பெரிய வணிகம் செய்வதிலுள்ள லாபம் - பாயும் பொருளாதாரம்!
5
பாயும் பொருளாதாரம்
பெரிய தொழில் பெத்த லாபம்
இந்தியாவில் சாதி இருக்கிறதோ இல்லையோ, சிறுகுறு தொழில்கள் நிறைய அழிந்துவிட்டன. வரி தீவிரவாதம் ஒருபுறம், பெருவணிகர்களின் எல்லைமீறிய வணிகம், அரசின் ஆதரவின்மை எல்லாமே முக்கிய காரணம். பெரிய வணிகம் எப்படியோ கடன் பெற்று அதை அரசே ஏற்றுக்கொள்ள பிழைத்துவிடுகிறது. பொதுவாக நிறைய பொருட்களை வாங்குபவர்களுக்கு அதன் விலை இயல்பாகவே குறைவாக வருகிறது. அவர் அதை விற்று வரி தீவிரவாதத்தை சமாளித்து தேர்தல் பத்திரத்தை வாங்கிவிட்டால் போதும். வணிகத்தை காப்பாற்றிவிடலாம். தொழில் தடுமாறுகிறதா, பாரத்தை தள்ளும்போது ஐலேசா சொல்வது போல பாரத் மாதா என அலறி அழுதால் போதும். தொழில் நன்னிலைக்கு மீண்டும் விடும்.
பெரிய தொழிலோ, சிறு தொழிலோ திறமையான தொழிலாளர்கள் முக்கியம். பொருட்களை நவீனமான செயல்முறையில் உற்பத்தி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. பெரிய தொழில் பார்க்க பிரமாண்டமாக தெரிந்தாலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். நிறைய பிரிவுகள் இருப்பதால், பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமாட்டார்கள். செக்குமாடு போல மாதசம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். உழைத்தாலும் பாராட்டு கிடைக்காது. எனவே, பலரும் தூங்குவார்கள், காலையில் வந்தவுடனே மதியச்சோத்துக்கு என்ன கொண்டுவந்திருக்கேப்பா என வாயாடத் தொடங்குவார்கள்.
சிறந்த உதாரணம் கூகுள். சாட்ஜிபிடியை ஓப்பன் ஏஐ உருவாக்கியதில் இருந்து பார்டு, ஜெமினி என என்னென்னமோ செய்கிறார்கள், வெளியிடுகிறார்கள். ஆனால் ஏதும் பயனளிக்கவில்லை.
தொழிலை தொடங்கி நடத்தினாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கான இலக்குகள் முக்கியம். ஆடைகளை உருவாக்குகிறீர்கள் என்றால் எண்ணிக்கை பற்றிய கவனம் தேவை. டிசைனர் சட்டைகள் தைத்தால் அதற்கென தனி விலை வைக்கவேண்டும். மற்றபடி சாதாரண பிரிண்டட் சட்டை என்றால் அதற்கு தனி விலை. உற்பத்தியை சந்தை சூழலைக் கவனித்து தீர்மானிக்கவேண்டும். இல்லையெனில் எளிதாக நஷ்டம் கதவைத் தட்டும்.
சினிமாவுக்கு போகலாமா, நித்யா எழுதிய கணினி புரோகிராமிங் நூலை படிக்கலாமா என ஒருவர் யோசித்து முடிவெடுக்கிறார். கோவிலுக்கு போனால் மனதில் ஆன்மிக அலை அடிக்கும். அதேநேரம் பப்புக்கு போனால் நெஞ்சம் வழுக்கும்படி பஜனை செய்யலாம். பெரும்பாலும் பஜனைக்கே போவோம் என முடிவெடுத்து, பின்விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். உணவகங்களில் குறிப்பிட்ட உணவுகளுக்கு விலையை பாதியாக்கி அதிகளவு சாப்பிடுமாறு தூண்டுகிறார்கள். பர்கர், பீட்சா, வறுத்த கோழித்துண்டு ஆகியவை இப்படியான விலையில் கிடைக்கும். வாங்கி உண்டு, ஈனோ குடித்து கட்டையைச் சாய்ப்பவர்கள் அதிகரித்து விட்டனர். தொழிலைப் பொறுத்தவரை சரியான முடிவுகளை எடுத்தால் சந்தையில் இருப்பீர்கள். இல்லையெனில் நீங்கள் தெருவில் நிற்பீர்கள். உங்களது தொழிலை இன்னொருவர் நடத்துவார்.
சாண்ட்விட்சை ஒருவர் பேக்கரியில் ஐம்பது ரூபாய்க்கு சாப்பிடுகிறார் என்றால் அதேயளவு சாண்ட்விட்சை சுவையோடு காய்கறிகள் மயோனிசோடு இன்னொரு கடையில் இருபத்தைந்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். மக்கள் இயல்பாகவே குறைந்த விலை கொண்ட கடைக்குத்தான் செல்வார்கள். கோக்கோகோலா, பெப்சி உள்ள குளிர்பான சந்தையில் இன்னொரு பிராண்டு வருகிறது. அப்போது பெரு நிறுவனங்கள் தங்கள் குளிர்பான விலையை அதிகரிக்க முடியாது. குறைக்கும் முடிவை எடுப்பார்கள். அப்போதுதான், அதன் பானங்கள் விற்பனையாகும். இல்லையெனில் பெரும் சரிவை சந்திக்கும்படி சூழல் அமையும்.
இன்றைக்கு காபி கடைகளில் இணையம், ஐஸ்க்ரீம், இருபத்து நான்கு மணிநேரம் திறப்பு என பல்வேறு விதமாக தனித்துவத்தை கைக்கொள்கிறார்கள். எனவே வாடிக்கையாளர்கள் கூடுகிறார்கள். குறைவதில்லை. போட்டியில் சமாளித்து நிற்கவில்லை என்றால் சோலி முடிந்தது. ஆஃப் சைடு ஸ்டம்பிற்கு வெளியே ஆறாவது முறையாக அவுட்டான கோலி போல பெவிலியனை நோக்கி நடைபோட வேண்டியதுதான். உணவுகளை ஓட்டல் போய் சாப்பிட்டு வந்த காலம் இப்போது கிடையாது. இருக்குமிடத்தில் உணவு ஆறுவதற்கு முன்னர், டெலிவரி ஆள் சாப்பிட்ட மிச்சமான உணவு என்றாலும் வந்துசேர்ந்துவிடுகிறது. இதில், கணினி வழியாக இடைமுகமாக சில நிறுவனங்கள் உள்ளன. உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையில் தரகர் போல உணவு விநியோக ஆப் நிறுவனங்கள் உள்ளன.
ஒரு பொருளுக்கு விலை மட்டும் முக்கிய அம்சம் அல்ல. தொழில்நுட்பம்,தரம், உற்பத்திதிறன், விளம்பரம் ஆகியவையும் முக்கியம். இன்று முன்னிருந்ததை விட பைக்குகள் அதிக சக்திகொண்டவையாக மாறியுள்ளன. பெண் அரசியல்வாதியின் கன்னங்கள் போல சாலைகள் இருக்கிறதோ இல்லையோ கனரக, இலகுரக வாகனங்கள் பாலிஷாக இருக்கின்றன. எழுத்தாளர்கள் அவர்களது நூல்களை அவர்களே கட்டுரை எழுதி பிரபலப்படுத்துவது போல பொருட்களை டிவி சேனல், இணையம், வானொலி என பல்வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்தால்தான் பொருட்கள் விற்பனையாகும். சென்னை பேக்ஸ் என பேக்கரி நடத்தி பிரிட்டானியாவின் காலாவதியான பிஸ்கட்டுகளைக்கூட விற்கத் தலைப்பட்டுவிட்டார்கள். விளம்பரம், நம்பிக்கை என்ற இரண்டையும் அடிப்படையாக கொண்டு மோசடிகள் நடக்கின்றன.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்களை போட்டியிட வைத்து மக்களுக்கு விலைகுறைந்த இணையத்திட்டங்களைக் கொண்டுவருவது ஒருவகை. இன்னொருவகை, போட்டியை அனுமதிக்காமல் உள்நாட்டு ஊழல் நிறுவனங்களையே அனுசரித்து அவர்களுக்கு அரசு உதவுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். புதுமைத்திறன் கொண்ட ஐடியாக்கள் மக்களுக்கும் நிறுவனத்திற்கும் உதவுகிறது.
ஏகபோகம்
தூத்துக்குடியில் இருந்து வரும் வேலன் என்ற பிராண்ட் கல் உப்பை இருபத்து மூன்று ரூபாய்க்கு விற்கிறார்கள். உப்பு சரியாக தூய்மையும் செய்யப்பட்டிருக்கவில்லை. இப்படியிருக்க அதிகவிலை வாங்குகிறார்கள். துயரம் என்னவெனில் கல் உப்பில் வேறு பிராண்டில் ஏதுமில்லை. கடைகளில் தரமற்ற உப்புமா கம்பெனிகள் தரும் காசுக்காக கடைக்காரர்கள் கமிஷன் வாங்கிக்கொள்கிறார்கள். கடையை நம்பி வரும் மக்களுக்கு கிடைப்பது தரமற்ற பொருட்கள். கள்ளநோட்டைக் கொடுத்தால் கூட தரமற்ற பொருட்கள் கிடைக்கிறது என்றால் ஒருவகையில் ஏற்கலாம். பணத்திற்கான மதிப்பிற்கு பொருட்கள் கிடைப்பதில்லை.
அந்த உப்பு தவிர வேறு பிராண்டு உப்புகளை கடையில் விற்பதில்லை. வேறுவழியின்றி அவர்கள் சொல்லும் விலைக்கு தரமற்ற உப்பை வாங்க வேண்டியிருக்கிறது. இதை ஏகபோகம் என்று கூறலாம். சிலநாடுகளில் அரசு நிறுவனங்கள் இந்தவ வகையில் செயல்படும். பெரும்பாலான நாடுகளில் தனியார் நிறுவனங்கள் பல்வேறுசேவைகளில் அரசுக்கு கமிஷன் கொடுத்து ஏகபோகமாக இயங்கி வரும். ஏகபோகத்தில் பெரிய போட்டிகள் ஏதும் இருக்காது. வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்க நிறைய தேர்வுகள் இருக்காது. பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். ஒருவகையில் இதை சந்தை தோல்வி என்று கூறலாம்.
சில பெருநிறுவனங்கள் அரசின் ஆதரவைப் பெற்று இயங்குவதால், எளிதாக அவர்களின் போட்டி நிறுவனங்களை வாங்கும் திறன் கொண்டவையாக உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தாய் நிறுவனத்தின் கீழ் துணை, சகோதர நிறுவனங்களாக இருக்கும்.
போட்டி இருந்தால் விலை குறையும். எனவே, அரசு ஏகபோக வணிகத்தை தடுக்க சட்டத்தை இயற்றி செயல்படுத்தி வருகிறது. ஏகபோக தடுப்பு சட்டம் இருந்தாலும் அதை அமல்படுத்துபவர் கையில்தான் அதிகாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்களைக் காக்கத்தான் இச்சட்டம் என்பதை அரசு சில சமயங்களில் மறந்துவிடுகிறது. அதுவே மக்கள் போராட்டங்களை தொடங்குவதற்கு காரணமாகிறது.
அமெரிக்க அரசு, அந்நாட்டின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு, ஏகபோகமே காரணம். ஒருகட்டத்தில் மக்களின் தினசரி வாழ்க்கையை பெருமளவு கட்டுப்படுத்தும் அளவற்ற அதிகாரம் திறன், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைப்பது என்பது அதை தவறாக பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கலாம். அரசையும் மீறிய அதிகாரம் என்பதை நிர்வாக குழுவினர் விரும்புவதில்லை. சட்டங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவது இதன் காரணமாகத்தான். 1982ஆம் ஆண்டு ஏடி அண்ட் டி என்ற நிறுவனம்,இதன்படி ஏழு சிறிய நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று போட்டியிடும்படி மாற்றப்பட்டன. இந்த நிறுவனங்களுக்கு பேபி பெல்ஸ் என்று பெயர்.
கருத்துகள்
கருத்துரையிடுக