பிரபஞ்சத்தின் ஹிஸ்டரி சொல்லும் வெப் டெலஸ்கோப்! - ச.அன்பரசு




பிரபஞ்சத்தின் ஹிஸ்டரி சொல்லும் வெப் டெலஸ்கோப்! - .அன்பரசு


    நாஸாவின் ஸ்பெஷலே இதுதான். இதற்கு முன்பு கெப்ளர் டெலஸ்கோப் கண்டறிந்த புதிய கோள்கள் மூலம் டாக் ஆப் தி டவுனாக அறிவியல் உலகில் தான் என்றுமே லெஜண்ட் என காட்டிக்கொண்டது. இதோ இம்முறையும் வெப் டெலஸ்கோப் மூலம் மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி? அடுத்தாண்டு விண்வெளியில் ரிலீசாகவிருக்கும் வெப் டெலஸ்கோப் எனும் மெகா பட்ஜெட் திட்டம்தான் இந்த புகழுக்கு காரணம். 1958 தொடங்கி 58 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சியில் வலது காலெடுத்து நுழைந்துள்ள நாஸாவின் பெயரை பூமியைக் கடந்து பிரபஞ்சம் முழுக்க பேசவைக்கப் போகிறது வெப் டெலஸ்கோப். சும்மா சொல்லவில்லை; மேட்டர் அவ்வளவு சுவாரசியம்!

    அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரிலுள்ளது பலரும் அறியாத தேசிய வரலாற்று நினைவுச்சின்னமான அறை. விண்வெளி மையத்தில் தரைதளத்திலுள்ள வங்கியின் காப்பக அறை வடிவிலுள்ள 40 டன் எடை, 40 அடி அகலமான கதவைத் திறந்தால் சேம்பர் நம்மை வரவேற்கிறது. திரவ ஹீலியமும், நைட்ரஜனும் ஒன்றுசேர -262 டிகிரி செல்சியஸில் அறை வெப்பநிலை உடலை ஜிலுஜிலுவென உறையவைக்கிறது. 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அறையில்தான் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மெல்ல பக்குவமாக இன்ச் பை இன்ச் செதுக்கப்பட்டு வருகிறது.
டெலஸ்கோப்பின் முக்கிய பகுதியான கண்ணாடி 18 சிறுபகுதிகளாக தேன்கூடு டிஸைனில் உருவாக்கப்பட்டு 21.3 அடி உயரத்தில் அமையவிருக்கிறது. ஹப்பிள் டெலஸ்கோப்பின் கண்ணாடியை விட இதன்மூலம் 7 மடங்கு மேக்சிமம் ஒளியை பெற முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். "விண்வெளி வெடிப்பு நிகழ்வின் உண்மைகளை புதிய வெளிச்சத்தில் காணப் போகிறோம்" என ராக்கெட் பெட்ரோலாக உற்சாகமாகிறார் வெப் டெலஸ்கோப் திட்ட இயக்குநரான எரிக் ஸ்மித்.

அடுத்தடுத்த பிளான்கள்!

    அக்டோபர் 2018 இல் விண்ணுக்கு பாயும் வெப் டெலஸ்கோப்பின் பட்ஜெட் மட்டும் 8.7 பில்லியன் டாலர்கள். ஐடியா, திட்டம், தயாரிப்பு என மெகா சீரியலாய் நீண்ட பணிகள் முழுமையடைய 20 ஆண்டுகள் பிடித்துள்ளன. புதிய வெப் டெலஸ்கோப் மூலம் பல்வேறு கோள் மண்டலங்களையும், புதிய உயிர்களையும், தாவரங்களையும் காணமுடியும் என்பது பிளஸ் பாய்ண்ட். நாஸா வெப் டெலஸ்கோப்புக்கு முன்னதாக கோள்களை 360 டிகிரியில் ஆராயும் TESS செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருக்கிறது நாஸா. அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக கோள்களை கண்டறியும் WFIRST, பால்வெளியை வெளியேயிருந்து செயல்படுத்தும் டார்க் எனர்ஜி குறித்தும் ஆராயவிருப்பது ஆய்வுலகிற்கு புதுசு. நாஸா வெப் டெலஸ்கோப் மற்றும் டெஸ் செயற்கைக்கோள் ஆகிய இரண்டின் பட்ஜெட் 9.2 பில்லியன் டாலர்கள். மேக்சிமம் செலவில் மினிமம் டேட்டா கிடைக்கிறது என்பது நாஸாவின் மீது நீண்டகாலமாக எழுப்பப்படும் சர்ச்சை. "நாஸா செலவு செய்யும் ஒவ்வொரு டாலரும் விதைபோலத்தான்; வீணல்ல. விண்வெளி குறித்த ஆச்சர்யங்கள் மனிதர்களுக்கு இன்றுவரை அறிந்து தீரவில்லை. விரைவில் விண்ணுக்கு அனுப்பப்படும் டெலஸ்கோப்புகள் நம் அனைத்து கேள்விகளுக்கு பதில் தரும். இது அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான பொற்காலம்" என எனர்ஜி பெருக பேசுகிறார் நாஸாவின் வானியற்பியல் திட்ட இயக்குநரான பால் ஹெர்ட்ஸ்.

டெலஸ்கோப் ரெடி!

வெப் டெலஸ்கோப் திட்டம் சந்திக்காத தடைகளே கிடையாது. 1990 இல் வெப் டெலஸ்கோப்பின் திட்டச்செலவு 500 மில்லியன் என பட்ஜெட் போட்டு 2007 இல் பணி நிறைவடைதாக பிளான். ஆனால் டெக்னாலஜி தேக்கத்தினால் 2011 ஆம் ஆண்டு பிளானை கணக்கிட்டபோது, 6.2 பில்லியன் டாலர்கள் செலவாகியிருந்தது. அப்போதும் டெலஸ்கோப் எப்போது ரெடியாகும் என்றால், விஞ்ஞானிகள் மென்று விழுங்கினார்கள். 1993 ஆம் ஆண்டு இயற்பியல் ஆய்வுக்காக தயாரித்த பார்டிக்கிள் ஆக்சிலரேட்டர் என்ற 2 பில்லியன் திட்டத்தையே அதிக செலவாகிறது என அமெரிக்க அரசு தடா போட்ட ஹிஸ்டரி உண்டு.  வெப் டெலஸ்கோப், பூமி மற்றும் சூரியன் என இரண்டின் ஈர்ப்புவிசை குறைவாக உள்ள L2 எனும் ஒரு மில்லியன் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டு அகச்சிவப்பு கதிர்களால் காஸ்மிக் தூசுகளை ஊடுருவி கோள்களை ஆராய்ந்து தகவல் கூறப்போகிறது.

புதுசு என்ன?

ஹப்பிள் டெலஸ்கோப் போல் 600 கி.மீ தூரத்தில் நின்று ஆராயாமல் வெகுதூரம் சென்று ஆராய்வதால், இதில் ஏற்படும் சிக்கல்களை விண்வெளி வீரர்கள் மூலம் தீர்க்கமுடியாது. எனவே  மைக்ரோமீட்டியோராய்டு எனும் சிறிய மோட்டார்கள் வெப் தொலைநோக்கியிலுள்ள கண்ணாடியை சரியாக கோள்களை நோக்கி ஃபோகஸ் செய்ய உதவுகிறது. வெப் டெலஸ்கோப் மிகவும் சென்சிடிவ் என்பதால் அதனை ஜில்லென மாற்றி சூட்டைக் குறைக்க கப்டோன் எனும் மெல்லிய சோலார் ஷீல்டு உறை 5 லேயர்களாக தொலைநோக்கியில் மீது இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது 85 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும் -223 டிகிரி வரை குளிர்ச்சியையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லேயர்களிலுள்ள உறை நம் தலைமுடியைப்போல மெல்லியது என்பது மிராக்கிள். "இந்த 5 லேயர் அடுக்குகளே டெலஸ்கோப்பை குளிர்விப்பதால், தனி குளிர்விப்பு வசதி அவசியமில்லை" என தெம்பாக பேசுகிறார் திட்ட இயக்குநரான எரிக் ஸ்மித்.

பெரிலியம் உலோகத்தினை இழைத்து செதுக்கி 18 துண்டுகளாக பட்டை தீட்டி உருவாக்கியுள்ள கண்ணாடியில் 269 .அடிக்கு தங்கமும் மெல்லியதாக பூசப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிக்கு ஹப்பிள் டெலஸ்கோப் போல பாதுகாப்பு இல்லாததால் விண்மீன்களின் வெளிச்சம், மாசுகள் இதனை தாக்கினாலும் மற்றொரு கண்ணாடி அதை ஈடுகட்டி செயல்படும். அகச்சிவப்பு கதிர்களின் மூலம் செய்திகளை பெற்று பால்வெளியின் 13.8 பில்லியன் ஆண்டுகால வரலாற்றை ஏ டூ இசட் ஆராயவிருக்கிறது. இதில் டெஸ் செயற்கைக்கோள் 200 ஒளி ஆண்டுகளை தொலைவிலுள்ள கோள்களை ஆராய உள்ளது.
அடுத்து விண்வெளிக்குச் செல்லும் WFIRST இன் பணியும் இதேதான். அடுத்து எக்ஸ்ரே கதிர்களை வெளியிடும் கருந்துளை ஆராய்ச்சி டெலஸ்கோப்பான LYNX, கோள்கள் வெளியிடும் மீத்தேன், கார்பன்டை ஆக்சைடை உள்ளிட்ட வாயுக்களை ஆராயும் HabEx செயற்கைக்கோளும் ரெடியாகி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான டாலர்களை எண்ணிப்பார்க்காமல் கொட்டும் நாஸா இதன் மூலம் விண்வெளி குறித்த ஆதி முதல் அந்தம் வரையிலான கேள்விகளுக்கு பதில் கண்டறியுமா என்றால் எதிர்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
  
1
WEBB டெலஸ்கோப் ஹிஸ்டரி!
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் விட்டம் -21.3 அடி(6.5மீ).
வெப் டெலஸ்கோப் எடை - 6500 கி.கி
ஹப்பிள் டெலஸ்கோப்பைவிட எவ்வளவு பெரியது -2.75%
பூமியிலிருந்து ஆய்வு தூரம் - 1.5 மில்லியன் கி.மீ
விண்வெளிப் பயணம் - அக்டோபர் 2018
விண்வெளி ராக்கெட் - Ariane 5 ராக்கெட்(ஐரோப்பா உபயம்)
கூட்டுறவு - கனடா(CSA), ஐரோப்பா(ESA)
டெலஸ்கோப் உள்ளே -  கேமரா, ஸ்பெக்ட்ரோமீட்டர்,கிரையோகூலர்(டிடெக்டர் கூலர்).
வாழ்நாள் - 10 ஆண்டுகள்(குறைந்தது 5 ஆண்டுகள் உறுதி)



 2
யார் இந்த ஜேம்ஸ் வெப்?

ஜேம்ஸ் .வெப்(1906-2002), நாஸாவின் அப்பல்லோ விண்கலங்களை உருவாக்க உதவிய, அதன் இரண்டாம் நிர்வாகி. நிலவில் மனிதர்கள் கால் வைக்கும் வரலாற்றுச்சாதனைக்கு இவரும் ஒரு காரணம். தன் பணிக்காலத்தில் 75 விண்கலங்களை ஏவிய சாதனைக்கு அங்கீகாரமாக 2002 செப்டம்பர் 10 இல் டெலஸ்கோப்புக்கு வெப் என பெயர் சூட்டப்பட்டது