தீயசக்தி உலகை மாற்றியமைத்து நீதியின் பக்கம் கொண்டு வரத் துடிக்கும் தீயசக்தி இனக்குழுவின் இளம் தலைவர்!
ஐ இன்கார்னேட்டட் கிரேசி ஹெய்ர்
சீன காமிக்ஸ் தொடர்
அத்தியாயம் 96-
டீமன் கல்ட் எனும் தீமை இனக்குழுவில் வாழும் இளம் தலைவர் உடலில் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. அந்த ஆவி, முரிம் கூட்டணி தலைவரின் மூத்த மகனுடையது. அவர் நேர்மை நாணயம் நம்பிக்கை, கடப்பாரை என ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பொறுக்காமல் தேநீரில் விஷம் கலந்துவிட, ரத்தவாந்தி எடுத்து செத்துப்போகிறார். சாகும்போதே புயல் டிராகன் குழு எனும் தீமை இனக்குழுவை அழித்தொழிக்கும் வேலையை செய்கிறார். அக்குழுவின் தலைவர் கூட நாயகன்தான். அவரது ஆவி, தீமை இனக்குழுவைச் சேர்ந்த இளம் தலைவரின் உடலில் புகுந்தால் என்னாகும்? அதுதான் இந்த காமிக்ஸின் மையம்.
பொதுவாக நாம் அனைவருமே முப்பது வயதிற்குள் உலகில் வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்கிறோம். அதாவது, திருடப்போகிறோமா, அல்லது பிச்சை எடுக்க போகிறோமா என இரண்டு வாய்ப்புகள் நம்முன் உள்ளன. தேர்ந்தெடுப்பதை பொறுத்து வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளோடு அமையும். நன்மை, நீதி, நியாயம் என்று பேசுபவன், அதற்கு எதிரான குலம் என்று கருதப்படும் இடத்தில் அதை நிர்வாகம் செய்யக்கூடிய பதவிக்கு வந்தால் என்ன செய்வான்? நியாயத்தின் பக்கள் நிற்பானா, தனது முன்னாள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருந்து தனது இனக்குழுவை காட்டிக் கொடுப்பானா?
இளம் தலைவராக மு சான்சோ என்ற கொடூர இரக்கமில்லாதவராக நடந்துகொள்ள முயல்கிறார். ஆனால், இயல்பாகவே அந்த தொனி வேலை செய்யவில்லை. முற்பிறவியிலுள்ள நல்ல குணங்கள் காரணமாக, தன்னை இழிவுபடுத்துபவர்களைக் கூட கொல்ல யோசிக்கிறார். அதிலும் ஓரிடத்தில் தான் குகையி்ல மூன்றாண்டு கஷ்டப்பட்டு சம்பாதித்த ஆற்றலை அவரது பாதுகாவலர் உல் டேசிக்குக்கு வழங்குகிறார். அதுதான் அவரின் குணம் பற்றி பலருக்கும் தெரிய வைக்கும் இடம். அங்குதான் போதைப்பொருட்களை அழித்து அம்மக்களை விவசாயம் செய்ய வலியுறுத்திவிட்டு செல்லும் பிளாக்சன் உதயமாகும் பகுதி. உல் டேசிக், இளம் தலைவரின் கருணையால் அதீத வலிமை பெறுவதோடு, தனக்கு உதவியவருக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்க ஒப்புக்கொள்கிறார். அதோடு மட்டுமல்ல. அவரது மகளையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.
உல் டேசிக் தீமை இனக்குழுவின் தற்காப்புப் படை குழு தலைவர். சண்டை என்றால் அதில் எதிரிகளை உயிரோடு விட்டுவைக்க அவர் விரும்புவதில்லை. ஆனால், இளம் தலைவர் மு சான்சோ, தேவையில்லாமல் யாரையும் கொல்வதில்லை. இதனால் உல் டேசிக் அவர் இல்லாதபோது யாரேனும் வம்பு செய்தால் அவர்களை அடித்து சித்திரவதை செய்து கொல்கிறார். இவர் அடைமொழி ரத்த அசுரன். பெயருக்கு ஏற்ப, கிராமத்திலுள்ள சிறையில் வலிமை பெற்றபிறகு போடும் சண்டையில் எதிரிகளை அடித்து கைவேறு கால் வேறாக பிய்த்து வீசுகிறார். அந்த சண்டைக்கான ஓவியங்கள் பிரமாதமாக உள்ளது. அதுபோலவே இறுதியாக நடக்கும் ஹெவன்லி மாளிகை உரிமையாளருடனான குழப்பம் தரும் சண்டை திருவிழாவில் நடக்கும் சண்டையும் கூட குறிப்பிடத் தகுந்த ஒன்றுதான். இளம் தலைவருடன் மோதுபவர் ஒளியை அடிப்படையாக கொண்ட தற்காப்புக்கலையை பயன்படுத்துகிறார் என்பதால் முழுக்க வெள்ளை நிறமே அதிகம் தெரிகிறது.
வினோதமான குணம் கொண்ட பாத்திரங்களைப் பார்ப்போம். இவர்களையெல்லாம் இன்ன வகையென்றே இனம் பிரித்து பார்க்க முடியாது.
வாள் மாளிகை வீரரும் இளம் தலைவரின் மாமனார், இவர் வாள் மீது பித்து கொண்ட ஆள். கேள்வி கேட்பதற்கு கூட வாள் எடுத்து அவருடன் சண்டை போட்டால்தான் பதில் சொல்லுவேன் எனும் வினோதமான ஆள். இவருடன் இளம் தலைவர் செய்யும் சண்டையில், ஹெவன்லி டீமன் ஆர்ட்ஸ் கலையின் அதீத சக்தியால், செய்து வைத்த அத்தனை வாள்களும் மாவுபோல உதிர்ந்து போகும் சண்டைக்காட்சி படிக்கும்போதே அவ்வளவு உயிர்த்துடிப்புடன் உள்ளது. அதைப்போலவே இன்னொருவன், பா சிக். அப்பட்டமான துரோகி. கொடூரமான ஆள். தனக்கு உதவி செய்தவரின் மனைவி குழந்தையைக் கூட சித்திரவதை செய்த ஆள். ஒரு கிராமத்தையே போதைக்கு அடிமையாக்குகிறான். அதை தடுத்து இளம்தலைவர் மக்களை மீட்கிறார். அதைப் பொறுக்க முடியாமல் ஒட்டுமொத்த மக்களை படுகொலை செய்கிறான். இவனுக்கு ரத்த அசுரன் கொடுக்கும் தண்டனையுமே வேறு ரகம். அடுத்து, சூழ்ச்சியும், சதியும் கொண்ட ராஜதந்திர நூலகர். முரிம் கூட்டணியில் இருந்தபோது, அங்குள்ளவர்களால் துரோகத்திற்கு உள்ளாகி வேட்டையாடப்பட்டு குடும்பத்தை இழந்து இரு கால்களும் செயலிழந்த நிலையில் தீமை இனக்குழுவுக்கு வந்துசேர்கிறார். அவர்களுடைய உதவியால் எதிரிகளை வெல்ல நினைக்கிறார். புத்திசாலி. ஆனால் பழிவாங்கும் வெறியில், உதவிய இளம் தலைவரைக் கூட கொல்ல சதி செய்கிறார். கதையின் பின்பகுதியில் துரோகம் செய்து எதிரிகளிடம் சென்று சேர்கிறார்.
படுகொலை மாளிகையைச் சேர்ந்த ஓய் யுரோங்க். சைக்கோ. கையில் கிடைத்தவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தி ஓடவிட்டு நிதானமாக வேட்டையாடி கொன்று ரசிப்பவன். இவனிடம் சிக்கும் புயல் டிராகன் குழுவில் இளம் தலைவரின் நண்பன் ஒருவன் மட்டுமே பிழைக்கிறான். அவனும் பாதி பிணம் போல ஆகிறான். அதாவது ஜியாங்ஸி. அதாவது பொம்மை வீரன். இளம் தலைவர் கொடுக்கும் சக்தியை வாங்கி எதிரிகளை கொல்ல முயல்வது. பசி இருக்காது. உணர்விருக்காது. கொல்வது மட்டுமே நோக்கம்.
ஓய் யுரோங்க் பார்க்க டீனேஜ் பையன் போல இருந்தாலும் வயது அறுபதுக்கு மேல் இருக்கும். அவனது பலவீனமே யாராவது பந்தயம் கட்டிவிட்டால் முடிந்தது. அதை எப்படியாவது ஜெயித்துவிடவேண்டுமென கயிற்றுக்கத்தியோடு அதீத பிரயத்தனம் செய்வான். இவன்தான், இளம் தலைவருக்கு இறுதியாக நடக்கும் சண்டையில் உதவுகிறான். சலிப்பு ஏற்பட்டால், யாரையாவது கயிற்றில் கட்டி சித்திரவதை செய்வதுதான் யுரோங்கின் ஒரே பொழுதுபோக்கு. அதேசமயம், இவன்தான் டீமன் கல்ட்டின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்யும் ஆள். படுகொலை மாளிகையில்தான், வீரர்களுக்கு படுகொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. யுரோங்க் எதிரிகளை மட்டுமல்ல தனது ஆட்களைக்கூட ஒரு நொடி கூட யோசிக்காமல் கையை, காலை வெட்டுகிறான். கொல்கிறான். யூ யுல்சென் எனும் ரத்தக்கலை மாளிகை தலைவனை கொல்வதை லட்சியமாக கொண்டு இயங்குகிறான்.
இந்தகதை வெறும் டீமன் கல்ட் கதையாக முடியவில்லை. வெள்ளை இனக்குழு, மிங் மாளிகை, இளம் தலைவரின் தந்தை, அவர் இன்னொரு மிகப்பெரிய சக்திக்கு செய்துகொடுத்த வாக்குறுதி என நிறைய விஷயங்களோடு கதை பயணிக்கிறது. கூடவே இளம் தலைவரின் பரிதாபமாக குரூரமான இளமைக்கால வாழ்க்கையும் நம் கண்முன்னே விரிகிறது. அவை ஒரே சமயம் திகைப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த கதையில் நிறைய பாத்திரங்கள் நன்மை தீமை என பிரிக்கப்படவில்லை. கருப்பு, வெள்ளை என யாரையும் வகைப்படுத்திவிட முடியாது. சூழலுக்கு ஏற்ப கிடைக்கும் பயன்களைப் பெற பலரும் முண்டியடிக்கிறார்கள். நாயகன் முன்சோவுக்கு, டீமன் இனக்குழுவை எப்படியாவது தவறுகளில் இருந்து மீட்டு காப்பாற்றும் நோக்கம் இருக்கிறது. இதுவே அவரையொத்த பலரையும் ஒன்றாக சேர்க்கிறது. முன்சோ ஏன் கொடூரமாக நடந்துகொண்டார் என்பதற்கான விடை அவரது இளமைக்காலத்தில் கிடைக்கிறது. கதை அத்தியாயம் 96க்கும் மேலே நீள்கிறது. ஆனால் படிக்கத்தான் பீதியாக உள்ளது. அந்தளவுக்கு முன்சோவின் வாழ்க்கையில் சிறுவயது தொடங்கி ரத்தம் சிந்துகிறது. ஆட்சி, அதிகாரம், அதற்கான சுயநலப்போட்டிகள், துரோகம், வஞ்சம், பழி, பகை, வன்மம் என கதை நெடுக நிறைய அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒரு மனிதனின் செயலில் தெரிவது சில விஷயங்கள் என்றால் பேச்சில் சில விஷயங்கள் தெரியும். எந்த விஷயங்களுமே அவர்களாக மனம் திறந்து கூறினால் மட்டும்தான் எதையும் சரி என ஏற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் நடன மாளிகை மாஸ்டர் கூறும் கருத்துகள் வலியும் வேதனையும் கொண்டவை. அந்த சொற்களை இளம் தலைவர் ஏற்றுக்கொண்டு தவறை ஒப்பி, அப்பெண்ணை உயிரோடு விடுவதோடு பெண்களை தவறாக பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொள்வதைக் கூறும் இடம் முக்கியமானது. தொடக்கத்தில் இரக்கமில்லாதவர் என கருதிய பெண்ணை, இளம் தலைவர் உண்மை தெரிந்தபிறகு வேறு வெளிச்சத்தில் பார்ப்பார்.
பாத்திரங்கள் அனைத்துமே குறிப்பிட்ட மனநிலை, கருத்து கொண்டவை என உறுதியாக கூற எந்த தடயமே இல்லாத காமிக்ஸ் தொடர். பேரளவு வன்முறை காட்சிகளை ஓவியர் ரசித்து வரைந்து தள்ளியிருக்கிறார். தற்காப்புக்கலை, சாகச கதை என இருவிதமாக கதைகளைப் படிக்க விரும்புபவர்களும் கதையை தாராளமாக வாசிக்கலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக