சீனாவின் பசுமை அரசியல்! - கார்பனை அடிப்படையாக கொண்ட காலனியாதிக்க முறை வளருகிறதா?









சீனா, ஆசிய அளவில் பெரிய பொருளாதார சக்தி. அதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் அந்நாட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இழிவும் அவதூறும் செய்து வருகின்றன. அதில் முக்கியமானது. மாசுபாடு தொடர்பானது. இந்தியா, கருத்தியல் அல்லது பொருளாதார அளவில் கூட சீனாவின் அருகே நிற்க முடியாத நாடு. ஆனால் தொடர்ச்சியான சீனாவுடன் அதை ஒப்பீடு செய்து தாழ்வுணர்ச்சி கொண்ட ஆய்வாளர்கள் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் கிடைக்குமோ அவர்களது மனதிற்கே தெரியும்.




இந்தியா தலைநகரான டெல்லியில் கூட மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் மிக குறைவு. சீனாவில் மாசுபாடு பாருங்கள் இதோ என புகைப்படங்கள் எடுத்த மேற்குலகு கூட இப்போது சீனாவில் மாசுபாடு வெகுவாக கட்டுப்பட்டிருப்பதை ஏற்க முடியாவிட்டாலும் நெசந்தானுங்க அய்யா என ஒருவழியாக ஒப்புக்கொள்ள தலைப்பட்டிருக்கிறார்கள். பொறாமையும், வயிற்றெரிச்சலும் மட்டுமே ரு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது.




சூழியல், காலநிலை மாற்றம் ன்பன மக்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளன. கார்பன் பற்றிய மாநாடுகள் வருடம்தோறும் நடந்துகொண்டே வருகின்றன. பயன்? பெரிதாக ஏதும் கிடையாது. யார் எப்படி கார்பனை குறைக்கவேண்டும் என்றால் கூட பலரிடமும் பதில் கிடையாது. மேற்குலக நாடுகள் பதிலைத் தேடக்கூடாது என்ற நிலையில் உறுதியாக உள்ளனர். வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளைப் பார்த்து உங்களால்தானே இந்த நிலைமை நீங்களே சரிசெய்துகொள்ளுங்கள் என்கிறார்கள். வடக்கிலுள்ள நாடுகள், தெற்கிலுள்ள நாடுகளைப் பார்த்து நீங்கள் கார்பனை குறைக்கவேண்டும் அல்லாதவரை நான் குறைக்கமாட்டேன் என முரண்டுபிடிக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு கார்பனைக் குறைக்க நிதியைக் கொடுக்கவேண்டும் என முடிவானது.




சீனா, காலநிலை மாற்றம் சார்ந்து அதிகம் விவாதிக்கப்ட்டு விமர்சிக்கப்படுகிற நாடு. தன்னைப் பற்றி பிற நாடுகள் பேசுவதை அந்த நாடு கருத்தில் கொள்ளாமல் இருக்கிறது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. சீனாவிலேயே கார்பன் அளவு உயர்வதைப் பற்றிய சூழியல் நூல்கள் ஏராளம் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்நாட்டு மக்களும் அவற்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வும் உள்ளது. மேற்குலக நாடுகள், கார்பனை வைத்து காலனியாதிக்கத்தை மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள் என்று வெளிப்படையாக அரசியல் பேசி அதிர வைக்கும் நூல்களும் உண்டு.




மேற்குலகினர், தங்களை புத்திசாலியாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, மாசுபாடு ஏற்படுத்தும் தொழில்துறையை அப்படியே மடைமாற்றி மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றிவிடுகிறார்கள். மாசுபாடு அந்த நாட்டு ஏழை மக்களுக்கு, கரன்சி மட்டும் மேற்கு நாடுகளுக்கு டீல் எப்படி இருக்கிறது. சீனாவில் முத்து ஆறு பொருளாதார மண்டலத்தில், உலக நாடுகளில் விற்கும் அறுபது சதவீத பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதலாக நாற்காலிகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள், காலணிகள், வாகன பாகங்களும் உற்பத்தியாகின்றன. மேற்குலகிற்கு குறைந்த விலையில் பொருட்கள் வேண்டும். ஆனால் மாசுபாடு என்ற விவாதம் வந்துவிட்டால், அதோ பாருங்கள் அவன்தான் இதற்கு காரணம் என சீனாவைக் கைகாட்டிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். பின்னே நாகரிகமான ஜென்டில்மேன்கள் அப்படித்தானே நாட்டில் வாழ்கிறார்கள்?




ஒரு நாட்டின் அரசு, மக்களுக்கு வேலைவாய்ப்பை தொழில்துறை மூலமே உருவாக்க முடியும். குறிப்பாக உற்பத்தித்துறை. அதில் மாசுபாடு அதிகம் ஏற்படுகிறது என்பது உண்மை. உற்பத்தித்துறை மட்டுமல்ல இன்று உலகளவில் உள்ள பசுமை ஆற்றல் பொருட்களை சீனாவே உற்பத்தி செய்து வழங்குகிறது. பைடு என்ற நிறுவனத்தின் கார்கள், மேற்குலக கார் நிறுவனங்களை விட மலிவு, அதேசமயம் தரத்தில் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. ஆனால், இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனத்தின் கார் விற்பனையை தடுத்து நிறுத்த இறக்குமதி வரி உயர்வு, தேசபாதுகாப்பு என அழுகுணி ஆட்டத்தில் மேற்கு நாடுகள் இறங்கி வருகின்றன. இதில் நகைமுரண், என்னவென்றால் சீனாவிலிருந்து பெரும்பாலான நாடுகள் பசுமை ஆற்றல் தொடர்பான பொருட்களை வாங்கி வருகின்றன என்பதுதான்.




சோலார் பேனல்கள் உலகில் மூலை முடுக்கெங்கும் பரவி வருகின்றன. தீராத இயற்கை வளமான சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனைத்து நாடுகளுமே முயன்று வருகின்றன. கரிம எரிபொருட்கள் தீர்ந்துவிடக்கூடியவை. அவற்றை இறக்குமதி செய்வதற்கு குறிப்பிட்ட நாட்டின் நாணயத்தை நம்பியிருப்பது தற்சார்பை பாதிக்கக்கூடியது. எனவே, சோலார் பேனல்களை வாங்கி வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்தால் நாடு எளிதாக தன்னிறைவு பெறும் வாய்ப்பு உள்ளது. மணலில் உள்ள சிலிகான் என்ற கனிமத்தை அடிப்படையாக கொண்டே சோலார் பேனல் தயாரிக்கப்படுகிறது. இதை எடுப்பதற்கு செய்யும் முயற்சிகள் அனைத்துமே நிறைய மாசுபாட்டை ஏற்படுத்துகிறவைதான். சிலிகோகுளோரோஃபார்ம், குளோரின் வாயு, கழிவு நீர், இதர பயனற்ற வாயுக்கள் என மாசுபாடுகள் நிறைய உள்ளன. ஆனால், முதலீடுகளை ஈர்க்கும் வேகத்தில் சீன அரசு, மாசுபாடுகளை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. சூழல் சார்ந்த கட்டுப்பாட்டு திட்டங்களும் முறையாக தீவிரமாக கடைபிடிக்கப்படுவதில்லை.




சோலார் உற்பத்திக்கு சீன அரசு பெருமளவு உதவிகளை வழங்கி வருகிறது. சோலார் பேனல்களை தயாரித்து உலகிற்கே அளிக்கும் நாடு, அதன் மக்களின் உழைப்பிற்கு என்ன கௌரவத்தை அளிக்கிறது என்று பார்த்தால் விடையைக் கண்டறியவே முடியாது. மக்களுக்கான சேவை, நாம் மக்களுக்கான சேவைகளை வழங்குகிறோம் என பேனர்களை மாட்டிக்கொண்டு தன்னைத்தானே புகழ்ந்துகொண்டால் அதை புத்திசாலித்தனம் என எவராவது கருதுவார்களா என்ன?




கார்பன் அளவை குறைப்பது என்பது தினசரி வாழ்வில் மக்களுக்கு உதவக்கூடியதா, அல்லது பசுமை அரசியல் கொள்கையா? இதை வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சீன அரசு முயல்கிறதா என்ற கேள்வியை சீன எழுத்தாளர்கள், சூழியல் நடவடிக்கை தொடர்பாக எழுப்பி வருகிறார்கள். சீனவாசிகள் சிலர், சூழியல் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டு தங்களது கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். சீனமொழி நூல்களை எதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று இந்த இடத்தில் யோசிக்கவேண்டும்? அந்த நூல்கள் உள்நாட்டு மக்களுக்கானவை என்றாலும் கூட கேட்கும் கேள்வி அனைத்து உலக நாடுகளுக்குமானது.




புதுப்பிக்கும் ஆற்றல் சந்தையில் சீனாவின் பங்கு பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் வங்கிகளில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு நிதி பெற்று வருகிறது அரசு. உலகளவில் சீன அரசு, இத்துறையில் முன்னிலையில் உள்ளது. ஆனால், இது அந்நாட்டு மக்களின் தேவையை தீர்க்குமா என்றால் சந்தேகம்தான். திபெத்தில் கூட பிரம்மபுத்திரா ஆற்றின் மீது பெரிய அணையைக் கட்டி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க சீன அரசு திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவுக்கு இது அதிர்ச்சியான தகவலாக இருந்தாலும், சீன அரசு திட்டமிட்டால் அதை உறுதியாக நின்று செய்துமுடிக்கும் மனத்திடம் கொண்டது. வெறும் பேச்சு மட்டுமே நடைமுறை பிரச்னைகளைத் தீர்க்காது என சீனர்கள் அறிவர்.




சீன அரசு, கச்சா எண்ணெய்யை பெருமளவு இறக்குமதி செய்து வந்தது. தேவை அதிகரித்து வந்தது. அதற்கேற்ப அரசால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, மின்சார உற்பத்தி தடுமாறி வந்தது. சிறுகுறு வணிகம் நடத்தமுடியாமல் போன சம்பவங்கள் எல்லாம் நடந்தன. மின்சாரம் தடைபட்டுப்போன சம்பவங்கள் 2005ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு கொள்கையில் சாதாரண மாத ஊதியம் வாங்கும் சாமானியனின் பங்கு என்னவாக இருக்கும்? வாங்கும் சம்பளம் எல்லாமே விலைவாசி உயர்வில் காணாமல் போய்விட என்ன செய்வது என திகைத்து நிற்பதைத் தவிர அவனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. பொம்மை, ஐடி சேவைகள், போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை என அனைத்துமே திடீரென கட்டணம் கூடியது என்றால் யாருக்குமே திகைப்பாகத்தானே இருக்கும்?




அதுபோன்ற சூழ்நிலைகளை சீனா கடந்து வந்துதான் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. ஒரு கட்சி சர்வாதிகாரம் என்று பேசுபவர்கள், அந்த நாடு கலாசார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, பொருளாதார ரீதியாக எப்படி மேம்பட்டுள்ளதை தெரிந்து மறந்துவிடுகிறார்கள். சூழல் சார்ந்த பிரச்னைகளிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அடிப்படையாக சூழல் சார்ந்த ஆர்வமும் முனைப்பும் சீனாவில் குறைவு. அதுகூட தற்காலிகமான நிலைதான். இந்த நிலையும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

செம்மை செய்யப்படாத கட்டுரை.
















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்