மக்களின் புகார்களை பரிசீலித்து தீர்த்து வைக்க முயலும் அமலாக்கத்துறை! என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் - சீன தொடர்
என்ஃபோர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட்
சீன தொடர்
40 எபிசோடுகள்
யூகு ஆப்
சீனதொடர்களைப் பொறுத்தவரை இழு இழுவென இழுக்குதடி என பார்வையாளர்கள் சொல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களே நாற்பது எபிசோடுகள் அவர்களாகவே போய்விடுகிறார்கள். இதில் உள்ளூர் ஓடிடியான யூகு சில எபிசோடுகளை இலவசமாகவும் மீதி அனைத்தையும் விஐபி என சந்தா கட்டி பார்க்கும்படி மாற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் இத்தொடரின் பதினெட்டு எபிசோடுகள் மட்டுமே யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது.
பதினெட்டு எபிசோடுகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரிந்துகொள்ளலாம். கு லின், நீதிபதியாக இருக்கிறார். சட்டம் பற்றிய பரவலான அறிவுக்காக ஆறுமாதங்கள் வேறு துறையில் வேலை செய்வதற்காக பணிக்கிறார்கள். அப்படி அவர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு அதன் தலைவர் நீதிபதி சு என்பவரோடு முட்டல், மோதல் ஏற்பட்டு பிறகு உறவு நட்பாகி காதலாக மாறவும் தொடங்குகிறது. காதலுக்கு போகவேண்டாம். மக்கள் சேவையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
எழுதி வைத்த சட்டமே பிரதானம். அதை உரியபடி நிறைவேற்றினால் போதும் என இறுக்கமாக நடந்துகொள்கிறார் சு.கு லின், சட்டம் இருக்கிறபடி இருக்கட்டும். அதில் எளிய மக்களுக்கு ஏதேனும் நல்ல விஷயத்தை செய்யமுடியுமா என யோசிக்கிறார். வழக்கு பதிந்தவர், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என இரு தரப்பினரும் சட்டத்தை புரிந்துகொண்டார்களா இல்லையா என யோசிக்கிறார். அதுதான் அவரை வேறுபட்டவராக மாற்றுகிறது. சு தலைமையிலான குழுவில் மனசாட்சி உள்ள வசதியான நீதிபதியாக உள்ள பெண், கு லின் பக்கம் ஆரம்பம் முதலே நிற்கிறாள். அவளுக்கு செல்வந்த அப்பா இருந்தும், போர்ச் காரில் வேலைக்கு வந்தாலும் நீதியுணர்வு உள்ளது. வறட்டுத்தனமான எழுதி வைத்த சட்டங்களில் ஏதுமில்லை என்பதை நம்புகிறாள்.
நீதிபதி சுவோடு சண்டைபோட்டு, அவள் தீர்க்க முடியாத வழக்கை நீதிபதி கு லின் தீர்த்து வைக்க முயல்கிறார். கூடவே பணக்கார நீதிபதி பெண் உதவிக்கு வருகிறாள். அந்த வழக்கு எப்படி தீர்க்கப்படுகிறது என்பதை நெகிழ்ச்சியோடு காட்டியிருக்கிறார்கள். சீனாவில் உள்ள அமலாக்கத்துறை, வழக்குகளை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் யோசித்து தீர்க்கிறது. இந்த நேரத்தில் அரசியல் பழிவாங்குதலுக்கு பயன்படும் இந்திய அமலாக்கத்துறை நினைவுக்கு வந்து தொலையப்போகிறது. அந்த நினைவு, இந்த தொடரைப் பார்க்கும் மனநிலையைக் கெடுத்துவிடும்.
கு லின் அந்த வழக்கைத் தீர்த்தபிறகு, குடும்பம் ஒன்றாக சேர்ந்துவிடுகிறது. புகார்தாரர் தனது மகனோடு வந்து பாராட்டிவிட்டு பாராட்டு சான்றிதழாக பேனர் ஒன்றை பரிசளித்துவிட்டு போகிறார். அந்த சந்தர்ப்பத்திலும் கு லின், தனது துறைத்தலைவரான சு எடுத்த முயற்சியே காரணம் என கிரடிட்டை அந்தப்பக்கம் தள்ளிவிடுகிறார். எனவே சு, இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி கொள்கிறார். கு லின்னின் அணுகுமுறையைப் பாராட்டுகிறார். இப்படியாக இருவரின் உறவு தொடங்குகிறது.
கு லின் நேர்மையான ஆள்தான். ஆனால், தொடக்க காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் சரியாக பொருத்தமாக இல்லை. சட்டத்தை கடைபிடிப்பவர், எதற்கு சக அதிகாரியிடம் தான் அனாதை, அத்தை எடுத்து வளர்த்தார் என கதை பேசிக்கொண்டிருக்க வேண்டும். சட்டப்படி, அத்தையை சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவரைப் பார்க்க தேவையான நடைமுறையை செய்தால் முடிந்தது. வளவளவென செல்வதால், தொடக்கத்தில்தான் சங்கடமாக இருக்கிறது. நாயகி சு,எதற்கும் வளைந்து கொடுக்கும் ஆள் இல்லை. சட்டம் என்றால் சட்டம் திட்டம் என்றால் திட்டம். எந்த சமரசமும் இல்லை என இயங்குகிறார். அதுதான் சரி. ஆனால், அதில் எந்த நெகிழ்வுத்தன்மையும்,மனிதநேயமும் இருப்பதில்லை.
முதல் வழக்கை எடுத்துக்கொள்வோம். அப்பாவின் சொத்து மீது மகன் வழக்குதொடுக்கிறான். அதில் வெல்கிறான். அதில், அப்பா, தனது இளைய மகளோடு சொந்த வீட்டில், பென்சன் பணத்தில் வாழ்கிறார். அப்பாவோடு சண்டை போட்டு மகன் உணவகம் ஒன்றை வைத்து நடத்துகிறார். கூடவே கர்ப்பிணியான மனைவியும் இருக்கிறார். நீதிபதி சு வழக்கில் சொத்து பிரிப்பது தொடர்பான முடிவுக்கு உதவுகிறார். ஆனால், அந்த முடிவு புகார்தாரருக்கு என்ன பலன் கொடுத்தது என்று அறிய மறுக்கிறார். கு லின் இரு தரப்பிலும் விசாரித்து பிரச்னைகளை தீர்த்து குடும்பத்தை ஒன்றாக சேர்த்து வைக்கிறார். இதற்காக துறைத்தலைவர் சுவோடு கடுமையான சண்டை போடுகிறார்.
தொழில் ரீதியாக இப்படியான பிரச்னைகள். தனிப்பட்ட ரீதியாக பார்ப்போம். நீதிபதி கு லின்னுக்கு பெற்றோர் கிடையாது. பெண்தோழி கிடையாது. சொகுசு சைக்கிள் ஒன்றில்தான் அலுவலகம் வருகிறார். மாமா, அத்தை, அத்தை மகன் உண்டு. அத்தை மேல் பிரியம் அதிகம். அத்தை காசு செலவு செய்து படிக்க வைக்கிறார். பதிலுக்கு கு லின் தனது சொத்தை விற்று அத்தைக்கு கடை வைத்துக் கொடுக்கிறார்.பன்றி இறைச்சிக்கான சிறப்பு உணவுக்கடை அது. கு லின் நன்றாக படித்து மேலே வந்தாலும் அவருடைய தம்பி சூதாட்டம், பங்குச்ச்ந்தை முதலீடு, கந்துவட்டி்க்கடை, ஸ்னூக்கர் ஆட்டம், மதுபானம் என வாழ்கிறார். படிப்பும் வரவில்லை. நல்ல பழக்கமும், நண்பர்களும் இல்லை. கு லின்னுக்கு வரும் பிரச்னைகளுக்காக அத்தை பையன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்தை மகனை குற்றத்தில் தொடர்படுத்தி அதை வைத்து நீதிபதி கு லின்னை மோசடியாக தீர்ப்பு கூறுமாறு சிலர் கட்டாயப்படுத்துகிறார்கள். கு லின் இந்த பிரச்னையிலிருந்தும் ஸ்மார்ட்டாக தப்பிக்கிறார். ஆனால், அவரது அத்தை சிறையில் இருக்கும்படி ஆகிறது. அந்த விவகாரத்தில்தான் சு, கு லின் மோதல் தொடங்குகிறது.
அமலாக்கத்துறையின் குற்றப்பிரிவில் வேலை செய்யும் அனைவருமே நீதிபதியாக தேர்வெழுதி வந்தவர்கள். அனைத்து விவகாரங்களையும் மூளையால் தீர்ப்பவர்கள். அடிதடி செய்தல்ல. அதையும் மேலதிகாரிகள் உறுதியாக வலியுறுத்துகிறார்கள். அடிதடி விவகாரத்தை காவல்துறை ஆட்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் நீதிபதிகளை ஒப்பிட்டால், அவர்கள் சற்று வேகம் குறைந்த மந்த புத்தி மனிதர்கள். நீதிபதியில் ஒரு பெண் அடிதடியில் புகழ்பெற்று இருக்கிறாள். அவள்தான் யாராவது அடிக்க வந்தால், உடனே பதிலடி கொடுத்து சண்டையைத் தொடங்குகிறாள். கை, கால்களை உடைத்து சண்டையை முடித்தும் வைக்கிறாள்.
வழக்கு தீர்ந்து, அதற்கு பாராட்டும் கிடைக்கிறபோது நீதிபதிகள் குழு மெல்ல இரண்டாக பிரிகிறது. நீதிபதி கு லின் பக்கமே ஆதரவு அதிகம். மொத்தம் குழுவில் ஏழுபேர், தலைவர் சு உட்பட மூன்று பெண்கள், நான்கு ஆண்கள்.
கல்லூரி பெண்களுக்கு கடன் கொடுத்து அவர்களை நிர்வாணமாக படமெடுத்து பிறகு வாடகைத்தாயாக மாற்றும் மோசடி வழக்கு சற்று சிக்கலானது. அதில் கூட அமலாக்கத்துறை, பொதுமக்கள் பாதுகாப்புத்துறையிடம் ஆதாரங்களை ஒப்படைத்துவிடுகிறது. முழுமையான தீர்வு ஏதும் இல்லை. ஓவியர் யான் டி வழக்கு காதல், அதில் சந்திக்கும் துரோகம், விரக்தி பற்றியது. அதை சு உணர்ந்து நொந்து போகிறார். அதிலும் வழக்கு கடல் கடந்து இந்தோனேஷியா வரை செல்கிறது. சீன ஓவியரின் ஓவியங்களை அறக்கட்டளை பெயரில் வெளிநாடுகளுக்கு கடத்துகிறார்கள். அதை சீன அமலாக்கத்துறை தடுக்கிறது. வழக்கு போட்டு குற்றவாளிகளை சிறையில் தள்ளுகிறது. இன்னொரு வழக்கு, சொகுசு காரில் சென்று ஏழைப் பெண்ணை இடித்துத் தள்ளிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுக்க மறுக்கும் பணக்கார வீட்டுப்பிள்ளையுடையது. அதில், பணக்கார தந்தையின் வாதம் வேதனையும் வலியும் கொண்டது.
இந்த நேரத்தில் கு லின்னின் அத்தை மகன் மீண்டும் மீண்டும் குற்றப்பாதையில் பயணிக்கிறார். அத்தைக்கு தான் எடுத்த வளர்த்த உறவுக்காரப் பிள்ளை கு லின் நேர்மையாக இருக்கிறான். தன் பிள்ளை தறுதலையாக போய்விட்டானே என வருத்தம். மூத்த பிள்ளை கு லின். இளைய பிள்ளை அவருடையது என்ற பாசம் உள்ளது. இவருக்கு மாறாக கணவர், சொந்தப் பிள்ளை மீது அதிக அக்கறை கொண்டவராக இருக்கிறார். ஆனால், அப்பையன் நேர்மையான ஒரு செயலைக் கூட செய்வதில்லை.
மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அமலாக்கத்துறை என்பது புதிது. உண்மையில் நிலைமை எப்படியோ, புனைவு கதையாக பார்க்கும்போது பரவாயில்லை. இந்தியாவில் பிரச்னையை அவர்களாகவே உருவாக்கி வருகிறார்கள்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக