அன்று மலமள்ளும் தொழிலாளி இன்று கல்லூரி பேராசிரியர்! -தலித் பெண்ணின் சாதனைக்கதை --ச.அன்பரசு
அன்று
மலமள்ளும் தொழிலாளிஇன்று
கல்லூரி பேராசிரியர்!
-தலித் பெண்ணின் சாதனைக்கதை --ச.அன்பரசு
"உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?
துப்புரவு வேலை செய்பவர்தானே? போய் கழிவறையை கழுவிவிடு.
வகுப்பில் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?" என்று
கேட்ட ஏழாம் வகுப்பு சமஸ்கிருத ஆசிரியரின் அமில வார்த்தைகள் அந்த தலித் சிறுமியை தீயாய்
சுட்டபோதும் அணுவளவும் நம்பிக்கை தளரவில்லை. ஹரியானாவின் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற சமஸ்கிருத வகுப்பில்தான் இந்த தீண்டாமைப் பேச்சு. இன்று
அச்சிறுமி ஜாதி அச்சுறுத்தல்களை கடந்து மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியையாகி
சாதித்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிறருக்கும் உள்ள
வேறுபாடு, தன் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் தலித்துகள் தீண்டாமை
அவலத்தை மென்று செரித்து கண்ணீரை உரமாக்கி முன்னேற வேண்டியுள்ளதுதான்.
ஹரியானாவில் கைதல் மாவட்டத்தில் ராஜூண்ட் கிராமத்தில்
பால்மிகி ஜாதியில் மலமள்ளும் தொழிலாளிக்கு பிறந்த கௌஷல் பன்வார், மேலே சொன்ன சம்பவம் நடந்த அடுத்த நாளும் வகுப்புக்குச் சென்றார். அச்சுறுத்தியும் அடித்தும் அசராத கௌசலை வேறுவழியின்றி ஆசிரியர் வகுப்பில் சேர்த்துக்கொண்டாலும்
கடைசி வரிசைதான் அவருக்கு கிடைத்தது. "என் ஏழாம் வகுப்பின்
முதல் நாளில் சமஸ்கிருத வகுப்பில் கிடைத்த அவமானத்தை நான் என்றும் மறக்க முடியாது.
இன்று நான் சமஸ்கிருத பேராசிரியையாக இருக்கிறேன் என்றால் அதற்கு அந்த
ஆசிரியரே காரணம்" என புன்னகையுடன் பேசுகிறார் கௌசல் பன்வார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க கூடாது என்று கூறப்பட்ட தொன்மை மொழியான
சமஸ்கிருதத்தை கற்கத்தொடங்கியபோது, தம் மக்கள் மீது சுமத்தப்பட்ட
ஜாதி இழிவு குறித்து ஆழமாக அறியத்தொடங்கினார் கௌஷல்.
"உங்களுக்கு முழுதும் தெரியாத ஒன்றைப் பற்றி
எப்படி விமர்சிப்பீர்கள்?அப்படி பேசினாலும் யார் அதை கேட்பார்கள்?"
என்று டெல்லியிலுள்ள தனது வீட்டில் அமர்ந்து தீர்க்கமாக பேசுகிறார் கௌசல்
பன்வார். "எனது சிறுவயது கல்வி, கல்லூரி,
டெல்லியின் முனைவர் படிப்பு உட்பட எங்கும் எனது ஜாதி என்னை விட்டு நீங்கவேயில்லை
நிழலைப்போல" என பரபரவென பேசும் கௌசலிடம் பலரும் அவரின் ஜாதியைக்
குறிக்கும் பின்னொட்டை நீக்கச்சொல்லியும் அதை உறுதியாக மறுத்ததன் காரணம், அவர் இளமையில் பெற்ற அனுபவங்கள்தான்.
சிறுவயதில் அவரின் கிராமத்திலிருந்த குளத்தில் எருமைகளை
குளிப்பாட்டுவது, துணிகளை துவைப்பது ஆகியவை நடந்தாலும்
தலித்துகள் குளிக்க அனுமதி கிடையாது. அதை மீறி கௌசலும் அவரது
நண்பர்களும் குளித்தபோது, தூய்மை கெட்டுவிட்டது என ராஜபுத்திர
ஜாதி மக்கள் ஒன்றுதிரண்டபோது, "தூய்மையில்லாத குளத்தை ஏன்
பயன்படுத்துகிறீர்கள், எங்களுக்கே அதை கொடுத்துவிடுங்கள்"
என துணிச்சலாக பேசியது அப்போது சிறுமியாக இருந்த கௌஷல் பன்வார் மட்டுமே.
ஏனெனில் அப்போது, கௌஷலின் குடும்பமே பிழைப்புக்கு,
உயர்ஜாதியினரின் நிலங்களைத்தான் நம்பியிருந்தது. "இந்தியாவின் ஜாதி அடுக்குகள் அசாதாரணமானவை. ஒரு சிறுமி
ஆண், பெண் வேறுபாட்டையும், ஜாதி,
தீண்டாமையையும் சமூகத்திடமிருந்துதான்
அறிகிறாள் என்பதுதான் பெரும் துயரம்" என துயரம் பொதிந்த
குரலில் பேசுகிறார் பேராசிரியை கௌஷல் பன்வார்.
தன் வகுப்பு நணபர்களின்
வீடுகளில் கழிவுகளை அகற்றும் பணியால் ஜாதி வசைகள், விடுதியில்
தனிமை, வகுப்பில் கிண்டல்கள் என கௌஷல் பன்வார், பயணித்த கல்வி படிக்கட்டுகள் முழுக்க கண்ணீரின் தடயங்கள்.
எம்.பில் படிப்பிற்கு
பிறகு ரோதக் பல்கலையில் பி.ஹெச்டி சேர முயற்சித்தார் கௌஷல்.
'இலக்கியத்தில் சூத்திரர்கள்' என்ற கௌசலின் தலைப்பை
கடுமையாக எதிர்த்த ஆசிரியர்கள், இவரது அட்மிஷனை நிராகரித்து வேறொரு
பெண்ணை அனுமதித்தபோதுதான் தன் ஆசிரியர்களின் நிஜ சுயரூபத்தை உணர்ந்தார். அப்போது ஜவகர்லால் நேரு பல்கலையிலிருந்து தலித்துகளின் சமூக பொருளாதாரம் குறித்து
உரையாற்ற கைதல் நகருக்கு வந்த பேராசிரியர்கள் பூல் பதான், மலாகர்
என்ற இருவரின் ஆதரவில்தான் ஜேஎன்யூவில் பி.ஹெச்டி படிக்க கௌஷலுக்கு
இடம் கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில்,
The Situvations of Shudras in Vedas என்ற உரை, நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜயதே உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சியில்
பங்கேற்று பேசியது உள்ளிட்டவை, பின்னாளில் இவரது கடின உழைப்புக்கு
கிடைத்த பரிசுகள்
"என் தந்தையின் தொழில் சார்ந்த ஜாதி இழிவுகளை
சகித்து படித்த சமஸ்கிருத மொழிதான், இந்து சமுதாயத்தின் சமச்சீரற்ற
ஜாதி அமைப்பை பற்றி எனக்கு முழுமையாக புரிய வைத்தது" என்று
விரிவாக பேசும் கௌசல் பன்வார், படிப்பினூடே பல்வேறு முக்கிய ஆளுமைகளின்
உரைகள், இலக்கியக்கூட்டங்கள்
என பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கேற்று தன் சமூகம் குறித்த தன் அறிவை பட்டை தீட்டிக்கொண்டு
3 புத்தகங்களை எழுதியுள்ளார். "தலித் பெண்
சமஸ்கிருத பாடம் நடத்துகிறாள் என்பதை ஜீரணிக்க முடியாத பலர்,பாடங்களை
சரியாக நடத்துவதில்லை என என் மீது ஆக்ரோஷமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அது தவறு என்பதை என்னுடைய பணியின் மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறேன்."
என உற்சாகமாக பேசும் கௌசல் பன்வார், தலித் இலக்கியங்களை
தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாகியுள்ளார்.
1
மலமள்ளும்
தொழிலாளர்கள்!
2011 ஆண்டுப்படி மலமள்ளும் தொழிலாளர்கள்
- 1,82,505, தென்னிந்தியா(16,362)
2015 ஆம் ஆண்டு மலமள்ளும் தொழிலாளர்கள்
-12,226
கையால் மலமள்ள தடைவிதிக்கப்பட்ட ஆண்டு -1993(உலர்கழிப்பறை)2013(தொழிலாளர் மறுவாழ்வு)
உத்தரப்பிரதேசம்(10,301), கர்நாடகா(737), தமிழ்நாடு(363), ராஜஸ்தான்(322), ஒடிஷா(237), அசாம்(191),
பீகார்(137)
மொத்த தொழிலாளர்கள் -
12,737(13 மாநிலங்களில்)
உலர் கழிப்பறைகளின் எண்ணிக்கை -
26 லட்சம்
பாதாள சாக்கடையில் இறந்த தொழிலாளர்களுக்கான இழப்பீடு -
10 லட்சம்(குடும்பம் ஒன்றுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2014)
(Socio Economic and Caste Census 2011, Social
Justice and Empowerment Department 2017)
2
கற்க கசடற!
தேசிய கல்வி வளர்ச்சி -
73%
தலித் மக்கள் -66%(ஆண்கள்(66.4
மில்லியன்) -75.%, பெண்கள்(47.2மில்லியன்) 56.4%)
பட்டியல் இனத்தினரின் கல்வி வளர்ச்சி -தொடக்க கல்வி(15.6%), மேல்நிலைக்கல்வி (2.7%)
(2011 Census தகவல்படி)
நன்றி: குங்குமம் வார இதழ்