திராவிட தேசியம் - அண்ணாவின் மூன்று உரைகள்
திராவிட தேசியம் - மாநில சுயாட்சி
சிஎன் அண்ணாதுரை
திராவிடர் கழக வெளியீடு
விலை ரூ.ஆறு
இந்த நூல் மொத்தம் மூன்று உரைகளை உள்ளடக்கியது. 1961, 1967, 1969 என மூன்று ஆண்டுகளி்ல் அண்ணா, பொது மேடையில் பேசிய உரைகளை நூலாக தொகுத்திருக்கிறார்கள். தொடக்க காலகட்ட உரையில் திமுக மாநில சுயாட்சியோடு, திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறி விமர்சித்தது. திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா எழுப்பினார் என்பதற்கான எளிமையான விடைகளை அவரது உரையில் படித்துப் புரிந்துகொள்ளமுடியும்,
மையத்தில் அதிகார குவிப்பு, வரிவருவாய் பாகுபாடு, மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிகாரம், அனைத்திற்கும் ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் அவலம், இந்திமொழி திணிப்பு ஆகியவற்றை அண்ணா உரையில் சுட்டிக்காட்டுகிறார். ஆட்சிக்கு வந்தபிறகு பிரவினைவாத சட்டத்தில் திமுகவின் ஆட்சியை கலைத்துவிடவாய்ப்புள்ளது என்பதால், திராவிட நாடு கோரிக்கை மட்டும் கைவிடப்பட்டது. ஆனால் அதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என அண்ணா தைரியமாக கூறியிருக்கிறார். கொள்கைகளை அடிப்படையாக கொண்ட கட்சிகள் மட்டுமே இப்படியான திடமான தீர்மானகரமான பேச்சை பேச முடியும்.
மாநில சுயாட்சியைப் பற்றி அண்ணா, கலைஞர் கருணாநிதி இன்னும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்றுவரைக்கும் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள். அதைப்பற்றிய நூல்களை எழுதியுள்ளனர்.
இந்தியா என்றைக்குமே ஒரே நாடாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது என்பதே உண்மை. இதைப்புரியாமல் பன்மைத்தன்மையை அழிக்க தீவிரவாத இயக்கம், அதைச்சார்ந்த மதவாத கட்சிகள் கிளம்புகின்றன. மதவாத கருத்தை, அநீதியை பழகிக்கொள்ள அரசின் ஜனநாயக அமைப்புகளில் மதம் பிடித்த மனிதர்களை அமர வைத்து வருகிறார்கள். அதன் பயன்களைத்தான் மணிப்பூர், உ.பி என பல்வேறு மாநிலங்களில் கலவரங்களாக, பழங்குடியினர் மீதான வன்முறையாக பார்த்துவருகிறோம்.
வடக்கு தெற்கு என இருபிரிவுகள் இந்தியாவில் உண்டு. அதை தீர்மானகரமாக அண்ணா குறிப்பிட்டு வரி வருவாயில் பாகுபாடு காட்டி தெற்கை நசுக்குகிறார்கள் என கூறியுள்ளார். அவர் மறைந்து பல்லாண்டுகள் ஆனாலும் அவர் கூறிய நிலைமை மாறவில்லை என்பதே நிஜம். திராவிட நாடு, தனிநாடு, சுயாட்சி பற்றி அறிய மேலும் நூல்களைப் படிக்க ஆர்வமூட்டுகிற சிறுநூல் இது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக