பிழைத்திருப்பதே முக்கியம் என நம்பி வாழும் உளவாளியின் கதை!

 

 

 

 

 

பிளட் டீமன்
சீன காமிக்ஸ் தொடர்

முரிம் கூட்டமைப்பில் உளவாளியாக உள்ள தீயசக்தி இனக்குழுவின் உளவாளி பிடிபட்டு கொல்லப்படுகிறான். சாகும் அவன் நான் இப்படி இறந்திருக்கக்கூடாது என நினைக்கிறான். அவனது ஆவி, பல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. தீயசக்தி இனக்குழுவால் பிடிபடுவதற்கு முன்னர், ஒரு விடுதியில் வாழ்கிறான். அவனுடன் இரட்டையர் இருவர் இருக்கிறார்கள். அங்கு, வரும் தீயசக்தி இனக்குழுவினர் குழந்தைகளை, இளைஞர்களை பிடித்துச் செல்கிறது. கடத்துகிறார்கள். நாயகன் தப்பியிருக்கலாம். ஆனால், அவனுக்கு பிரியமான சிறுவனைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி முன்னர் நடந்தது போலவே தீயசக்தி குழுவிடம் மாட்டிக்கொள்கிறான். ஆனால் இங்கு நடக்கும் விஷயங்கள் வேறு. இவன் அம்மாவின் பரிசாக வைத்திருக்கு்ம குறுங்கத்தி, அந்த கத்தியில் வாழும் தேவதை மூலமாக இருவரைக் கொல்கிறான். பிறகு பிடிபட்டு தீயசக்தி குழுவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

நாயகனுக்கு ஏற்கெனவே தீயசக்தி குழுவில் உளவாளியாக இருந்த அனுபவம்,பத்தாண்டு தகவல் சேகரிப்பு என கூடுதல் பலம் உள்ளது. அதை பயன்படுத்தி தன்னை தீயசக்தி இனக்குழுவினர் கொல்வதை தடுத்துக்கொள்கிறான். அவன் கற்ற வாள்வீச்சு கலை சார்ந்த சக்தி உடலில் உள்ளது. அதன் மூலம் வாள் ஆன்மா என்ன பேசுகிறது என்பதை அறிந்துகொள்கிறான். பெரும்பாலும் அவனுக்கு வரும் ஆபத்துகளை வாள் ஆன்மா முன்னரே கண்டுபிடித்துக் கூறி உதவுகிறது. இளம் வயதில் அவனுக்கு சதியால் நேரும் விபத்து காரணமாக ஆன்ம ஆற்றல் அழிந்துபோகிறது. அதாவது தற்காப்புக்கலையைக் கற்க முடியாது. அதை வைத்தே அவனை வீட்டில் இருந்து அடித்து துரத்திவிடுகிறார்கள். பிறகுதான், தீயசக்தி இனக்குழுவின் தாக்குதல் நடக்கிறது.

நாயகனை தாழ்நிலை, மத்தியநிலை, உயர்நிலை என்பதில் தாழ்நிலையில் தள்ள சிலர் முயல்கிறார்கள். ஆனால், அவனோ தனது கடந்த ஜென்மத்தில் கிடைத்த தகவல்களை கேப்டன் ஒருவருக்கு சொல்லி அவரின் கடத்தப்பட்ட மகளைக் காப்பாற்ற உதவுகிறான். அதன் வழியாக மத்திய நிலை பட்டையைப் பெறுகிறான். ஆனால், அப்போது அந்த இடத்திற்கு வரும் நான்காவது சுப்ரீம் தலைவர் மூன்று பேர்களை தூக்கிக்கொண்டு தனது குகைக்கு செல்கிறார். அவருக்கு தனக்கே தனக்கேயான மாணவர்களை உருவாக்கும் ஆசை உள்ளது.
பொதுவாக மற்றவர்களைப் போல மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசை அவருக்கு முன்பு கிடையாது. ஆனால் இனக்குழுவை வலிமைப்படுத்த மூவரைத் தேர்ந்தெடுக்கிறார். நான்காவது தலைவர், நாயகனின் உடலிலுள்ள குறைபாட்டைக் கண்டுபிடித்துவிடுகிறார். ஆனாலும் அவனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார். இறந்துபோன தெற்குவாள்வீரனுடன் நேருக்கு நேராக சண்டையிட முடியாத வருத்தம் நான்காவது தலைவருக்கு இருக்கிறது. அவர் இறந்துபோனதால், அவரது வாள் வீச்சு கலை நூலை திருடி வந்து நாயகனுக்கு கற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு செலவிடும் சக்தி, அவனது உயிர்சக்தி. தற்காப்புக்கலை வீரர், உயிர்சக்தியை பயன்படுத்தி சண்டையிட்டால் அவரது ஆயுள் குறைந்துவிடும். நாயகன் அதை மறுத்தாலும் கூட நான்காவது தலைவர், தனது மாணவர்களோடு அவனை ஒரு மாத இடைவெளியில் சண்டையிட வற்புறுத்துகிறார்.

நான்காவது தலைவர், வெளிப்புற கலைகளில் தேர்ந்தவர். அதாவது அவர் தோற்றமே ஒரு பழங்குடி தலைவர் போன்று உள்ளது. அவரின் தாக்குதலும் கூட மல்யுத்தம் போன்றதுதான். ஆயுதங்கள் தாக்காதபடி உடலை தங்கநிறத்தில் மாற்றிக்கொண்டு சண்டையிடும் ஆள். அவருக்கும் நாயகனுக்கும் நெருக்கமான உறவு உருவாகிறது. சோ ஹான்வி, தெற்குவாள் வீரரின் வாள் ஆன்மா சொல்லிக்கொடுக்கும் பயிற்சி முறைகளை பழகுகிறான். அவனுக்கு இதில் உள்ள சவால், போட்டியிடும் எதிரிகளுக்கு இவனது வாள் பயிற்சி தெரியும். அதன் பலவீனங்களை நான்காவது தலைவர் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் வாள் பயிற்சி பற்றி அவருக்கு ஏதும் தெரியாது. அவர் வாளை எதிர்த்து வெறும் கைகளால் சண்டை போடுபவர். இப்படி அனைத்துமே பாதகமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில், தன்னை மூலிகைகள் மூலம் வலுப்படுத்திக்கொண்டு சண்டையிடுகிறான். உண்மையில், அந்தப்போட்டி எளிதானதாக இல்லை. அனைத்து வழிகளிலும் அப்போட்டி சோ ஹூன்விக்கு எதிரானது. பாகுபாடானதும் கூட. அவன் நண்பனே அவனைக் கொல்ல முயன்று தாக்குதல் நடத்தினாலும் அவனை இறுதியாக தனது சக்தியைக் கொடுத்து காப்பாற்றுகிறான். அப்போட்டி வரை சோ ஹூன்வியை மாணவன் என்றெல்லாம் நான்காவது தலைவர் கூறவில்லை. ஆனால் அப்போட்டியில் அவர் இரு விஷயங்களை சாதிக்கிறார். ஒன்று, தான் தோற்கடிக்க வாய்ப்பு கிடைக்காத தெற்குவாள்வீரரின் கலையை, தனது மாணவனாக உள்ள நிலையில் சோ ஹூன்வி கற்பது. இந்த நிலையில் அவர் தெற்குவாள்வீரனை வென்றதாக நினைக்கிறார். தனது மல்யுத்த கலையை இரு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள் மூலம் தெற்குவாள்வீரரின் கலையைப் பயின்ற, சோ ஹூன்வியை வெல்ல நினைக்கிறார். அது நடக்கவில்லை. அதேநேரம் போட்டியில் சோ வெல்லும் சூழலில் போட்டியை சமநிலை என்று சொல்லி தடுத்து நிறுத்திவிடுகிறார். பின்னே தெற்குவாள்வீர ரின் கலையைக் கற்ற மாணவன் வென்றால், அவர் தோற்றது உறுதியாகிவிடும். அதை அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சோ ஹூன்வியை நான்காவது தலைவர் தனது முதல் மாணவராக தேர்ந்தெடுக்கிறார். அதற்கான காரணம், அவன் புத்திசாலி. தந்திரமான ஆளும் கூட சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்பவன். வாள்வீச்சு கலையை, முழுக்க சொல்லிக் கொடுக்காமலேயே கற்று அதை மேம்பாடும் செய்துகொண்டவன். அவர் பழங்குடி மனிதர்களைப் போல முரடர், மூர்க்கர். ஆனால், பிறரின் திறமையை எளிதாக அடையாளம் கொள்பவர். அதனால்தான் அடிமையாக வந்தவர்களை அடித்து வீழ்த்தி உறுதியான மனம், உடல் கொண்ட மூவரை மட்டும் தனது மாணவர்களாக மாற்றிக்கொள்கிறார்.

தீயசக்தி இனக்குழுவில் சோ ஹூன்வி முதல் ஜென்மத்தில், உளவாளியாக இருக்கிறான். ஆனால், இரண்டாவது முறை நான்காவது தலைவரின் மாணவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறான். அவனோடு பயிற்சி பெறுபவர்களே அவனை குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். ஆனால் சோ ஹூன்வி தனது புத்திசாலித்தனத்தால் தனியாக தெரிகிறான். மருத்துவ மூலிகையை பறிக்கச்சென்று, அதன் வலிமை அடுத்து அங்கு அவனைக் கொல்ல வரும் பாம்பின் விஷம் என இரண்டையும் பயன்படுத்தி செயலிழந்து போன தற்காப்பு ஆன்ம ஆற்றலை மீண்டும் உருவாக்குகிறான். ஒரு கட்டத்தில் நான்காவது தலைவரின் நம்பிக்கைக்கு உரிய மாணவனாக மாறுகிறான். குரு, அவனோடு டெலிபதி முறையில் உரையாடுகிறார். கேப்டன் பதவிக்கான போட்டியில் சோ ஹூன்வி மகத்தான வெற்றி பெறுகிறான். அதோடு ஹெமானிஸ் என்ற பெண்மணியோடு போட்ட பந்தயத்திலும் வெல்வது குருவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

பேச்சுவார்த்தை என்று வந்தால் சோ ஹூன்வியை நான்காவது தலைவர் நம்புகிறார். அவன் சொல்வதை அப்படியே செய்து இளம் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார். இவர்கள் இருவருக்குமான உறவு தொடக்கத்தில் சரியாக இல்லை என்றாலும் பின்னாளில் வலுவாக வளருகிறது. நான்காவது தலைவருக்கு தனது மாணவர்களை வலுவாக்கி தீயசக்தி இனக்குழுவை வளர்ச்சி பெறச்செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கு சரியான ஆளாக, அதை பிரதிநிதித்துவப்படுத்த சோ ஹூன்வி சரியான ஆளாக இருக்கிறான். குறிப்பாக உளவாளிகளைக் கண்டறிந்து களையெடுக்கிறான். அவன் அறிந்த பத்தாண்டு உளவு அனுபவம் மூலம் நிறைய லாபம் கிடைக்கிறது. தீயசக்தி இனக்குழவை அழிக்க முரிம் கூட்டணி வரும்போது, சோ ஹூன்வி காட்டும் அயராத வீரம் சாதாரணமானது அல்ல. பாங் இனக்குழு தலைவரோடு மோதி, அவரது தலையை வெட்டிஎடுப்பது என வேறு லெவல் பெருமை சேர்க்கிறான். அதை நான்காவது தலைவர் எடுத்துக்கூறி சோ ஹூன்விக்கு பதவி உயர்வு கேட்கிறார். தீயசக்தி இனக்குழுவிற்கும் அதை மறுக்க முடியாத சூழல்.

சோ ஹூன்வி வெறும் வீரன் மட்டுமல்ல. நைச்சியமாக பேசி ஒருவரின் மனதைக் கூட மாற்றிவிடும் திறமை பெற்றவன் அதை வைத்தே நிறைய இடங்களில் உயிர் தப்புகிறான். குறிப்பாக உணவகத்தில் தன்னை இழிவு செய்யும் ஆட்களை, வலிமையான இனக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்கள் வழியாக அடக்குவது, நேர்மையான வாள் வீரர் ஜின் குயினிடம் பணிவாக உரையாடி, அதேநேரம் தனது மாணவியிடம் இழிவாக பேசும் அவரது பேரனை இதமாக பேசியே தண்டனை வாங்கிக் கொடுப்பது என நிறைய சம்பவங்களை மறக்கவே முடியாது. டெலிபதி, வாள் ஆன்மாக்கள் என நிறைய உரையாடல்கள் உள்ளன. ஒருகட்டத்தில் தீயசக்தி வாள், தெற்குவாள்வீரரின் வாள், அம்மாவின் கட்டாரி என மூன்று வாள் ஆன்மாக்களோடு ஒரே நேரத்தில் சோ ஹூன்வி உரையாடுகிறான். உரையாடிக்கொண்டே சண்டையும் போடுகிறான். அதோடு, அவனுக்கு எதிரிகளைப் பற்றிய தகவல்களை வாள் ஆன்மாக்களே தருகின்றன. வாள் சத்தம் பற்றிய நுண்ணுணர்வு, வீரர்களைப் பற்றிய தகவல்களையும் எளிதாக அறிந்து தீயசக்தி இனக்குழுவைக் காக்கிறான்.
சோ ஹூன்விக்கு அதிகாரத்தை அடைவது என்பதில் ஆர்வம் இல்லை. எப்படியாவது பிழைத்திருக்கவேண்டும் என்பதைத்தான் விரும்புகிறான். ஆனால், அவன் வாழும் உலகமோ, வலிமைதான் அனைத்தும் என சொல்கிறது. எனவே, அதில் தன்னைக் காத்துக்கொள்ள போரிடுகிறான். டீமனின் வாள் கையில் கிடைத்தாலும் கூட அதை ஒப்படைத்துவிட்டு நாடோடியாக பல நகரங்களுக்கு செல்லவே ஆசைப்படுகிறான். ஆனால், நான்காவது தலைவர் அவனை அப்படி விடுவதில்லை. அவரின் அன்பு, சோ ஹூன்வியை திகைக்க வைக்கிறது. எனவே, அரசியல் அதிகாரப் போட்டியில் இறங்குகிறான்.

சுவாரசியமான கதை. நன்மை, தீமை பற்றி அதிகம் யோசிப்பவர்கள் கதையை ரசிக்க முடியாது.
கோமாளிமேடை குழு
 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்