ரோனி சிந்தனைகள் - மீண்டும் மீண்டும் திருட்டு

 

 

 






ரோனி சிந்தனைகள்

விருது கொடுக்க என்னையும் அழைத்திருக்கலாம் என மூத்த வீரர் ஆதங்கப்பட்டிருக்கிறார். விருதின் பெயருக்கு பரவாயில்லை. ஆனால் விருது கொடுக்க எங்கள் நாட்டின் மூத்த வீரரே போதும் என நிர்வாகம் கூறிவிட்டது. கேட்டுப்பெறுவது உரிமையாக இருந்த காலம் இருந்தது. இப்போது அப்படியல்ல. இரத்தலாக மாறிவிட்டது.

அரசு விற்கும் மூன்றாந்தர தேயிலைக்கு ஒரே பலம், அதன் பாலிதீன் பாக்கெட்தான். ஆம், அதை வைத்துத்தான் அதை தேயிலைத்தூள் என காலை, மாலை என இருவேளைகளில் மனதில் உருவேற்றிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து அருந்த வேண்டும். அதிலும் தேயிலை என குறிப்பிடாதபோது, நீங்கள் அதை அருந்துவதையே மறந்துவிடுவீர்கள். மறுக்கவும் வாய்ப்புள்ளது.

சகோதரரிடம் அவரது நெருங்கிய நணபர் எனது கண்முன்னே உரையாடினார். பிறகு, இயல்பான தொனியில் குரலை மாற்றிக்கொண்டு அப்புறம் அண்ணனோட கடை எப்படி போகுது என்றார். அதை போனிலேயே கேட்டிருக்கலாமே என கேட்டதற்கு சினம் கொண்டுவிட்டார். இயல்பான கேள்விகளுக்கு நீங்கள் காரண ரீதியாக பதில் அளிக்க கூடாது. அது எப்போதும் தர்ம சங்கடத்திலேயே பகையிலேயே முடியும்.

காயம்பட்ட வீரனுக்கு கர்ப்பிணியான பெண் உணவளித்து உதவுகிறாள். அவனோ அதிகாரம் கைக்கு வந்தவுடன் முதல்வேளையாக உணவிட்ட பெண்ணின் கணவனைக் கொன்று, கர்ப்பிணியான பெண்ணை தூக்கிவந்து மணந்துகொள்கிறான். கணவனைக் கொல்லும் முயற்சியில் கணவன், அவன் நண்பன் என இருவரையும் குற்றம்சாட்டி ஊரைக் கொளுத்தி அழித்து... அப்பப்பா.. சோறு போட்டது குத்தமாடா? குற்றம்தான்.

நாய்ப்பாசம் என்பது தந்தையாருக்கு நாளுக்கும் நாள் விலைவாசி போல கூடிவருகிறது. நாயும் தந்தையாரும் ஒருநாள் ஒரே தட்டில் உணவருந்துவதை பார்க்க காலம் கருணை காட்டுமா என்றுதான் தெரியவில்லை.

நாட்டின் ஆட்சித்தலைவர் இயல்பாக பேசித்தான் சில மாநிலங்களில் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. டெலிபிராம்டர் வேலை செய்யாத சில நிமிடங்களேனும் மக்களுக்கு நிம்மதி கிடைக்கட்டுமே...அதையும் மக்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள். இதுகூட முன்னாள் பிரதமரின் சதியாக இருக்கலாம்.

தேநீருக்கு பெருங்கல் சர்க்கரை, மாவுச்சர்க்கரை என இருவகையை பயன்படுத்தலாம். பெருங்கல் சர்க்கரை விலை கூடுதல், பொடி சர்க்கரை விலை குறைவு. கொதித்த நீரை இனிப்பாக்க போடும் சர்க்கரையிலே இத்தனை வேறுபாடு. மகத்தான லட்சியங்களை நிறைவேற்றவேண்டுமென்றால் யோசித்துப் பார்த்தாலே அலறிவிடுவீர்கள்.

பற்றை விடுங்கள், பயம் போய்விடும். மகிழ்ச்சியாக வாழலாம் என்ற அனுபவபாடத்தை ஒருவர் உணரும்போது வாழ்க்கை கையில் இருப்பதில்லை.

அன்பு செலுத்துவது வேறு, ஆழமாக புரிந்துகொண்டு செயல்படுவது வேறு. இரண்டையும் குழப்பிக்கொண்டால் வேதனையும் வலியுமே மிஞ்சும்.

அர்த்தமே இல்லாத வெறும் பேச்சை கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. கூட்டமா, பிரியாணி பொட்டலம். வாக்களிக்க வேண்டுமா, கரன்சியை எடு என தெளிவாக இருக்கிறார்கள் மக்கள்.

இன்னொருவரின் பொருளை அநீதியாக திருடுவது தவறில்லை. அதில் யாருக்கு முன்னுரிமை, ஒருவர் சாதுரியமாக திருடியதை இன்னொருவர் நைச்சியமாக திருடிக்கொண்டார் என்றுதான் புகார்கள் அதிகரித்து வருகின்றன.

ஒட்டுமொத்த சமூகமே அறவீழ்ச்சி கொண்டதாக, கறை, களங்கமுற்றதாக மாறும்போது அதிலிருந்து மேலே வரும் ஒருவர் மட்டும் எப்படி நீதிமானாக சிறந்த இயல்புகள் கொண்டவராக இருக்க முடியும்? பிரச்னை அப்படியான நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டவர்கள் மீதுதான். தனிமனிதர் மீதல்ல. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்