உலகின் அழகான 10 சைக்கிள்கள்




உலகின் அழகான 10 சைக்கிள்கள் தொகுப்பு -மகாதேவ்


அமெரிக்காவைச் சேர்ந்த எர்த் பாலிசி இன்ஸ்டியூட் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு எடுத்த ஆய்வில் 1950 - 2007 வரை சைக்கிள் தயாரிப்புகள் குறைந்திருக்கிறது அதேசமயத்தில் கார்களின் தயாரிப்பு வேகம் இரு மடங்காக கூடியிருக்கிறது. இதனால் எரிபொருட்களின் விலையும் நெரிசலும் அதிகமானதுதான் மிச்சம். கடந்த 10 ஆண்டுகளில் சைக்கிள் கள் முன்பைவிட மெல்லியதாக உறுதியாகவும் பாதுகாப்பான மின்மோட்டார்களைக் கொண்டதாகவும் உருவாகியதோடு எளிதில் கிடைக்க கூடியதாகவும், அழகானதாகவும் உள்ளன. பல்வேறு சைக்கிள் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் ஒன்றிணைந்து சூழலுக்கு இசைவான சைக்கிள்களை பல்வேறுவிதமாக தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அவற்றில் அழகான அம்சமான 10 சைக்கிள்களை பார்ப்போம்.

பி.எஸ்.ஜி வுட்.பி. ட்யோமேடிக் சைக்கிள்

ப்ரான்சைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனமான பிஎஸ்ஜி(BSG) வுட்.பி வரிசையில் உலோகங்கள் மற்றும் ஆஷ் பிளைவுட் ஆகியவை சேர்ந்த கலவையாக சைக்கிள்களை உருவாக்கி ஆனந்த அதிர்ச்சி தருகின்றனர். அலுமினியம் பயன்படுத்துவதால் இதன் எடை 16 கிலோதான். விலை ரூ. 2,84,309 கொடுத்தால் நீங்கள் இதனை பெருமையாக ஓட்டிக்கொண்டு போகலாம்.  

பாஸ்லே பாராபைக்

இங்கிலாந்தைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனமான பாஸ்லே 5 ஆம் ஜார்ஜ் மன்னர் காலத்திலிருந்தே வணிகம் செய்கிற பாரம்பரிய நிறுவனமாக உள்ளது. இரண்டாவது உலகப்போரின்போது ப்ரான்ஸ் செல்ல இவர்கள் தயாரித்து அளித்த ஏர்போர்ன் எனும் சைக்கிள் உதவியது. படைவீரர்கள் எளிதில் மடக்கிக்கொள்ளும்படி இருந்த சைக்கிள் போருக்கு பயன்பட்ட காரணத்தினாலே இந்நிறுவனம் வரலாற்றில் இடம்பெற்றது. மல்டி ட்யூப் ப்ரேம் மற்றும் கிளாசிக் வடிவமைப்பு முந்தைய வரலாற்றை நினைவுபடுத்துகிறது என்பது கூடுதல் பிளஸ்தானே!
விலை ரூ. 60,488 கொடுத்தால் கிளாசிக் சைக்கிளை நீங்கள் கைப்பற்றலாம்.

வான்மூஃப் எஸ் சீரிஸ் சைக்கிள்கள்

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச்சேர்ந்த வான்மூஃப் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பல்வேறு நகரங்களில் திறக்குமளவு இதன் சைக்கிள்களுக்கு பெரும் மவுசு.  2009 ஆம் ஆண்டு தன் சைக்கிள் வடிவமைப்பிற்காக பரிசு பெற்றுள்ளது. பார்க்க குழந்தைகள் விளையாடும் டிங்கர் டாய் எனும் விளையாட்டுப் பொருள் போல கவனம் கவர்வது இதன் ஸ்பெஷாலிட்டி. எட்டு கியர்கள், டிஸ்க் பிரேக் கொண்டு மலையில் செல்லும் பயணத்தை த்ரிலாக்குகிறது. விலை ரூ.70,435 கொடுத்தீர்கள் என்றால் பெருமையோடு கையில் சைக்கிளோடு மலையேறலாம்.

டாங்கி பைக்

இங்கிலாந்து நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த டாங்கி பைக் மரபான வடிவமைப்பில் அமையாமல் வலிமையான பாகங்கள், எளிமையான இயக்கம் என வசீகரிக்கிறது. பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும் என்றாலும் அதற்கான வண்டிகளை காட்டிலும் வேறுபட்டது என்பதை பயன்படுத்தும்போது உணரலாம் என நிறுவனம் கூறுகிறது. லண்டன் அருங்காட்சியகத்தால் சிறந்த வடிவமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பெருமையையும் இந்த சைக்கிள் கொண்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்குகளை வைக்கும்போது 2.43 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்துக்கொள்ள முடியுமாம். விலை ரூ. 55,938 கொடுத்து சின்ன டாங்கியை இப்பவே புக் பண்ணுங்க! சரக்குகள் பற்றிய கவலையை விடுங்க!

 விக்ஸ் ஸ்டீல் அர்பன் சைக்கிள்

மினிமலிச ஓவியம் பார்த்திருப்பீர்கள். சைக்கிளை அப்படி வடிவமைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் விக்ஸ் சைக்கிள். கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில் சிம்பிளாக சின்சியராக சைக்கிளில் பயணிப்போருக்கான வாகனம் இது. பயணம் மட்டுமல்ல இதில் ப்ரீ வீலிங் சாகசமும் செய்யமுடியும் என்கிற தைரியத்தை ஹேண்டில்பாரோடு பொருத்தப்பட்டிருக்கும் அற்புதமான ப்ரேக்குகள் தருகின்றன. ஹேண்டில்பாரின் சுற்றளவு 30 மி.மீ இருப்பதால் நல்ல கிரிப்பான பயணத்திற்கு கேரண்டி தருகிறது. விலை ரூ. 1,20,205 கொடுத்தால் நீங்கள்தான் இந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் என போஸ்டர் அடித்துவிடலாம்.

க்ரீன்சாம்ப் ஒரிஜினல்

மூங்கில் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட எளிமையான சைக்கிள் இது. பெடல்கள் இல்லாமல் அமைந்த 4 கிலோ எடையுள்ள இந்த சைக்கிள் நம் மனவலிமையை சோதிப்பது எப்படி? காலால் உந்தி சைக்கிள் பழகும் குழந்தைகளுக்கான விசேஷ தயாரிப்பு. மூங்கில் இழைகள் மற்றும் தேன் கலந்து சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் கீறல்கள் ஏதும் விழாது. விலை ரூ. 11,120 கொடுத்து வாங்கினால் மற்றவர்களை மேல வைக்காதே கை என மிரட்டலாம்.

செருபிம் ஹம்மிங்பேர்ட்

1968 இல் மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானிய சைக்கிள் வீரர்களுக்கு சைக்கிள் வழங்கிய பெருமையைக் கொண்டது செருபிம் எனும் ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்ற சைக்கிள் போலவும், உலகிலுள்ள சிறந்த சைக்கிள்களில் இடம்பெற்றுள்ள நல்ல அம்சங்கள் பலவற்றின் கலவையாக இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளனர். விலை ரூ. 41,784 ரூபாய் கொடுத்தால் நீங்கள் பெருமைக்குரிய க்ளாசிக் சைக்கிளின் சொந்தக்காரர் என வீட்டின் முன் போர்ட்டே வைக்கலாம்.

ஃபாரடே போர்ட்யூர்

அமெரிக்காவைச்சேர்ந்த எலக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமான ஃபாரடே, சைக்கிளின் ட்யூப்களுக்குள் பேட்டரியை வைத்து தயாரித்து இருக்கிறார்கள். ஒரே க்ளிக்கில் 24 கி.மீ தூரம் பயணிக்க முடியும். இரவாகிவிட்டதென்றால் சீட்டின் பின்புறம் கீழே உள்ள எல்இடி விளக்குகள் தானே ஒளிரும். முன் சக்கரத்திற்கு மேலே காய்கறிகளை, புத்தகங்களை வைத்துக்கொள்ள இடம் உள்ளது. விலை ரூ. 2,35,882 கொடுத்தால் நீங்கள்தான் இதன் எஜமானர்.

  என்ஜினியஸ் சைக்னோ

இத்தாலி நிறுவன தயாரிப்பு என்பதால் விலை பார்க்கவேண்டாம். நெஞ்சுவலி வர வாய்ப்பு அதிகம். எலக்ட்ரிக் சைக்கிளான இதில் ப்ரேம்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பாதுகாப்பு கேரண்டி சொல்கின்றன. 26 இன்ச் சக்கரங்கள் கார்பன் இழைகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் சைக்கிளின் மொத்த எடையே 26 கி.கி என லைட்வெயிட் சாம்பியனாக நம் மனதை வெல்கிறது. லெதர் தோலுறை போர்த்தப்பட்ட நடுப்பகுதியில் 200 () 500 வாட் சக்தி கொண்ட மின்சார மோட்டார், லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகியவை உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் இந்த மின்சார சைக்கிளில் பயணிக்கலாம். பெடல்களை பயன்படுத்தினால் சராசரியாக 37 கி.மீ செல்ல முடியும். விலை ரூ.14,82,690 கொடுத்தால் சத்தியமாக சைக்கிள் உங்களோடதுதான்.

வேர்ல்ட் பைசைக்கிள் ரிலீஃப் பஃப்பல்லோ

ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளிலும் இந்த பஃப்பல்லோ சைக்கிளைத்தான் பல இடங்களுக்கு செல்ல, பொருட்களை கொண்டு செல்ல பயன்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான வேர்ல்ட் பைசைக்கிள் ரிலீஃப் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளை வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக அல்லது தேவைப்படுவோர்க்கு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. நீட்டான லுக்கில் பிரிட்டிஷ் சுற்றுலா சைக்கிள் போல இருக்கும் இந்த சைக்கிளோடு சிறிய கருவிகள், காற்று பம்ப் ஒன்றும் தருகிறார்கள். விலை ரூ. 10,109 தந்தால் இதன் மீது ஏறி நீங்கள் பயணம் செய்ய முடியும்.

சுற்றுச்சூழல் காக்கும் சைக்கிளுக்கு நீங்கள் செலவு செய்தாலும் அது முதலீடுதான். அப்புறம் என்ன ஹெல்மெட் மாட்டி சைக்கிள் சவாரிக்கு குட்மார்னிங் சொல்லிக் கிளம்புங்க பாஸ்!
 நன்றி:
-.அன்பரசு





பிரபலமான இடுகைகள்