒருவர் இந்து மதக்கடவுளான சிவனை சிலையாக செய்கிறார் என்றால் நம்புவது அரிதும் புதியதும்தானே!

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியைச் சேர்ந்த ஆலம் ஆரா என்று முஸ்லீம் பெண்மணிதான் 17 ஆண்டுகளாக சிவலிங்கத்தை தயாரித்து விற்று வருகிறார். "சிவனை உருவாக்கும் கலை இறைவன் தந்தது. இதன் மூலம் அன்பும் அமைதியும் உருவாகவேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என பரவசமாக பேசும ்ஆலம் ஆரா, இந்துவா, முஸ்லீமா என்றெல்லாம் சண்டைபோட தனக்கு நேரமில்லை என்கிறார். "நாங்கள் சாப்பிடும் உணவு சிவன் சிலைகளை தயாரிப்பதன் மூலம் கிடைக்கிறது. இச்சிலைகளை நேர்மையாக அர்ப்பணிப்பாக உருவாக்க முயற்சிக்கிறேன். இதில் பாகுபாடு எங்கே வந்தது? நாம் முதலில் இந்தியர்கள் அதன் பிறகுதான் நாம் நம்புகிற மதம் எல்லாம்" ஆலம் ஆரா பேசும் வார்த்தையின் பலத்தில்தான் இந்தியா பன்மைத்துவம் ஒளிர்கிறது.   


   
 நான் அவனில்லை!

போனில் ஏடிஎம் பின் நம்பர் கேட்பது, பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் திருடுவது என க்ரைம்கள் அனைத்தும் டிஜிட்டலானாலும் திருமண ஆசை காட்டி டிமிக்கு கொடுப்பது இந்தியாவின் எவர்க்ரீன் தனித்துவம். மும்பையைச் சேர்ந்த பெண்ணும் இந்த ஸ்பைடர் சதி வலையில் சிக்கி தன் கைக்காசை இழந்திருக்கிறார்.

மும்பையின் சிவாஜிபார்க்கைச் சேர்ந்த பெண்மணிக்கு, மேரேஜ் ஆசை எட்டிப்பார்க்க, உடனே வெப்சைட்டில் தன் விவரங்களை பதிவு செய்தார். கிடைத்த பதிலில் இங்கிலாந்தைச் சேர்ந்த அமர்ஜோஷி அஷ்ட லட்சணங்களும் பொருந்தி அம்சமாக அம்மணியின் மனதைக் கவர, போன்நம்பர் பரிமாற்றம் வரை நிகழ்ந்தது. பெண்ணைச் சந்திக்க மும்பை வருவதாக கூறிய ஜோஷியின் பேச்சை நம்பி ஏர்போர்ட் வந்த பெண்ணிடம், கஸ்டம்ஸில் டேக்ஸ் என சொல்லி, லம்பாக 74 லட்சத்தை டெக்னிக்காக நகர்த்திவிட்டார் அசகாய ஜோஷி. அப்புறம் என்ன? டிமிக்கி கொடுத்த ஜோஷி எப்போதோ தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். கோவிந்தா!


 ரவுண்ட் சப்பாத்தி கொலை!

ரிவென்ஞ்ச், முன்விரோதம், வைரம், தங்கம் என ஆட்டையப் போட நடந்த க்ரைம்களையெல்லாம் தினகரனிலேயே படித்திருப்பீர்கள். டெல்லியில் சப்பாத்தி ஸ்பெஷலாக ஒரு கொலை நடந்துள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.

டெல்லியிலுள்ள ஜஹான்கிரிபுரியிலுள்ள வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் அழைப்பு வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தபோது, போன் செய்தவரின் சகோதரி சிம்ரன் சுயநினைவற்று தன் படுக்கையில் கிடந்திருக்கிறார். போலீசாரின் உதவியோடு ஹாஸ்பிடலில் சேர்த்தாலும் சிம்ரன் உயிர் தப்பவில்லை. பின் அவரது வீட்டில் ரூமில் அடைக்கப்பட்டிருந்த சிம்ரனின் மகள் மூலமாகத்தான் குற்றவாளியான அவரது கணவர் வசமாக சிக்கினார். சப்பாத்தி ஏன் ரவுண்ட் ஷேப்பில் வரவில்லை? என டென்ஷனாகி, தன் மனைவி சிம்ரனை அவரது கணவர் தாக்கியதில்தான் அவர் இறந்துபோனது தெரிந்து போலீசாரே சப்பாத்திக்காகவா மர்டர் என மெர்சலாகியுள்ளனர். காம்பஸ் வெச்சு சப்பாத்தி சுடலாமா  பாஸ்?

விவசாயத்தில் தோற்ற வைரவிவசாயி! -ரோனி

முப்போக விவசாயத்தில் லாபம் கொழித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. வாங்கிய கடனை அடைப்பதற்காக அரசுகளின் கவனம் ஈர்க்க விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலைமையில் விவசாயத்தில் பிராஃபிட், டர்ன் ஓவரெல்லாம் சாத்தியமா?

மத்தியப்பிரதேசத்தில் பந்தேல்கண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் யாதவுக்கும் இதே யோசனைதான். கையிலிருந்த காசையெல்லாம் சுரண்டிப்போட்டு விவசாயம் செய்து கழனி விளைந்தாலும் செலவான காசு வீடு சேரவில்லை. என்ன செய்வது என கட்டிலில் படுத்து யோசித்தவர், காட்டை சமர்த்தாய் தன் மகனிடன் ஒப்படைத்தார். டாஸ் போட்டு தன் லக்கை சோதிக்க நினைத்த சுரேஷ், அரசின் சுரங்கம் ஒன்றை ஆண்டு குத்தகை 250 ரூபாய்க்கு எடுத்து, அலாரம் வைத்து தோண்டினார். ரிசல்ட்? 5.82 கேரட் மதிப்பிலான வைரம் கிடைத்துள்ளது. விரைவில் ஏலம் விடப்படும் வைரத்தின் மூலம் 20 லட்சரூபாய் சுரேஷூக்கு கிடைக்கவிருக்கிறது.    


 குடும்பத்தைக் காப்பாற்றிய எம்எல்ஏ!-ரோனி

எம்எல்ஏ ஆகி காரில் ஏறி ஏசி போட்டவுடன் மக்களை மறந்தவர்கள், அடுத்த எலக்‌ஷனுக்குத்தான் மண்ணில் கால் வைப்பார்கள். திருஷ்டி தட்டு ஏந்தும் தன் தொகுதி பெண்களுக்கு கரன்சி வைத்து ஓட்டுபோடுங்கம்மா என சூப்பர்மேன் எம்ஜிஆராவது தனிக்கதை. தன் மீட்டிங்கை கூட ஒத்திவைத்துவிட்டு விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றிய எம்எல்ஏ இந்தியாவுக்கே புதுசு! யார் இவர்?

உத்தரப்பிரதேசத்தின் சதார் தொகுதியைச் சேர்ந்த விபின்குமார் டேவிட்தான் அந்த அபூர்வ எம்எல்ஏ. லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் மீட்டிங் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அலியார்பூர் பில்கானா கிராமத்தினருகில் கார் ஒன்று விபத்தாகி, பயணித்த முஸ்லீம் ஃபேமிலியைச் சேர்ந்த 5 நபர்களும் உயிருக்கு துடிதுடிக்க, பார்த்தவர் பதவிசாய் எஸ்கேப் ஆகாமல், உதவியதுதான் ஹைலைட். "சுற்றி நின்றவர்கள் அனைவரும் எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் தந்து அவர்கள் சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சித்தோம். இதில் மதம் எங்கே குறுக்கே வந்தது?" என கர்ம வீரராக பேசுகிறார் விபின்குமார். நீங்கதான் எங்க எம்எல்ஏ!

நன்றி: குங்குமம் வார இதழ்





பிரபலமான இடுகைகள்