இந்தியாவின் நெ.1 அலைச்சறுக்கு பெண்! - ச.அன்பரசு



இந்தியாவின் நெ.1 அலைச்சறுக்கு பெண்! - .அன்பரசு


மங்களூருவிலுள்ள பள்ளி மாணவர்கள் கடல் நீரில் மெல்ல பயம் கலைந்து, உற்சாகம் துள்ள நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். அதனை தூரத்தில் தனியே நின்றபடியே ஏக்கம் நிறைந்த கண்களோடு ஒரு சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பெற்றோருக்கும் தன் பெண்ணின் சிறிய ஆசையை பூர்த்தி செய்யமுடியவில்லை என்று வருத்தம்தான். ஆனால் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளித்து வரும் நிலையில் கடல்நீரில் நீச்சல் எப்படி சாத்தியம்? என்ற அக்கறை அவர்களுக்கு. இச்சூழலில் அவளுடைய தாத்தா மட்டுமே அச்சிறுமிக்கு ஆறுதலாய் இருந்தார்.
வெறும் ஆறுதல் மட்டுமல்ல, அவளது பெற்றோரிடம் போராடி அச்சிறுமி நீரில் இறங்க பர்மிஷனும் வாங்கி கொடுத்துவிட்டார் தாத்தா. அச்சிறுமிக்கு தன் கனவான  கடலில் அலைச்சறுக்கு பயிற்சி என்ற மகிழ்ச்சியோடு, ஆஸ்துமா என்ற தன் நோய்மையையும் சமாளிக்க வேண்டியிருந்தது. "கடலை எனது தாயின் மடியைப்போலவே உணர்கிறேன். கடல்நீரில் இருக்கும்போது என் மனதில் எவ்வித தயக்கமும் பயமும் இதுவரை எழுந்ததேயில்லை" என அன்லிமிடெட் உற்சாகத்தில் பேசும் சிறுமியின் பெயர் தன்வி ஜெகதீஷ். இன்று இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான பெடல் சர்ஃபிங்கில் நெ.1 வீராங்கனை இவர்தான்.

 தன் எட்டு வயதில் கடலில் குதிக்க முடிவெடுத்த தன்விக்கு, நோய், அணியும் ஆடை, பெற்றோரின் அனுமதி என பல்வேறு தடைகளை தளர்வுறாமல் போராடி கடக்க வேண்டியிருந்தது. "எட்டு வயதில் கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு சர்ஃபிங் போர்டை தொட்டுவிட்டேன் என்றாலும், பதினாலு வயதில்தான் ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங்கில் ஆர்வம் வந்தது" என பேடல் சர்ஃபிங்கில் நனைந்த கூந்தலில் சொட்டிய நீரை உதறியபடி ஆர்வமாக பேசுகிறார் தன்வி ஜெகதீஷ்.
கடல் நீச்சல் தொடங்கி சர்ஃபிங் வரை கற்றவருக்கு, சரியான நேரத்தில் திசை காட்டும் குருவாக வந்தார் மந்த்ரா பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஏப்ரல். உயரே எழும் அலைகளின் மீது சறுக்கி விளையாடுவது சர்ஃபிங் என்றால், பேடல் சர்ஃபிங்கில் உங்களிடம் கூடுதலாக துடுப்பு இருக்கும் அவ்வளவுதான். கடலில் அலைகள் உயரே எழும் என்று காத்திருக்காமல் ஏரியில் கூட இதனை விளையாடலாம்.

"பேடல் சர்ஃபிங் போல எனர்ஜியான விளையாட்டு எதுவுமேயில்லை. முன்பே பேடல் சர்ஃபிங் விளையாட்டிற்கான பொருட்கள் எங்களிடம் இருந்தது என்றாலும், கோச் ஏப்ரல் பயன்படுத்தும்வரை அதனை பயன்படுத்துவது பற்றி யாருமே யோசிக்கவில்லை" என புன்சிரிப்போடு பேசுகிறார் தன்வி.
இந்தியாவிலேயே பேடல் சர்ஃபிங் என்பது புதிது என்றாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து உழைப்பை அர்ப்பணிக்க தன்வி தயங்கவில்லை. இந்த தளர்வுறாத உழைப்புக்கு கிடைத்த பரிசுதான்2015 மற்றும் 2016  ஆகிய இரு ஆண்டுகளில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் முதலிடம் என்ற அங்கீகாரம். இந்தியாவில் தேசிய சாம்பியன் என்பதோடு உலகளாவிய போட்டிகளிலும் பேடல் சர்ஃபிங் விளையாட்டில் இந்தியாவின் முகம், பதினேழு வயதான தன்வி ஜெகதீஷ்தான்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக சர்ஃபிங் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. " உலகில் புகழ்பெற்ற விளையாட்டுகளின் பேடல் சர்ஃபிங்கும் ஒன்று என்றாலும், இந்தியாவில் இப்போதுதான் அதன் மீது வெளிச்சம் விழத்தொடங்கியுள்ளது. பேடல் சர்ஃபிங்கில் வயது தடையில்லாமல் பலரும் பங்கேற்கலாம்என ஊக்கப்படுத்துகிறார் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் துணைத்தலைவரான மோகன் பரஞ்பே.
சர்ஃபிங் பயிற்சியளிக்கும் பள்ளிகள் பயிற்சிகளோடு கூடுதலாக திறமையானவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்தி வருகின்றன. தன்வி தான் கலந்துகொண்ட முதல் போட்டியான 2015 ஆம் ஆண்டு நடந்த ஸ்டேண்ட் அப் பேடல் சர்ஃபிங்(SUP) போட்டியில் முதல் பரிசு பெற்றது பெருமை தரும் நிகழ்வு. " சர்ஃபிங் போட்டிக்கு எனக்கு கொடுத்த கடும் பயிற்சிகளைப் போல இரு மடங்கு என் பெற்றோர்களிடன் என் பயிற்சியாளர்கள் அனுமதி பெற போராடியதை மறக்க முடியாது. ஒரு பெண்ணாக சர்ஃபிங் போட்டியில் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபித்து காட்டுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்படி கிடைத்த சான்ஸ்தான் சென்னையில் நடந்த எனது முதல் சர்ஃபிங் போட்டி" என விரிவாகப் பேசுகிறார் தன்வி. ஏறத்தாழ 18 கி.மீ. சர்ஃபிங் பந்தய தூரத்தினை இடைவிடாத கடுமையான பயிற்சிகளோடு தளராத மன உறுதி இருந்தால் மட்டுமே அலைகளோடு போராடி நிறைவு செய்ய முடியும். முன்னணி வீரர்களின் சர்ஃபிங் வீடியோக்களை பார்த்து நுணுக்கங்களை கற்று எடுத்துக்கொண்ட பயிற்சியே போட்டிகளில் வெற்றிபெற தன்விக்கு உதவியது.

"அமெரிக்காவின் ஃபிஜி தீவில் நடந்த போட்டியில்(மெரைன் கரோலினா கிளப்) 18 கி.மீ பந்தய தூரத்தினை கடுமையான சுட்டெரிக்கும் வெப்பத்துடன் கடந்தது மறக்கவே முடியாது. என்னுடைய போட்டியாளர்களின் மன உறுதியும் ரோபாட்டுகள் போன்ற உடல் வலிமையும் எனக்கு பெரும் ஆச்சர்யம் தந்தன" என வியப்புடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் தன்வி ஜெகதீஷ் அப்போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார். தற்போது தன் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் கிடைக்காத நிலைமையில்தான் டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் ISA World SUP Paddleboard Championship போட்டிக்கு உறுதியோடு உழைத்து வருகிறார்.
"நான் எதிலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எளிய ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் நிலையில், என்னுடைய வெற்றிகள் அவர்களுக்கு சமர்ப்பணம். ஏதோ ஒருவகையில் இந்திய சிறுமிகள் அவர்கள் மனதில் ஊக்கம் பெற்று சர்ஃபிங்கில் ஈடுபட்டால் போதும். அதுவே நான் பெற்ற பெரும் வெற்றி" என கண்களில் நம்பிக்கை பேரொளியாய் சுடர விடை கொடுக்கிறார் அலைச்சறுக்கு வீராங்கனை தன்வி ஜெகதீஷ்.

1
பேடல் சர்ஃபிங் ஹிஸ்டரி
பேடல் சர்ஃபிங் விளையாட்டின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. 16 ஆம் நூற்றாண்டில் ஹவாய் வீரர்கள் 5 மீ. நீள பளுவான மரத்தில் அலைச்சறுக்கு செய்து பேடல்போர்டை பிராக்டிகல் டெஸ்ட் செய்தனர். 20 ஆம் நூற்றாண்டில் நீச்சல் வீரர்களுக்கு காயம்பட்டுவிட்டால் அவர்களை காப்பாற்ற லைஃப்கார்டுகள் பேடல்போர்டுகளை பயன்படுத்தினர். 1940 ஆம் ஆண்டு ட்யூக் கஹானமோகு மற்றும் லெராய் பாபி ஆகிய அலைச்சறுக்கு வீரர்கள், சிறிய கடல் அலைகளினை சமாளிக்க பேடல்போர்டு உதவும் என்று கண்டுபிடித்தார்கள். 1990 ஆம் ஆண்டில் சர்ஃபிங் பள்ளிகளில் பேடல்போர்டு புகழ்பெறத்தொடங்கி, 2012 நடத்தப்பட்ட முதல் பேடல்போர்டு சர்ஃபிங் போட்டியின் வின்னர் கால் லென்னி. இவ்விளையாட்டிற்கென Standup Journal(2007)  என்ற பத்திரிகை பிரத்யேகமாக வெளியாகிறது.

 2
சாகச சர்ஃபிங் ஹாட் ஸ்பாட்!
பெல்ஸ், போண்டி பீச்(ஆஸ்திரேலியா), குடா பீச் (பாலி)
சான்டாக்ரூஸ்(கலிஃபோர்னியா), மென்டாவாய் தீவு (இந்தோனேஷியா) ஹோசேகர் (ஃபிரான்ஸ்)
டாப் 5 சர்ஃபிங் பெண்கள்!
ஜோகன்னே டெஃபே(ஃபிரான்ஸ்),மாலியா மானுவேல்(ஹவாய்),பைகே ஹரப்(நியூசிலாந்து),மேசி கலாகன்(ஆஸ்திரேலியா),பிலிப்பா ஆண்டர்சன்(ஆஸ்திரேலியா)

 3
SUP நெ.1 இடம்(ஆண்கள், பெண்கள்)
கானர் பாக்ஸ்டர்(ஆண்கள், 290 புள்ளிகள்,ஹவாய்),
அன்னபெல் ஆண்டர்சன்(பெண்கள்,234 புள்ளிகள், நியூசிலாந்து)
(worldsurfleague.com May 27,2017. supracer.com தகவல்படி)
 

நன்றி: குங்குமம் வார இதழ்