பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்
6
பாயும் பொருளாதாரம்
ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர்.
எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிபர்கள் திகைத்துப் போனார்கள். உடனே, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது, தேசப்பாதுகாப்பு என மதவாத இயக்கம் சொல்லும் பொய் புரட்டுகளை ஒப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். நிறைய நிறுவனங்கள் போட்டியிடும்போது சேவைக்கட்டணம் குறையும். அது மக்களுக்கு உதவும். ஆனால், இந்தியாவிலுள்ள குஜராத் தொழில்நிறுவனங்கள் எவையும் அதை விரும்புவதில்லை. ஏகபோகமாக கொள்ளையடிக்க தலைப்பட்டு அனைத்துவிட தில்லாலங்கடி வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
கொடுக்கு காசுக்கு மதிப்பான பொருள் என்றால் வியாபாரம் சரிதான். ஆனால், அதிலும் போங்கு வேலை பார்த்து காலாவதியான பொருட்களைக் கொடுப்பது, மட்டமான பொருட்களை கொடுத்து ஏமாற்றுவது என கிளம்பினால்தான் பிரச்னை. வாக்களிக்கும் வரை காலில் விழுந்து அன்பளிப்பு கொடுக்கக்கூட தயாராக உள்ள அரசியல்வாதிகள், அதிகாரத்தைப் பெற்றதும் புகார்களைக் கொடுக்கும் மக்களை கவனிக்காதது போல வெளிநாட்டு சொகுசு கார்களில் போவார்கள். தொகுதியில் மக்கள் பிரதிநிதியை பிறகு எப்போதுமே பார்க்க முடியாது. இதேபோல வணிகம் செய்பவர்கள் உண்டு. சொன்ன விலைதான் பேரம் பேசக்கூடாது என மிரட்டும் ஆட்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். பேரம் பேசுவது மக்களுக்கான உரிமை. மக்களிடம் கோபம் கொண்டால் அங்கு வியாபாரம் நடக்காது. அரசின் சட்டங்கள் கடுமையான காரணமாக அபராதம், சிறைவாசம் என சிக்கல் பெருகியதால்தான் வணிக குழுக்கள் ஒழுக்கமாக வேலை செய்கிறார்கள்.
இப்போது சில மாறுபட்ட சூழ்நிலைகளைப் பார்ப்போம். இதற்கெல்லாம் என்ன செய்வது, யாரிடம் போய் முறையிடுவது என்று கூட சிக்கல் எழலாம்.
வயலில் பயிரை நட்டு இருக்கிறீர்கள். உரமும் இடுகிறீர்கள். திடீரென கனமழை பெய்து உரம் அடித்து்க்கொண்டு போய் குளத்தில் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக, நீர்நிலையில் களை அதிகரித்து நீரிலுள்ள பிராணவாயு குறைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் குளத்திலுள்ள மீன்களை ஏலம் எடுத்த மீனவர் என்ன செய்வார்? அவருக்கு இழப்பு ஏற்படுகிறது. சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தேனீ சேகரிப்பு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். சீனாவில் இருந்து சர்க்கரை சிரப்புகளை இறக்குமதி செய்து கலப்படம் செய்து தேன் என விற்கும் நிறுவனங்களே இந்தியாவில் அதிகம். உண்மையைப் பேசினால், பூச்சிமருந்துகளை அதிகம் பயன்படுத்தும்போது தேனீக்கள் இறந்துவிடும். இதனால், மறைமுகமாக மகரந்தச் சேர்க்கை என்பது நடைபெறாது. பயிர் விளைச்சல் மெல்ல குறையும். தேன் விலை குறைந்தால் அதை உற்பத்தி செய்பவர் பாதிக்கப்படுவார். ஆனால், மகரந்தச் சேர்க்க குறைந்தால் அறுவடை பாதிக்கப்பட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற சூழலை உள்ளூர், ஒன்றிய அரசுகள் கருத்தில் கொண்டு மானியம் வழங்குவதுண்டு. இதன் மூலம், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தொடர்ந்து நடத்தும் வாய்ப்பை பெறுகிறார்கள். அரசு, தனது வேளாண்மை அமைச்சகம் மூலம் உரங்கள், பயிர்களுக்கு உதவும் பூச்சிகளை பாதுகாக்க வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கி வழங்கலாம். இதெல்லாம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இரண்டு விஷயங்களை அரசுகள் செயல்படுத்துகின்றன. ஒன்று பரிசு, மற்றொன்று தண்டனை. பரிசு என்றால் மானியம், சலுகை, தண்டனை என்றால் வரி, அபராதம் என வைத்துக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு விதிக்கப்படும் கார்பன் வரி இந்த வகையில் கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க கூடியது. அதேசமயம் இந்த வரி மக்களின் கோபத்தை கிளறி போராட்டங்களுக்கும் கூட வழிவகுக்கிறது. இதெல்லாமே அரசு வரியை எப்படி அமல்படுத்துகிறது என்பதை அடிப்படையாக கொண்டது. சைக்கிள் பயணத்தை அரசு ஊக்குவிக்கிறது என்றால் மறைமுகமாக அத்தயாரிப்பிற்கு மானியம், சலுகை வழங்கலாம். மற்றொருபுறத்தில் கார்களுக்கு நகரத்தில் நுழைவதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிப்பது கூட பயன் கொடுக்கலாம். அடிப்படையில் மக்கள் நல அரசு என்றால், பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து, தனிநபர் வாகன பயன்பாட்டை மெல்ல குறைப்பதே செயல்பாடாக இருக்கும். பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு, நெருக்கமாக உள்ள நண்பர்களுக்கு விற்று கமிஷன் பார்ப்பது தரகரின் வேலை. அதை செய்வது அரசு என்றாலும் கூட அவமானமான செயல்தான்.
மதம், சாதியில் மூழ்கி மூடநம்பிக்கையுள்ள மக்களை ஏமாற்றி மதக்கலவரக்காரர்கள் ஆட்சி அரியணையை ஆக்கிரமித்துள்ள காலம். பொதுவாக ஒரு முடிவை எடுக்க மக்களை வாக்களிக்க செய்யலாம். பெரும்பான்மை ஆட்களின் விருப்பமே இதில் நிறைவேறும். வரிசையாக நின்று அம்மா உணவகத்தில் சோறு வாங்கித் தின்பதில் கூட போட்டியிடுவதே நமது விருப்பமாக உள்ளது. இத்தகைய சுய ஒழுக்க குறைவை எங்கும் பார்க்க முடியாது. ஜனநாயகம் என்பது ஒருவரே அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அவர் தனது கருத்தைக் கூறி அதைப்பற்றி விவாதித்து முடிவுக்கு வரலாம். கட்டாயமில்லை என்று கூறி சான்றாவணம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் கட்டாயப்படுத்தலைப் பார்க்கலாம்.
கைதான மதவாதியை விடுவிக்க புகார்தாரர் புகாரை வாபஸ் பெறவேண்டும் என வழிமுறையை சொல்லிக்கொடுப்பதையே அரசின் வேட்டைநாயான காவல்துறை செய்கிறது. இதனால் யாருக்கு நன்மை விளையும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். லட்சியங்களை பகிர்ந்துகொள்வது இன்று குறைந்துவிட்டது. பெரும்பாலும் சுயநலமான நோக்கங்களும் குறுகிய புத்தியும் அதிகமாக உள்ளது. சமூகநீதி மூலம் அனைத்து வர்க்கத்தினரும், சமூக அடுக்கினரும் பயன்பெறமுடியும். ஆனால் சிலர் இதற்கு எதிராக மக்கள் அவர்தம் முன்னோரின் தொழிலை செய்யவேண்டும் என திட்டமிடுகிறார்கள். ஏழை, விளிம்பு நிலை மக்கள் வேலை செய்யவேண்டும். படிக்ககூடாது என இழிவும் அவதூறும் செய்கிறார்கள். அவர்களின் கையில் உள்ள ஊடகங்களும்(தினமணி, தினமலர், தமிழ்திசை) இதே லட்சியத்தை பரப்புகின்றன.
சமத்துவம், சகோதரத்துவம், சமநீதியை அடிப்படையாக கொண்ட சகோதர அமைப்புகள் அரசியல்ரீதியாக ஒன்றிணைந்து இயங்கி வருகின்றன. வேறுபாடுகள் இருந்தாலும் பொதுநன்மைக்கென ஒன்றாக இணைந்துகொள்ளும் அமைப்புகள் கூட உள்ளன. சந்தை பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக்கொள்ளாத நாடு இங்கிலாந்து. இங்குள்ள அரசு அப்படித்தான் இயங்குகிறது. முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை விருப்பம் போல நிறுவி நடத்திக்கொள்ள அனுமதிப்பதை முதலாளித்துவம் என்று கூறலாம்.
தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் வழியாக பொருட்களை உற்பத்தி செய்து அதை விற்றால் பொருளாதாரம் மேம்படும். தொழிற்சாலை வழியாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலை, எந்திரங்கள், நிலம் ஆகியவற்றை வைத்துள்ளவர்கள் முதலாளித்துவவாதிகள்.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் விவகாரங்களில் அரசு நிச்சயம் தலையிடும். ஏனெனில் இதெல்லாம் எதிர்கால தலைமுறையினரை தீவிரமாக பாதிக்கும் பிரச்னைகள். அடிப்படை மதவாதிகள் அரசு அமைந்தால் கல்வியை முதலில் தடுப்பார்கள். சிந்தனைவாதிகள் படுகொலை செய்வார்கள், கோவில்களை கட்டுவார்கள், பள்ளிகளை செயலிழக்க செய்வார்கள். அப்படி இயங்கும் பள்ளிகளிலும் புராணக்குப்பைகளை புகுத்துவார்கள். இதனால் படித்தாலும் கல்வி என்பது பயனிருக்காது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பார்கள். இதன் வழியாக அரசுகளுக்கு லாபம் கிடைக்கும். மக்களுக்கு நோய், வறுமை பரிசாக கிடைக்கும். அவ்வளவேதான்.
மனதில் ஈரமில்லாத ஆட்சியாளர்கள் பதவியில் இருந்தால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு நொடிந்துபோய் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் கூட அவர்தம் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்யமாட்டார்கள். மக்கள் உயிரோடு வாழ்வதே தனது அரசுக்கு வரிகட்ட என நினைத்து ஆணவமாக இயங்குவார்கள். பேரிடர் காலங்களில் விவசாயிகளுக்கு, மக்களுக்கு அரசு உதவுவது அவசியமானது.
கியூபாவில் புரட்சி காரணமாக கம்யூனிச அரசு அமைந்தது. அந்த நாட்டோடு முதலாளித்துவ நாடான அமெரிக்கா இன்றுவரை பகைமை பாராட்டி வருகிறது. அந்த நாட்டை நொடிந்துபோக வைக்க திரைமறைவு வேலைகளை செய்து வருகிறது. ஒருவரின் திறன், தேவையைப் பொறுத்து அவருக்கு பொருட்களை வழங்குவதை கம்யூனிச கொள்கை உறுதி செய்கிறது. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் என பலவற்றையும் கம்யூனிச அரசு இலவசமாக வழங்கியது. அதிலும் குழப்பம் இல்லாமல் இல்லை. அனைவருக்குமான நன்மையை பிரசாரம் செய்து மக்களை ஈடுபடுத்துவது கடினமான காரியம்.
நடைமுறையில் அரசு அனைத்திலும் முழு முற்றாக உரிமை கொண்டிருப்பது மக்களின் தேவையை தீர்க்க உதவியாக இருக்காது என பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். எனவே, சமநிலையான தன்மைகொண்ட கொள்கையை அரசுகள் பேணுகின்றன. சீனா, சோசலிச கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்தி அமெரிக்காவை விட வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இதற்கு காலத்திற்கேற்ப, சந்தை பொருளாதாரத்தை திறந்துவிடும் கொள்கைகளை கைக்கொண்டதே காரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக