சிறப்பு காவல்துறை அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை வல்லுநருக்குமான மோதல் காதல் கதை!

 

 

 

யூ ஆர் மை ஹீரோ
சீனதொடர்
யூட்யூப்
நாற்பது எபிசோடுகள்

சிறப்பு போலீஸ் அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை மருத்துவருக்கும் ஏற்படும் மோதல், காதல், இன்ன பிற பிரச்னைகள். குறிப்பாக, வேலை காரணமாக காதலிக்க நேரமில்லையே என காட்சிகளிலேயே கூறிவிட்டார்கள். பொதுவாக, இப்படியான தொடர்களில் இறுதிப்பகுதி தேசியவாதம் பேசுவதாக முடியும். கல்யாணத்தை ஒத்தி வைப்பது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்வது என்றெல்லாம் ஊதுபத்தி கொளுத்துவார்கள். இந்தக்கதை அப்படியெல்லாம் செல்லவில்லை என்பது பெரிய ஆறுதல்.

நகைக்கடை ஒன்றில் கொள்ளை நடக்கிறது. அதில் மூளை அறுவை சிகிச்சை மருத்துவர் சிக்கிக்கொள்கிறார். அவரை சிறப்பு போலீஸ் அதிகாரி காப்பாற்றுகிறார். முகத்தை மாஸ்க் போட்டு மறைத்திருக்கிறார். இதனால் நாயகி, மீகாவுக்கு அவரது முகம் தெரியவில்லை. உயிரைக்காப்பாற்றிய வீரருக்கு நன்றிக்கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். அத்தோடு சரி. நாயகியை காப்பாற்றியவர்தான் ஷிங் கெலாய் எனும் நாயகன்.

நாயகனுக்கு பிடிவாதம், அதீத தன்னம்பிக்கை, வேகமான செயல்பாடுகள் உண்டு. விதிகள் அதிக பிடிப்பு கொண்ட இரக்கமற்ற அதிகாரி. அவரோடு ஒப்பிடும்போது அவருக்கு கீழுள்ள உதவி பயிற்சியாளர் கேப்டன் சூ சற்று மென்மையானவர்.

நாயகி மீகா, வெகுளியான மருத்துவர். மூளை அறுவை சிகிச்சை வல்லுநராக பெருமுயற்சி எடுப்பவர். பெரிதாக சுயநலம் இல்லாத இளம்பெண். இதுதான் மூளை அறுவை சிகிச்சை வல்லுநரான மருத்துவர் ஷாவோவைக் கவர்கிறது. தொடக்கத்தில் மீகாவின் தோழிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்க உதவுகிறார். பின்னர், மீகாவை தனது மாணவியாக அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி கொடுத்து எடுத்துக்கொள்கிறார்.

பொதுவாகவே, இந்த தொடரில் எதிர்மறை உணர்வு குறைவு. அதுபோன்ற பாத்திரங்களைக் கூட பெரிதாக அதீதமாக பயன்படுத்தவில்லை. கதையில் அப்படி ஏதும் உருவாக்க இயக்குநர் விரும்பவில்லை. மீகாவின் ஆராய்ச்சி தகவல்களை அவரின் தோழி யான்ஷன் அழிப்பதும் பின்னாளில் மீகா அவரை ஏற்றுக்கொள்வதும் சரியான விஷயமாக தோன்றவில்லை. அது கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. யான்ஷான் பாத்திரத்திற்கான நியாயமாக குடும்ப மருத்துவர் பாரம்பரியத்தைக் காட்டுகிறார்கள். பெருமைக்காகவே மருத்துவர் படிப்பை படிக்க வைக்கிறார்கள். உயிரைக் காப்பாற்ற யான்ஷான் பெரிதாக மெனக்கெடுவதில்லை. அதுவே அவரின் அற வீழ்ச்சியாக மாறுகிறது. மருத்துவமனையை விட்டு விலகிச் செல்கிறார். பிரச்னை பொறாமை மட்டுமல்ல. இவரை காதலிக்கும் நண்பன் சென் டாவோவைக் கூட புரிந்துகொள்வதில்லை. அதுதான் பரிதாபமாக உள்ளது. சென் டாவோ உணவு மீது அக்கறை கொண்ட மனிதர். அதேசமயம், அறம் தவறி செல்லாத நிபுணத்துவம் இல்லாத மருத்துவர்.

இயக்குநர் வெய் பாத்திரம் கூட வதந்திகள் மூலம் மோசமான மருத்துவராக தொடக்கத்தில் காட்டப்பட்டாலும், அவர் அப்படி கடுமையாக நடந்துகொள்வதற்கான பின்னணியை கூறும் காட்சி உள்ளது. சிறப்பான காட்சி. இந்த பாத்திரத்தில் நடித்தவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகி மீகா, குறைந்த சம்பளம் கொண்ட மருத்துவர். அவருக்கு பிற மருத்துவர்கள் போல குடும்ப பின்னணி கிடையாது. உழைத்து, சந்தேகங்களை கேட்டு தெளிந்தே முன்னுக்கு வருகிறார். கதையில் எந்த இடத்திலும் தான் உள்ள பொருளாதார நிலைமை பற்றி சொல்லி, அதன் வழியாக உதவிகளை அவர் பெறுவதில்லை. மீகாவுக்கு மருத்துமனையில் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தரும் பயிற்சியை ஏற்பாடு செய்கிறார்கள். உடலை சற்று வலிமை செய்துகொள்ளும் பயிற்சி முகாம். அங்கு செல்லும் மீகா, பயிற்சியாளராக உள்ள ஷிங்கைப் பார்க்கிறாள். அவளுக்கு அவன்தான் தனது உயிரை சில ஆண்டுகளுக்கு முன்னர் காப்பாற்றியவன் என தெரியவில்லை. ஆனால், ஷிங்கின்று மீகாவை நன்றாக நினைவிலுள்ளது. எனவே, அவளை சீண்டிவிட்டு தண்டனைகளைக் கொடுக்கிறான். அந்த நேரத்தில்தான் மீகா, தனது புற்றுநோய் தோழிக்காக மருத்துவர் ஷாவோவின் உதவியை நாடி அலைந்துகொண்டிருக்கிறாள்.

தொடரில் நாயகனின் துப்பாக்கி சுடும் திறமையை விட அவனது புத்திசாலித்தனத்தை சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். முடிந்தளவுக்கு குற்றவாளிகளை கொல்லாமல் பிடிக்க முயல்கிறார்கள். கொலைகாரன் குடும்பஸ்தனாக இருந்தால், குடும்ப பாசத்தைக் காட்டி அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இந்த சிந்தனை, தொடரில் பெருமளவு ரத்த சேதாரத்தைக் குறைக்கிறது.

வேறு சில சுவாரசிய பாத்திரங்கள் என்றால் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் பத்திரிகையாளர் ஷியா, பார் நடத்தும் முன்னாள் சிறப்பு காவல்துறை அதிகாரி லூ பெங் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். லூ பெங், காதல் மன்னன். ஷியாவைப் பார்த்ததும் இவளைத்தான் கல்யாணம் செய்வது என்று கூட முடிவெடுக்கிறான். ஆனால் அவளோ, அகவயமான முசுட்டுத்தனம் கொண்ட கேப்டன் சூவைக் காதலிக்கிறாள். முக்கோண காதல் கதை போல வரும் காட்சிகள் நன்றாக இருந்தன.

கேப்டன் ஷிங்கின் படையில் பெண் வீரர் ஒருவரை சேர்க்கிறார்கள். அவருக்கு ஒரு வீரதீர அறிமுக காட்சி கூட உண்டு. இறுதியில் அவரை ட்ம்மியாக்கியது வருத்தமாக இருந்தது. ஏறத்தாழ தொடர் முப்பது எபிசோடுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கும் மேல் சொல்ல ஏதுமில்லை. ஆனால், கேப்டன் சென் மகள்கள் என இருவரைக் காட்டி கதையை இழுத்து அடபோங்கப்பா என்று சொல்ல வைக்கிறார்கள்.

காதலர்கள் இருவருமே பணிச்சுமை கொண்டவர்கள்தான். அதையும் தாண்டி காதல் அவர்களை ஒன்றாக இணைக்கிறது. அதை முடிந்தளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். முதன்மை பாத்திரத்தில் ஜியாங் டிங், மா சிச்சுவான் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கோமாளிமேடை குழு


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்