மருந்து கொண்டு செல்லும் மோலிகுலர் எந்திரன்கள்-.-கா.சி.வின்சென்ட்.



மருந்து கொண்டு செல்லும் மோலிகுலர் எந்திரன்கள்-.-கா.சி.வின்சென்ட்.

இன்றைய உலகில் ட்ரோன் விமானம் மூலம் பீட்ஸாக்கள், சாப்பாடு விநியோகிப்பது, பாதுகாப்பு கண்காணிப்பு, ஹோட்டல்களில் உபசரிப்பு வரை பல இடங்களிலும் எந்திரன்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. பிறகு மருத்துவத்தில் மட்டும் எதற்கு  தயக்கம் என துணிந்து களமிறங்கிவிட்டனர் ஜப்பான் விஞ்ஞானிகள். அறிவியல் வளர்ச்சியே இனி எந்திரன்கள் சார்ந்துதான் போல.

ஜப்பானின் ஹோக்கைடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சிறிய வகை (மோலிகுலர்)எந்திரன்களை இயற்கையான பொருட்களின் மூலம் உருவாக்கியுள்ளனர். இதனை மூலக்கூறு எந்திரன்கள் என்று கூறலாம். இதனைப் பயன்படுத்தி உடலின் பல்வேறு இடங்களுக்கு தேவையான மருந்தை எடுத்துச்செல்ல பயன்படுத்தலாம் என தீர்மானித்துள்ளனர்.

ஹோக்கைடோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள இந்த மூலக்கூறு எந்திரன்கள் படிகம் போல நீல நிறத்தில் நகர்ந்து செல்கின்றன. நீரில் எளிதில் இவை மிதந்துசெல்லக்கூடிய திறன் வாய்ந்தவையாகும். ஒளி மூலம் இதனை எளிதில் கட்டுப்படுத்தவும் முடியும்.

இந்த சிறிய எந்திரன்கள் உருவாக்கப்படுவது முழுக்க இயற்கை முறையில்தான் என்பது ஆச்சரியம்தானே! இயற்கை முறை சாயமான அஸோபென்ஸென் மற்றும் சமையல் எண்ணெயில் காணப்படும் அலெய்க் அமிலம் ஆகியவை இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை நுண்ணோக்கி வழியே ஆராய்ந்தபோது இவை வளைந்த, வளையாத எனும் இருநிலைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றிலுள்ள அஸோபென்ஸென் அடர்த்தி வளைவுத்தன்மைக்கு காரணமாகிறது. இதன் ஒளிர்வுத்தன்மை கூடினால் அசைவுகளும் கூடுகின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

திரவப்பரப்பிலும் எளிதாக நகரக்கூடிய தன்மையை மூலக்கூறு எந்திரன்கள் கொண்டுள்ளதால் உடலின் நோயுள்ள இடத்திற்கு மருந்தினை கொண்டு செல்ல எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் துல்லியத்தன்மை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் திறனுக்கு சான்று கூறுகிறது.

 இதன் செயல்பாடு அசைவுகளை சோதித்து பார்த்தபின்,  இந்த எந்திரன்கள் எதிர்காலத்தில் உயிரினங்களின் உடலில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு. இந்த தொழில்நுட்பம் மருத்துவத்தில் பெரிதும் பயன்படும் என நம்பிக்கையோடு பேசி எனர்ஜி தருகிறார் ஆராய்ச்சியின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான யோஷியுகி காகேயமா.

தற்போது சோதனை நிலையில் திரவபரப்புகளில் செயல்பட்டு வரும் இந்த மூலக்கூறு எந்திரன்கள் உடனே சந்தைக்கு கொண்டுவர ஹோக்கைடோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் விரும்பவில்லை  என்றாலும் விரைவில் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி வந்தால் மாத்திரைகளை விழுங்கிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.