நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்
நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்
தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும்.
நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில் பார்த்தால், கவிஞர் பாரதியாரது நூல்களது உரிமை தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்நாடு அரசு, அந்நூல்களை பதினைந்தாயிரம் ரூபாயை வாரிசுதாரருக்கு வழங்கி கையகப்படுத்தியது. அந்நடவடிக்கை வழியாக பாரதியாரது நூல்களை எவரும் அச்சிட்டு விற்றுக்கொள்ளும் நிலை உருவானது. நமக்கு கிடைக்கும் பாரதியாரது நூல்கள் தமிழ்நாடு அரசின் நாட்டுடமையாக்கல் காரணமாகவே என்பதை நினைவுகூரவேண்டும்.
தமிழ்நாடு அரசு, ஒரு நூலுக்கு ஒரு லட்சம் என கணக்கிட்டு எழுத்தாளர் எழுதிய நூல்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி வழங்கும் தொகை பத்து லட்சம் என கொள்வோம் என்றாலும் கூட எழுத்தாளர் இத்தொகையை காப்புரிமை வழியாக சாவதற்குள் பெறுவாரா என்றால் பதிப்பாளர்கள் கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் ஏமாற்றித் தின்றுவிடும் ஆட்களே அதிகம். எழுத்தாளர்கள் தனியாக பதிப்பகம் தொடங்கி நடத்துவது காப்புரிமைத் தொகை முறையாக வழங்கப்படாதது, நூல்களை பிரசுரித்து விற்காதது, விளம்பரம் செய்யாமை என காரணங்களைக் கூறலாம்.
நாட்டுடமை என்பது எழுத்தாளரின் குடும்பம் ஏற்றுக்கொண்டால்தான் செய்யப்படுகிறது. அவர்கள் மறுத்துவிட்டால், ஏதும் செய்யமுடியாது. இந்த வகையில் கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆகியோரது நூல்கள் நாட்டுடமைக்கு அரசு அனுமதி கேட்டு, முறையான வாரிசுதாரர்களால் மறுக்கப்பட்டுவிட்டது. கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரது படைப்புகள் முறையாக கண்ணதாசன் பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் ஆகிய வாரிசுதாரர்களின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டு வருகிறது. சிறப்பாக நூல்கள் விற்பனையாகியும் வருகிறது.
நாட்டுடமையாக்கம் எதற்கு மறுக்கப்படவேண்டும்? நூல்கள் நன்றாக விற்கப்பட்டுக் கொண்டு இருந்தால் அரசு தரும் தொகையை விட அதிக வருமானத்தை பெற முடியும். அரசு தரும் தொகையை பெற்றுக்கொண்டால் பிறகு நூலின் பதிப்புரிமை பொதுவானதாக மாறிவிடும். அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்ட பதிப்பகம் வெளியிடும் நூல் என்ற அந்தஸ்து இருக்காது. பொன்னியின் செல்வன் நூலை கல்கி எழுதினார். அது நாட்டுடமையாக்கப்பட்ட நூல் என்பதால் பல்வேறு பதிப்பகங்கள் பிரசுரித்து விற்று வருகின்றன. நூல்களை சுருக்கி, விரித்து கூட மாற்றி எழுதலாம் என்பதால் எது அசல், எது மாற்றப்பட்ட நூல் என புரிபடாது.
சில சமயங்களில் நூல்களின் அடிப்படையான கருத்துகளை மதவாத கருத்தியல் கொண்டவர்கள் திரித்துவிடலாம். இதன் காரணமாகவே கலைஞர், பெரியார் நூல்கள் நாட்டுடமை செய்யப்படாமல் இருந்தன. நடப்பு காலத்தில் மதவாதிகள் வரலாற்று நூல்கள் பலவற்றிலும் திரிபுவாத கருத்துகளை உள்ளிட்டு நிரப்பி எழுதி வருகிறார்கள். இடதுசாரிகள் எழுதும் நூல்களால், நாட்டில் பிளவு ஏறபட்டு மதக்கலவரம் ஏற்பட்டதில்லை. ஆனால், வலதுசாரி மதவாத எழுத்தாளர்கள், தம் எழுத்து வழியாக சிறுபான்மையினர், பழங்குடிகள், தலித்துகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.
நாட்டுடமையாக்குதலின் ஒருபக்கத்தைப் பார்த்துவிட்டோம். இன்னொரு பக்கத்தைப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்களின் நூல்கள், சந்தையில் வெளியிடப்பட்டாலும் பெரிதாக விற்பனையில் சாதிக்காது. அவர்களின் எழுத்து அப்படியான தன்மையில் இருக்கலாம். ஆனால், விற்பனை இல்லை என்பதால் காலப்போக்கில் காணாமல் போனால் இழப்பு பின் வரும் தலைமுறையினருக்குத்தான். இந்த வகையில் அரசு, முக்கியமான ஆய்வு நூல்களை நாட்டுடமையாக்கம் செய்தால் குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பயன்பெற வாய்ப்புள்ளது. பொதுவாக இறந்துபோன எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது இயல்பாக இருந்தது. இப்போது வாழ்ந்துவரும் எழுத்தாளர்களது நூல்களைக் கூட அனுமதி கேட்டு அரசு நாட்டுடமை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. குறைந்தபட்சம் எழுத்தாளர்கள் இதன் வழியாகவாவது சோற்றுப் பிரச்னையை தீர்க்க வழி உருவாகியுள்ளது.
நாட்டுடமை ஆக்கல் மூலம் எழுத்தாளரது நூல்களை கல்வி, ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கவும் வழி பிறக்கிறது. ஒன்றிய அரசு, தனது மதவாத கருத்துகளுக்கு ஏற்புடைய சங் பரிவார் எழுத்தாளர்களது நூல்களை அரசு பதிப்பு நிறுவனங்கள் வழியாக பதிப்பித்து வெளியிட்டு வருகிறது. அதை தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன பத்திரிகைகள் விதந்தோதி கொண்டாடி கட்டுரைகளை வெளியிடுகின்றன. அவர்களுடைய கருத்தியலே மதவாதக் கருத்துகளை பரப்புவதுதான்.
மூலக்கட்டுரை வினோத்குமார் -டிஓஐ
கருத்துகள்
கருத்துரையிடுக