விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்


விநோதரச மஞ்சரி- ரோனி


பைக்கை மீட்க 1 கி.மீ சேசிங்

சரக்கு அடித்துவிட்டு படுத்துவிடும் அப்பிராணிகளை விடுங்கள். ஆனால் தொண்டை வரை குடித்துவிட்டு அப்படியே  சாலையில் இறங்கி ஊருக்கே பீதிதரும் பிரகஸ்பதிகள் பற்றி கதை உலகெங்கும் உண்டுதானே! கர்நாடகாவின் குடிமகன் ஒருவர் கூட செமபோதையானார். ஆனால் பரவசத்தில் என்ன செய்தார் தெரியுமா?

கர்நாடகாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர், மூக்குமுட்ட குடித்து பரவசம் தளும்ப தள்ளாடி வந்தவர், ட்ராஃபிக் போலீசின் பைக்கைப் பார்த்ததும் சிறிது கூட யோசிக்கவில்லை. உடனே சாவி போட்டு எஞ்சின் உசுப்பி கிளப்பிவிட்டார்; அதுவும் பைக்கின் மீதிருந்து போலீசின் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு. உடனே குடிமகனை சேஸ் பண்ணிப்போனால், ஏறத்தாழ 1 கி.மீ போய் வளைத்துத்தான் பைக்கை மீட்டிருக்கிறார் பரிதாப போலீஸ்காரர். ஆனால் குடிபோதை பரவசத்தில் கர்நாடக மனிதர் சிரிப்பதை நிறுத்தவேயில்லை. அதுதான் ஊரே சிரிச்சிருச்சே!


 மகள்களே இனி மாடுகள்!

இந்தியாவில் மாநில அரசின் கடன் தள்ளுபடி அனுசரணையைத் கடந்து, விவசாயம் செய்வது இடியாப்ப சிக்கலாகி வருகிறது என்பதற்கு மத்தியப்பிரதேசத்தின் விவசாயி குறித்த வெளியான வீடியோவே சிறந்த சாம்பிள்.

மத்தியப்பிரதேசத்தின் சேஹோரிலுள்ள பசந்த்பூர் பான்க்ரி கிராம விவசாயியான சர்தார் காலா, கையில் பணமில்லாததால்  முதலில் தன் இரு மகள்களான ராதிகா, குந்தி இருவரையும் பள்ளியை விட்டு நிறுத்தினார். பின் நிலத்தை உழ எருதுகள் வாங்கவும், வாடகைக்கு பிடிக்கவும் கூட வழியில்லாத கிடுக்கிப்பிடி சூழலில் அந்த ஷாக் முடிவை எடுத்தார். மாடுகள் இல்லை, ஆனால் மகள்கள் இருக்கிறார்களே என்று மகள்களை நுகத்தடியில் மாட்டி நிலத்தை உழத்தொடங்கியதுதான் பேரவலம். சர்தார் நிலத்தை தன் மகள்களைப் பூட்டி உழும் காட்சி வீடியோவாக டிவி சேனல்களில் ஒளிபரப்பாக, அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷிஷ் சர்மா, உடனே விவசாயி சர்தாருக்கு தேவையான உதவிகளை அரசு அளிப்பதாக கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில்தான் அண்மையில் கடன் தள்ளுபடிக்காக போராடிய 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

சிமெண்ட் ஆலைகளை எதிர்த்து போராடும் மாணவர்

2015 ஆம் ஆண்டு புல்வானா மாவட்டத்தின் க்ரியூ கிராமத்தில் நடைபெற்ற மெடிக்கல் கேம்பில்தான் அந்த ஷாக் சம்பவம். டெஸ்டில் அப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலருக்கும் அலர்ஜி, தோல் மற்றும் சுவாச பிரச்னைகள் கண்டறியப்பட்டன.

அக்கிராம சுற்றுப்புறத்தில் அரசு சிமெண்ட் ஃபேக்டரி உட்பட 4 தொழிற்சாலைகள் முறையான மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காததை கண்டுபிடித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் அனுப்பி மக்களை காப்பாற்றியது,  டேனிஸ் மேக்ராஜ் என்ற மாணவர் ஒருங்கிணைத்த தன்னார்வலர்களின் குழுதான். பல்வேறு இதழ்களில் கட்டுரை, இணையத்தில் வீடியோக்கள் என மாசுபடுதலுக்கான விழிப்புணர்வை காஷ்மீர் மட்டுமின்றி மாநிலம் கடந்தும் கொண்டு சென்ற ஆக்கப்பூர்வச் செயல்பாடு மேக்ராஜை பலரும் கவனிக்க வைத்தது. தற்போது சிமெண்ட் ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, மாசுபாட்டை குறைப்பது என இறங்கிவந்திருப்பது ஒன்றுதிரண்ட மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி.     


பிரதமரால் நின்றுபோன திருமணம்!

கல்யாணம் நின்றுபோக என்ன காரணம் இருக்க முடியும்? டௌரி கேட்பது, கலர் கம்மி, வசதி இல்லை, மாப்பிள்ளை கேரக்டர் சரியில்லை என காரணங்களை அடுக்கலாம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணம் நின்றுபோக காரணம் பிரதமர் மோடி என்றால் நம்புவீர்களா?

உத்தரப்பிரதேசத்தின் பிஸினஸ் மனிதர், தொழில் ஹிட்டானவுடனே லைஃபில் செட்டிலாக திருமணம் செய்ய முடிவெடுத்தார். உடனே ஜாதகம், பஞ்சாங்கம் பார்த்து பெண்ணும் தயாராகி, கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரம். அப்போதுதான் மாப்பிள்ளை பிரதமர் மோடியின் சீர்த்திருத்தங்களைப் பற்றி, புதிய இந்தியா தாமரையாக பூத்துவிட்டது என்கிறரீதியில் பேச, மணமகளுக்கு பொறுக்கமுடியாத கோபம். எரிச்சலில் பெண்  ரெண்டு வார்த்தைகள் சூடாக பேச, இருவருக்கும் முட்டிக்கொ்ண்டது. பின் இந்த விவாதம் அப்படியே இரு சம்பந்திகளுக்கு ஷிப்ட் ஆகி விவாத ஜூரம் 100 டிகிரிக்கும் மேல் எகிற, ரிசல்ட், கல்யாணமே நின்றுவிட்டதுடீக்கடை மட்டுமல்ல, மேரேஜ் காலிலும் பாலிடிக்ஸ் வேண்டாம் பாஸ்!

கைதியின் காதல் விண்ணப்பம்

காதல் வந்தால் டைம்டேபிள் போட்டு சொல்லிவிடுவதுதான் குளோபல் வழக்கம். பிரஷர் தாங்காமல் ஹார்ட் வெடித்துவிட்டால் என்ன செய்வது? அமெரிக்காவைச் சேர்ந்த காதலர் தன் தன் நெஞ்சில் பொங்கிய காதலை எந்த சிச்சுவேஷனில் சொன்னார் தெரியுமா?

அமெரிக்காவின் ஓக்லஹாமாவைச் சேர்ந்த பிராண்டன் தாம்சன்தான் அந்த காவிய காதலர். கேர்ள்பிரண்டான லியாண்ட்ரியா கீத்திடம், கிடுகிடுவென பார்த்தீனிய காடாக காதல் பூத்த தன் மனதை திறந்து காட்ட நினைத்தபோதுதான் விதி சதி செய்தது. யெஸ்,தன் பிறந்த நாளான ஜூலை 4 அன்று லவ்வைச் சொல்லி பெண்தோழியை காந்தமாய் இழுத்து தன் மடியில் போட்டு கொஞ்ச நினைத்தார் பிராண்டன். ஆனால் இது போலீசுக்கு தெரியுமா? அன்றுதான் பிராண்டனின் மீது பதிவான ஐந்து எஃப்ஐஆர் குற்றச்சாட்டுக்களுக்காக அவரை மாமியார் வீட்டுக்கு கூட்டிப்போக வந்தனர். அவர்களிடம் ஐ யம் சஃபரிங் ப்ரம் லவ் என பர்மிஷன் கேட்டு கிடைத்த 5 நிமிஷ கேப்பில் காதலை தோழியிடம் ப்ரபோஸ் சொல்லித்தான் மூச்சு விட்டிருக்கிறார் பிராண்டன். வாட் எ லவ் ஸ்டோரி! 

நன்றி: குங்குமம் வார இதழ்






>  

பிரபலமான இடுகைகள்