பசுமை பேச்சாளர்கள் 15 சான்ட்ரா ஸ்டெய்ன்கிராபர் ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் 15
சான்ட்ரா ஸ்டெய்ன்கிராபர்.அன்பரசு


அமெரிக்காவைச் சேர்ந்த சான்ட்ரா ஸ்டெய்ன்கிராபர் சுற்றுச்சூழல் எழுத்தாளர், வழக்குரைஞர் என்பதோடு புற்றுநோயிலிருந்து மீண்டவரும் கூட.

மனிதர்களின் உடல்நலனுக்கும் சூழலுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற சான்ட்ரா, 1959 ஆம் ஆண்டு பிறந்தவர். Living Downstream என்ற நூலின் மூலம் சான்ட்ரா புற்றுநோய் பதிவுகளை ஆராய்ந்து, அந்நோய் ஏற்படுவதற்கான காரணங்களை பட்டியலிட்டு எழுதியது சூழலியல் உலகில் இவரை கவனப்படுத்தியது. இந்நூல் 2010 ஆம் ஆண்டில் டாகுமெண்ட்ரி படமாக உருவாகி ஏராளமான விருதுகளை வென்றது.

"நாம் அனைவரும் ஆர்க்கெஸ்ட்ரா போல. நமக்கான இடத்தை அறிந்து கருவியை பயன்படுத்தி உலகை காக்கவேண்டியது அவசியம்" என முழங்கும் சான்ட்ரா, தன் பால்யத்தை இலினாய்சிலுள்ள டாஸ்வெல் கன்ட்ரியில் கழித்தவரின் வளர்ப்பு தந்தை பேராசிரியர், தாய் நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர். உயிரியல் பட்டத்தை வெஸ்லேயன் பல்கலையில் நிறைவு செய்தவர், கள ஆராய்ச்சியாளராக பல ஆண்டுகள் பணிசெய்தவர். தன் 20 வயதில் சிறுநீர்ப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர், சுற்றுச்சூழலின் மீது ஆழ்ந்த கவனம் கொண்டு மக்களுடன் போராடுவதும் சிறைசெல்வதும் வாடிக்கை. சான்ட்ராவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் குரு, 'சைலண்ட் ஸ்பிரிங்' நூலை எழுதிய சூழலியலாளர் ரேச்சல் கார்சன்.

"விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுவதால் நான் ஹீரோ ஆகிவிடமுடியாது. இயற்கை விவசாயிகள்தான் நிஜ ஹீரோக்கள்.பள்ளிகளிலிருந்து, நகர கவுன்சில் வரை மக்கள் தங்கள் பிரச்னைகளை நச்சுக்கள் இல்லாத நீரை, நிலத்தை, கேட்பது தம் உரிமை என்பதை உணரவேண்டும் என்பதே என் ஆசை." என்று உணர்ச்சி பெருக பேசும் சான்ட்ரா, Ecowatch, Orion உள்ளிட்ட இதழ்களில் சூழல் குறித்த அற்புதமான கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவருபவர். அறிவியல் எழுத்துக்காக 2012 இல் ஹெய்ன்ஸ் விருது வென்றவர், பரிசுத்தொகையை இயற்கை எரிவாயு எதிர்ப்பு இயக்கத்திற்கு வழங்கிய அர்ப்பணிப்பான மனிதர் சான்ட்ரா. "நான் மக்களுக்கு அட்வைஸ் செய்ய விரும்பவில்லை. என் வாழ்வை எழுத்துவழியே உள்ளது உள்ளபடியே முன்வைக்கிறேன். அவ்வளவுதான். மாற்றத்தை இவ்வழியே தொடங்குகிறேன்" என்கிறார் ஆச்சரிய சூழல் பெண்மணி சான்ட்ரா.

நன்றி: முத்தாரம் வார இதழ்   

பிரபலமான இடுகைகள்