சுடச்சுட அறிவியல் ! - விக்டர் காமெஸி
சாக்லெட் சந்தோஷம்
ஏன்?
காசை கூட கடன்
கொடுக்கும் குட்டீஸ்கள் உண்டு. ஆனால்
சாக்லெட் மேட்டரில் பகிர்தல், பங்கு என்றால் வெட்டுக்குத்து ஆகிவிடுகிறது.
சாக்லெட் ஃபுல்லா எனக்கே வேணும் என அப்படியே பஞ்சாமிர்தமாக வாயில் வழிய
வழிய குட்டீஸ் சாப்பிடும் ரகசியம் என்ன?
Tryptophan,Phenylethylalanine,Theobromine
இந்த மூன்று மும்மூர்த்திகள்தான் சுட்டி டிவி பார்த்தபடி சமயத்தில் வாங்கிக்கொடுத்த
நமக்கே கொடுக்காமல் சாக்லெட்டை வாண்டுகள் வாயில் தாம்பூலமாய் குதப்பி சாப்பிடக்காரணம்.
மின்சார உணவு சாப்பிட
ரெடியா?
கரண்டைத் தொட்டால்
சாவுதான் வரும்.
சோறு வருமா? ஏன் வராது என்கிறார்கள் பின்லாந்தைச்
சேர்ந்த லாப்பீன்ரன்டா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள்.
என்ன தேவை? தேவையான
அளவு மின்சாரம், தேவையான அளவு நீர், சிறிது
கார்பன்டை ஆக்சைடு, கொஞ்சம் நுண்ணுயிரிகள்.
பயோரியாக்டரில்
மேற்சொன்ன பொருட்களை கொட்டினால் சில நிமிடங்களில் பவுடர் (50% புரதம்
25% கார்போஹைட்ரேட்) கிடைக்கும். அதில் நுண்ணுயிரிகள் இதன் தன்மையை மாற்றினால் உணவு ரெடி. "நாங்கள் தற்போது ரியாக்டர், டெக்னாலஜி ஆகியவற்றை அப்டேட்
செய்துவருகிறோம்" என பெருமிதமாகிறார் ஆராய்ச்சி தலைவரான
ஜூகா பெக்கா பிட்கானன்(VTT). உடனே எங்கே எங்கே என பறக்காதீர்கள்.
இந்த மின்சார உணவு விவசாயமே இல்லாத பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு
வழங்கப்படவிருக்கிறது. மூலப்பொருட்கள் அதிகளவு தேவஐ என்பதால்
கமர்ஷியல் உணவாக பத்து ஆண்டுகள் தேவை.
கிஸ்மோ ரவுண்ட்
அப்!
Sen.se SleepPeanut
5செ.மீ நீளமுள்ள ஸ்லீப்பீநட் என்ன செய்யும்? நீங்கள் தூங்குவதை,
உங்கள் உடலின் வெப்பத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கும்.
தகவல்களை ப்ளூடூத் வழியாக உங்கள் போனுக்கு அனுப்பும். மொபைல் ஆப் பிளஸ் அலாரக்கடிகாரத்தின் அனுகிரகமும் உண்டு. விலை ரூ. 2,197
Volterman Smart
Wallet
கூட்டத்தில் ஒருத்தனாக
பம்மிக்கொண்டு இருக்கும் லட்சணத்தில் நமது கந்தல் பர்ஸ், ஸ்மார்டாக
இருந்து என்னாகப்போகிறது? என நினைப்பீர்கள். போனை சார்ஜூக்கு பவர்பேங்க், வைஃபை ஹாட்ஸ்பாட்,
அலாரம், ஜிபிஎஸ்,கேமரா என
ஜேம்ஸ்பாண்ட் வகையறா உபகரணமாக மிரட்டுகிறது வால்டர்மேன் வாலட். போனை வேறுயார் எடுத்து திறந்தாலும் அவர் முகம் போட்டோ எடுக்கப்பட்டு உங்கள்
போனின் கதவைத்தட்டும். நம்மைவிட செம ஸ்மார்டான வால்டர்மேன் பர்ஸின்
விலை ரூ. 8,261
கண்நோய் அறியும்
சூப்பர் ஆப்!
நீரிழிவால் ஏற்படும்
பார்வைக்குறைபாடுக்கு டயாபடிக் ரெடினோபதி என்று பெயர். ரெட்டினாவிலுள்ள
ரத்தநாளங்கள் சிதைவடைவதால் பார்வை பாதிக்கப்படும் நிலை. தற்போது
ரத்தநாளங்களை சோதிக்கும் எளிய முறையை காவ்யா கொப்பாராபு என்ற சிறுமி கண்டுபிடித்துள்ளார்.
தன் தாத்தாவுக்கு
இம்முறையை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளார் காவ்யா. "நோயை சரியான முறையில்
கண்டறிவதுதான் இன்றும் பெரிய சவால். இந்தியா போன்ற நாடுகளில்
கிராமங்களிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய கண் மருத்துவர்கள் தேவை"
என்கிறார் காவ்யா. Eyeagnosis என்று பெயரிடப்பட்ட
ஸ்மார்ட்போன் ஆப்பின் மூலம் நோயை கண்டறிய முடியும் என்கிற இவர், இந்த ஆப்பை நியூயார்க்கில் நடந்த ஓரெய்லி செயற்கை அறிவு மாநாட்டில் காட்சிபடுத்தியுள்ளார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்தின் தகவல் தளத்தில் 34 ஆயிரம் ரெட்டினா படங்களை பெற்று ஆப்புடன் இணைத்து அதனை எளிதில் கண்டறிய உழைத்துள்ளார்.
பெண்கள் கம்ப்யூட்டர் லீக் என்ற பெயரில் ஏழை குழந்தைகளுக்கு கணினி கோடிங்
எழுதும் வகுப்புகளையும் நடத்திவருகிறார் காவ்யா.
காயங்களை குணமாக்கும்
சூப்பர் சிப்!
ஓஹியோ பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் காயங்களை விரைவில் குணமாக்கும் சூப்பர் சிப்பை கண்டறிந்துள்ளனர். ஒருமுறை
சிப்பை காயம்பட்ட இடத்தில் அழுத்தினால் ஜீன் தெரபி மூலம் செல்களை மாற்றி அந்த இடத்தை
குணப்படுத்துகிறது.
Tissue
Nanotransfection (TNT) முறையில் காயம்பட்ட இடத்தில் சிறிய அளவு மின்சாரத்தை
செலுத்தி டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ மூலம் காயம்பட்ட இடம் விரைவில் குணமாகிறது.
"நிமிடங்கள் கூட அல்ல, சில நொடிகள்தான்.
சிப்பை சட்டென தேவையான இடத்தில் அழுத்திவிட்டு எடுத்துவிடலாம்"
என்கிறார் வெக்ஸ்னர் செல்தெரபி மையத்தின் இயக்குநரான சந்தன் சென்.
சிப் சிகிச்சை செய்தபின் எலியின் உடலில் ரத்தநாளங்கள் வேகமாக செயல்படத்தொடங்கி,
முறிந்த எலும்புகள் விரைவில் குணமானது உண்மை. தோல்
மட்டுமல்லாது உடல் உறுப்புகளிலும் இது செயல்பட்டது" என்கிறார்
சென். மருத்துவ வட்டாரத்தில் இந்த சிப், எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
கூகுள் ஊழியருக்கு
கொடுத்த மெமோ!
கூகுள் அண்மையில்
தன் நிறுவன ஊழியரை தன் பன்மைத்தன்மையுடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஊழியரை
வெளியேற்றியிருக்கிறது.
என்ன பிரச்னை? கூகுளின்
பாலியல் முரண்பாடு கொள்கைகளை கேள்வி கேட்டதால்தான் மெமோ கொடுக்கப்பட்டதாக கிசுகிசு.
கூகுள் தனது ஊழியரான தமோருக்கு அளித்த பத்து பக்க மெமோவிலுள்ள வார்த்தைகளால்
கடுமையாக கோபத்திலுள்ளனராம். "எங்கள் நிறுவனத்தில் பாலியல்ரீதியான
புறக்கணிப்பு கிடையாது" திட்டவட்டமாக பேசியிருக்கிறார் கூகுளின்
இயக்குநரான சுந்தர்பிச்சை. அதையே துணைத்தலைவர் கமா, புல்ஸ்டாப் மாற்றாமல் வழிமொழிகிறார். ஆனால் கூகுள் நிறுவனம்,
அமெரிக்க தொழில்துறையோடு கடுமையாக மோதிக்கொண்டு இருக்கிறது. எதற்கு? தொழில்நுட்ப பணியாளர்களில் 80% ஆட்கள் ஆண்கள் மட்டுமே என்பதால்தான். பெண்களை புறக்கணிப்பது
இதானே?
நன்றி: முத்தாரம் வார இதழ்