ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள வேறுபாடுகள்!
பாயும் பொருளாதாரம் 10
ஒரு நாட்டில் தயாரிக்கும் பொருளை இன்னொரு நாடு விலைக்கு வாங்கிக்கொண்டால் அது இறக்குமதி. ஒரு பொருளை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு விற்பது ஏற்றுமதி.
நியூசிலாந்தில் பால் வளம் அதிகம். எனவே, அவர்கள் அதை வளம் குன்றிய ஏழை நாடுகளுக்கு விற்கிறார்கள். சில நாடுகளில் இலவசமாக கொடுத்து தங்களுடைய பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அங்கு பால்வளம் மிகுதி. இதனால் பால், பால் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறது.
இப்போது உதாரணத்தைப் பார்ப்போம். நியூசிலாந்து பாலை பால் பொருட்களை மலிவாக விற்கிறது. சீனா, சோலார் பேனல்களை மலிவான விலையில் உற்பத்தி செய்து கொடுக்கிறது என்றால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பொருட்களை விற்றுக்கொள்ளலாம். இது இருநாடுகளுக்குமே லாபம்தான். தேசப்பாதுகாப்பு என முட்டுக்கொடுத்து தொலைத்தொடர்பு நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கலாம். ஆனால், காசு ஏராளமாக செலவாகுமே? பதிலுக்கு சீனாவிடம் குறைந்த விலைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை ஆசியாவிலேயே பெறலாம். ஆனால் இந்திய அரசை நடத்தும் மதவாத கட்சிக்கு கமிஷன் போய்விடுமே? ஏற்றுமதி, இறக்குமதியில் பயன்படுத்தும் கரன்சி சார்ந்து பயன் உண்டு. பாதகமும் உண்டு.
இந்தியா டாலரை உலகளவிலான வணிகத்திற்கு பயன்படுத்துகிறது. ரூபாய் இலச்சினையை தேவநாகரியில் உருவாக்கினாலும் அதை சந்தையில் துணிச்சலாக பயன்படுத்தும் திராணி அரசுக்கு இல்லை. பரிதாபமான காட்சி.... அமெரிக்கா போடும் பிஸ்கெட்டிற்காக வாலை ஆட்டி நிற்கும் அவலநிலை. ரூபாய் மதிப்பு சரிந்தால், டாலர் மதிப்பு கூடினால் ஏற்றுமதி செய்பவர்கள் லாபம் அடைவார்கள். அப்படியே தலைகீழானால், இறக்குமதி செய்பவர்கள் பயன் அடைவார்கள். அடிப்படையில் உள்நாட்டு கரன்சி மதிப்பு டாலருக்கு எதிராக சரியக்கூடாது. அது நாட்டை பெருமளவு பாதிக்கும். குறிப்பாக இறக்குமதியை மட்டுமே அதிகம் நம்பியுள்ள இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு...
ஒரு நாட்டின் பொருளுக்கு இன்னொரு நாடு அதிக வரியை எதற்கு விதிக்கிறது என்றால் உள்நாட்டு பொருளாதாரத்தைக் காக்கும் பொருட்டுதான். ஆனால் இன்று இன்னொரு நாடு தன்னைவிட வணிகத்தில் முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக காழ்ப்புணர்ச்சியோடு வன்மத்தோடு வரிகளை விதிக்கிறார்கள். குறிப்பாக இனவெறியர் டிரம்ப் ஆட்சித்தலைவராக உள்ள அமெரிக்காவை உதாரணமாக காட்டலாம். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிக்கிறது. வரி பிரச்னையை தீர்க்க வேண்டுமா? பரஸ்பரம் தடையில்லாத வணிக ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.
நீண்டதொலைவுக்கு பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுப்ப விமானம், கப்பல் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இப்படி அனுப்பி வைக்கப்படும் பொருட்களை முறையாக பரிசோதித்து குறிப்பிட்ட நாட்டின் பரிசோதனை அமைப்புகளிடம் தரச்சோதனை சான்றிதழ் வாங்கிவைத்து அனுப்புவது நல்லது. சென்ற ஆண்டில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட மசாலா பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அப்பொருட்களை அமெரிக்கா பரிசோதித்துவிட்டு தரம் திருப்தியில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டது.
வெளிநாட்டு பொருட்களுக்கு வரி உயர்வை அறிவித்தால் உள்நாட்டு தொழிலதிபர்களின் வாக்குகள், தேர்தல் நிதி, நன்கொடை நிறைய கிடைக்கும். எனவே, அரசியல்வாதிகள் அந்த வழியை பயன்படுத்திக்கொள்கிறார்கள். மக்களுக்கு இந்த வகையில் வேலைவாய்ப்பு உறுதியாகிறது. தனிப்பட்ட பயன்கள் இருந்தாலும் நாட்டிற்கு இதனால் என்ன கிடைக்கும் என்பதைப் பார்த்தால் பாதகமே அதிகம். அதாவது சுதந்திர வணிகமே சிறப்பானது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இருந்தால், விலையை பேசி வைத்துக்கொண்டு ஏற்றுவார்கள். அது மக்களை பாதிக்கும். ஆனால், போட்டி நிறுவனங்கள் நான்கைந்து பேராக இருந்தால் விலையை உடனே அதிகரிக்க முடியாது. சந்தை பங்களிப்பு போய்விடும். அலைபேசியில் பேசும் திட்டங்கள் மலிவாக கிடைக்கும். வரி என்பது, மக்களின் தலையில்தான் விடியும். க்ரீம் பன்னுக்கு வரி பதினெட்டு சதவீதம் என அறிவித்தால், அந்த தின்பண்டத்தின் விலை கூடிவிடும். அதை வாங்கி சாப்பிடுபவர்கள்தான் அதை கட்டவேண்டும். மெல்ல அப்பொருளின் விற்பனை குறையும்.
போட்டி இருந்தால்தான் நிறுவனங்கள் சிறப்பாக புதிய விஷயங்களை உருவாக்குவார்கள். தடகள வீரர் மைதானத்தில் ஒற்றை ஆளாக ஓடி வென்றுவிட்டேன் என்று கூறினால் அதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? சில வசதிகளை, சேவைகளை வழங்குவதில் தனியார் நிறுவனங்கள் ஏகபோக தன்மை கொண்டுள்ளன. அது மக்களுக்கு பெரிய நன்மையை வழங்குவதில்லை.
1945ஆம் ஆண்டில் இருந்தே உலகமயமாக்கம் உள்ளது. அதாவது சுதந்திர வர்த்தகம். இதில் கையெழுத்திடும் நாடுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலை குறைந்த வரி, நிறைந்த சலுகைகளுடன் தொடங்குகின்றன. சர்ச்சைகள் இருந்தாலும் நிறைய நாடுகள் சுதந்திர வணிகத்தை செய்து வருகின்றன. உள்நாட்டு வணிகத்தை காக்க சில கொள்கைகளும் சட்டங்களும் கூட கைக்கொள்ளப்படுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக