மனிதர்களின் மீது நம்பிக்கை குன்றாமல் எழுதிய படைப்பாளியின் படைப்பு விமர்சனங்கள்! - ஜானகிராமம்

 

 


 


ஜானகிராமம் - ஜானகிராமனின் படைப்புகளைக்குறித்த கட்டுரைகள்
கல்யாணராமன்
காலச்சுவடு பதிப்பகம்

பத்திரிகையாளர் நா கதிர்வேலன் மூலம் அறிந்துகொண்ட நூல். அவரைப் பொறுத்தவரை நூல்களை வேகமாக வாசிக்ககூடியவர். வார இதழ்களில் எழுதிய சினிமா கட்டுரைகளை வாசித்தாலே திஜாவின் ஆழமான பாதிப்பை உணர முடியும்.

எண்ணூறு பக்கங்களுக்கும் மேலுள்ள நூல். மொத்தம் நூறு கட்டுரைகளை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதில், இடம்பெற்றுள்ள ரமேஷ் வைத்யா என்பவரின் கட்டுரை நீங்கலாக மற்ற கட்டுரைகள் அனைத்துமே ஓரளவுக்கு ஜானகிராமனின் கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என பலவற்றையும் விமர்சனநோக்கில் அணுகியுள்ளது.

நூலில் நூறு கட்டுரைகளில் சுகுமாரன், மாலன், சு வேணுகோபால், சு தமிழ்செல்வன் என சிலரின் கட்டுரைகள் படிக்க சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒருகதை, இரண்டு கதை அல்லது அத்தனை கதைகளையும் என எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள்.மாலன் போன்ற எழுத்தாளர், ஓரளவுக்கு அனைத்து கதைகளையும் விளக்கி விமர்சனம் செய்ய முற்படுகிறார்கள். நூலின் நிறைய இடங்களில் பொதுவாக அனைவருக்கும் பிடித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்களை வருவது வாசிப்பவர்களை சோர்வடையச் செய்கிறது. அம்மா வந்தாளை நாவலை முன்னிட்டே அதிக கட்டுரைகள் உள்ளன.

திஜாவின் புகழ்பெற்ற நாவல்களான அம்மா வந்தாள், மோகமுள், மோகமுள்ளின் திரைப்பட வடிவம் பற்றிய விமர்சனம் கூட கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது. சைபர் சிம்மன் போன்ற எழுத்தாளர், அறிவியல் மொழிபெயர்ப்பை கூட விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். பொதுவாக மீறல் என்பதுதான் அவரது கதைகளின் மையம். எப்படி பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளிப்புகொண்டதாக கதையின் களம் உள்ளது என பெரும்பாலான எழுத்தாளர்கள் விளக்கி புரிய வைக்க முயல்கின்றனர். சிலரே அதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆர் வெங்கடேஷ், ரமேஷ் வைத்யா ஆகியோர் எதையோ கட்டுரை என எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். ரமேஷ், தனது அடிபொடிகளுக்கு தூபம் போட பயன்படும் இலக்கணத்தை கதைகளுக்கு பொருத்திப் பார்த்து கட்டுரையை எழுதியுள்ளார். அறமோ, மனிதநேயமோ இல்லாத ஆட்களை வைத்து மனிதர்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டு கதை எழுதிய எழுத்தாளரின் கதைகள் மதிப்பீடு செய்யப்படுவது பரம வேடிக்கை.

நாவல், சிறுகதை, கட்டுரைகள், நாவல் என பல்வேறு வடிவங்களிலும் வெற்றி பெற்ற எழுத்தாளர் தி ஜானகிராமன். பொதுவாக தனது படைப்புகளைப் பற்றி எந்த கேள்வியும் கூறாதவர். உதாரணத்திற்கு ஞான ராஜசேகரன் அவரை சந்திக்க முயன்ற சம்பவத்தை உதாரணமாக கொள்ளலாம். கநாசுவோடு மேற்கொண்ட தோல்வியுற்ற உரையாடல் கூட அவரது விரக்திக்கு காரணமாக இருக்கலாம். வாசகர்கள், படைப்பை வாசித்து அதிலிருந்து அனுபவம் அறிவை எட்டியளவுக்கு என்ன பெறுகிறார்களோ அதுதான் விஷயம். எழுத்தாளருக்கு குறிப்பிட்ட நோக்கம் பாத்திரம் சார்ந்து உருவாகியிருக்கலாம். ஆனால், அதை வாசகர் அப்படியே எதிரொலிப்பார், விமர்சனமாக கூறுவார் என்று கூறமுடியாது.

ஒருவர் தான் பிறந்த சாதி,மதம், அது சார்ந்த கட்டுப்பாடுகள் என பலவற்றையும் படைப்புகளில் பிரதிபலிப்பதை பார்க்கலாம். அவற்றுக்கு திஜாவும் விதிவிலக்கு கிடையாது. அவர் சமூகம் சார்ந்து எழுதிய எதிர்வினைகள் பாத்திரத்தின் உள்ளடங்கலாகவே இருக்கிறது. துருத்திக்கொண்டோ பிரசாரமாகவோ இல்லை. நிறைய கட்டுரைகளில் காலகட்டத்தைக் கூட சில உரையாடல்களை வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சோசலிச சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு சில எழுத்தாளர்கள் திஜாவை எடைபோட்டு இழிவுபடுத்துவது உண்டு. அப்படி இல்லையே, இப்படி இல்லையே என அங்கலாய்ப்பது எப்போதும் நடப்பதுதான்.ஒரு படைப்பை எழுதி செம்மைபடுத்தி வெளியிட்டுவிட்டாலே முடிந்தது. அவர் பேச விரும்புவதை ஏதாவது இடத்தில் அர்ப்பணியாக ஆழ்ந்து படிக்கிற வாசகர்கள் உணர முடியும். குறிப்பிட்ட காலம் கடந்த வாசிக்கும்போது நிறைய கதைகள், காலம் என்ற பாரத்தை சுமந்துகொண்டு மேலே வரமுடியாமல் இருக்கலாம். திஜாவே தன்னுடைய சில கதைகளே சிறுகதைகளாக தகுதி பெறும் என கூறிவிட்டார். அடி கதையில் கூட மனைவிக்கு கணவர் துரோகம் செய்கிறார். ஆனால் அதை சாமியார் எளிமையாக தீர்வு சொல்லி பரிகாரம் தேடுகிறார். நிஜத்தில் அப்படியான சம்பவத்திற்கு முடிவு விவகாரத்தாகவே இருக்க முடியும். புனைவில் சுதந்திரம் எடுத்து்க்கொண்டு சில விஷயங்களை எழுத்தாளர் செய்கிறார்.

நூறு கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்கள் அவர்களின் அனுபவத்திற்கேற்ப சில காரணங்களை கருத்துகளை முன்வைத்து விமர்சிக்கிறார்கள். போதாமைகளை கூறியிருக்கிறார்கள். காலமாறுதல்களை அடையாளம் கண்டு கூறியிருக்கிறார்கள். பொதுவான வாசகர்களுக்கு ஜானகிராமனை எளிமையாக அறிமுகப்படுத்த ஜானகிராமம் உதவக்கூடும். கல்யாணராமன் நூலை சிறப்புற தொகுத்திருக்கிறார். பெரிய நூல்தான். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் வேகமாக படித்துவிடலாம். கடினமாக இருக்காது.

கோமாளிமேடை குழு 

https://www.amazon.in/-/hi/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-Edited-Kalyanaraman/dp/B097GYSSHX

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்