ரோனி சிந்தனைகள் - அழிவு தரும் மட்டற்ற மகிழ்ச்சி
ரோனி சிந்தனைகள்
ஊருக்கு இளைத்தவன் என்பவன் தனது பலவீனத்தை வெளிப்படையாக தெரிவிப்பவனே. அதை வைத்தே அவன் கூறிய நல்ல விஷயங்களைக் கூட சேறு வீசி இழிவுபடுத்தி இன்பம் பெறுகிறவர்கள் உலகில் நிறையப்பேர் உண்டு.
ஒருவனை தோற்கடிப்பது என்பது வெளியுலகில் காண்பதைப் போன்ற கைத்தட்டல்களோ, கோஷங்களோ இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பதல்ல. மனதளவில் அவனை எழ முடியாமல் முற்றாக அழித்து கீழே தள்ளுவதுதான்.
செயல் என்பது வெளியே தெரிவது. அதற்கான சிந்தனை, எண்ணம், கனவு என்பது மனதில் உருவாகி வளர்வது. அக்கனவுகளை உடைத்துவிடவே பலரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த கோட்டைகள் தரைமட்டமாக்கப்படுவது தொடர்வது இதன் காரணமாகத்தான்.
உருவாக்குவது படிப்படியான ஒரு நிகழ்ச்சி. ஆனால், அழிவு அல்லது சிதைவு என்பது உடனே நடப்பது அதற்கு மக்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் கூட அதிகம்.
ஒருவருக்கு நாயகன் என்பவர் அனைவருக்கும் அதேபோல இருக்கவேண்டுமென்பவதில்லை. அவரவர் கதையில் அவர்கள்தான் நாயகன். வில்லன், துணைப்பாத்திரங்களை நிதானமாக பொருத்திக்கொள்ளலாம்.
நேர்மை, கைராசி, நம்பிக்கை என்பதெல்லாம் காலம்தோறும் மதிப்பு கூடி வருபவை. ஒரு நல்ல நேரத்தில் அதை ஏலம் கோரி மிகப்பெரிய விலைக்கு விற்றுவிடலாம். இறுதியாக அதன் பயன் அப்படித்தான் முடிகிறது.
இன்னொருவரின் வாகன விளக்கை நம்பி, நம் வாகனத்தை இயக்கினால் நிச்சயம் நமது வீட்டுக்கு போய்ச்சேருவது நடக்காத செயல்.
கட்டாயமில்லை என்று சொல்லித்தான் அனைத்து பலாத்காரங்களும் மேலாதிக்க நடவடிக்கைகளும் தொடங்குகின்றன.
நாட்டை பெண்ணாக வரைந்து காட்டுவது அரசியலுக்கு அதிக பயன்கள் கொண்டது. அக்குறியீட்டை வைத்து வல்லுறவு, பலாத்காரம், இழிவு, அவதூறு என பலதும் செய்யலாம். பிறகு அதற்கு சகிக்கமுடியாத விளக்கம் கொடுத்து மக்களின் நிம்மதியைக் கெடுக்கலாம்.
திறந்தவெளி சாக்கடைகள் நிறைய இடங்களில் இருப்பதால்தான், அரசியல்வாதிகளின் இழிவான பேச்சின் அழுகல் வாடை மக்களை அணுகாமல் இருக்கிறது.
கவசத்தை மார்புக்கு மட்டுமல்ல, முதுகிலும் அணிய வேண்டியிருக்கிறது. எதிரி,துரோகி என பலரும் அடிக்கடி கண்ணில் கலந்து தெரிகிறார்கள். எங்கே அம்பு பாயும், குறுவாள் குத்தும், ஈட்டி வீசப்படும் என்பதை அறிவது கடினமாகி வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக