வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்!
வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்
அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு டிவி சேனலின் தமிழ்ப்பிரிவு, ஒரு வீடியோவில் மருத்துவமுறை பற்றி விவாதித்திருந்தது. ஹோமியோபதி, பற்றிய வீடியோதான் அது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்திற்கானவை. அவற்றை முற்றாக நம்ப அல்லது மறுக்க முடியாது. அந்த செய்தி வீடியோவில், ஹோமியோபதி அறிவியல் நிரூபணம் கொண்ட மருத்துவமுறை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு என்பது போன்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான கமெண்டுகளில், செய்தியை ஏற்கிறோம், மறுக்கிறோம், விவாதிப்போம் என்றெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை. அலோபதியைப் பற்றி வீடியோ போடுங்கள்.ஏன் இந்த மருத்துவமுறையைப் பற்றி போடவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னும் சிலர், ஹோமியோபதி எங்களுக்கு பலன் கொடுத்து நோய் தீர்ந்தது. அதைப் பற்றி இப்படியொரு வீடியோ போட்டால் எப்படி என வம்புக்கு வந்தார்கள்.
மேற்கு நாடுகளில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் கூட பிரதமரை அமைச்சர்களை அரசு ஊடகம் கேள்வி கேட்க முடியும். இதற்கான உதாரணங்களை ஐக்கிய ராஜ்ஜியத்தி்ல் காணலாம். அங்குள்ள பிபிசி, அப்படியான செய்தி தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. டிடபிள்யூ டிவி ஜெர்மனியைச் சேர்ந்த அரசு ஊடகம். எந்திரங்களுக்கு பெயர் பெற்ற நாடுதான், ஹோமியோபதியின் பிறப்பிடம், அதை உருவாக்கிய சாமுவேல் ஹானிமேன் கூட அதே நாட்டைச் சேர்ந்தவர்தான். நம்மூர் ஆட்களுக்கு சித்தா, ஆயுர்வேதத்தைப் பற்றி கல்லீரல், சிறுநீரகம் கெட்டுப்போகிறது என உண்மையைச் சொன்னால் உடனே வடக்கு தேசத்தின் வடமொழி சட்டங்களில் பிடித்துக்கொடுக்க காக்கி டிரவுசர்கள், அரைவேக்காடுகள் முயல்வர். அது தெரிந்ததுதான். அளவுக்கு மீறிய வழிபாட்டு உணர்வு, அடிமைபுத்தி அப்படித்தான் வேலை செய்யும். ஆனால், ஹோமியோபதி கல்வியறிவு இல்லாத மூடநம்பிக்கை நிறைந்த உ.பியில் கூட அதிகம் பின்பற்றப்படுகிறது. இதைப்பற்றி ஏன் என கேள்வி எழுப்பி அதற்கான விடையையும் டிடபிள்யூடிவி தமிழ் கூறுகிறது. அதுதான் முக்கியம். அலோபதி படித்த மருத்துவர்கள் கிடைப்பதில்லை. அவர்களுக்கான ஊதியமும் அதிகம் என்பதால் ஹோமியோபதி மருத்துவர்களை உ.பி அரசு தேர்ந்தெடுக்கிறது. மேலும் ஹோமியோபதி மருந்துச் சந்தையும் மிகப்பெரிய லாபி கொண்டது. மருந்துகளை விற்க மருத்துவமுறையை அரசு முறையாக அங்கீகரிக்க வேண்டும். வெளிப்படையாக சொன்னால் அரசு மருத்துவமனைகளுக்கான பட்ஜெட்டை ஒன்றிய அரசு வெட்டி வருவதால், ஹோமியோபதி டாக்டர்களை நியமிப்பதில் பெரிய பிரச்னை ஏற்படாது. அவர்களுக்கான ஊதியம் குறைவு.
தமிழ்நாடு அரசு, ஹோமியோபதி மருத்துவத்தை அங்கீகரித்துள்ளது. மருந்துகளை ஆந்திரத்தின் சாந்தி, கேரளத்தின் ஹோமோ எனும் அரசு மருந்து நிறுவனத்தில் இருந்து டாம்ப்கால் வழியாக கொள்முதல் செய்கிறது. ஹோமியோபதியில் உள்ள மருந்துகளுக்கு காலாவதி நாள் கிடையாது. அவற்றை எப்போதும் சாப்பிடலாம் என அனுபவ ஹோமியோபதி முறை நூலில் கூறப்படுகிறது. இக்கருத்தை நம்ப முடியவில்லை. தாய் திராவகத்தை, பத்துஅல்லது பதினைந்து சொட்டுகள் நீரில் கலந்து நீர்த்துப்போகச் செய்து குடிக்கலாம். இதோடு சப்பித் தின்ன சிறிய இனிப்பு உருண்டைகள், மாத்திரைகள் உண்டு.
வழிபாட்டு உணர்வுக்கு வந்துவிட்ட மக்களுக்கு, விமர்சனங்கள் பிடிப்பதில்லை. எனக்கு பிடித்திருக்கிறது. பயன் கொடுத்திருக்கிறது. நான் ஏற்ற முடிவை எப்படி நீ குறை சொல்லலாம் என்ற நோக்கிலேயே பல்வேறு கருத்துகள் இடப்பட்டிருந்தன. வேறு எந்த கருத்தையும் ஏற்க மாட்டேன் என்ற பிடிவாதம் மட்டுமே தெரிகிறதே ஒழிய ஆராய்ச்சிகளில் இப்படியும் நிரூபணம் ஆகியுள்ளதா என்று தெரிந்துகொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவமே தெரியவில்லை. எல்லாமே தீவிரவாத இயக்கங்களின் வாட்ஸ்அப் வதந்திகளின் வேர் ஆழமாக பரவியிருப்பதைக் காட்டுகிறது.
தேசபக்தி, நாட்டை நேசிக்கிறோம் என்றால் உண்மையைக் கூட சொல்லக்கூடாது. விவாதமே கூடாது. கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்று கூறுவதல்ல. மேற்கு நாடுகள், இன்று வலதுசாரி மதவாத கருத்துகளுக்கு உள்ளே சென்றாலும் அவற்றின் ஊடக செயல்பாடு இந்தியாவைக் காட்டிலும் மேலானதே. ஜெர்மனி நாட்டை நினைவுகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஹோமியோபதியும் அப்படித்தான். அதன் வழியாக அங்கு நடக்கும் மருந்து விற்பனையும் கூட அதிகம். அப்படி இருந்தாலும் அரசு ஊடகமே, அதன் பக்கவிளைவுகள், மருத்துவமுறையின் பிரச்னைகள் பற்றி பேச முன்வருவதை நாம் வரவேற்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்கிறோம். நான் என் கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன். நீ ஏன் திறக்கச் சொல்கிறாய் என வசைபாடுவதில் இறங்குகிறார்கள். தன்னம்பிக்கை இல்லாத, உண்மைகளை காண விரும்பாத கோழைகளின் செயல் அது.
உண்மையில் பெருமைக்கு அல்ல. அனைத்து மருத்துவமுறைகளிலும் சாதக, பாதகங்கள் உண்டு. நேரடி விளைவாக நோய் தீர்கிறது. பக்கவிளைவாக உடலில் ஏற்படும் விளைவுகளும் ஏராளம் உண்டு. அதை சிலர் சொல்ல மறுக்கிறார்கள். அல்லது அதை பெரிதுபடுத்த விரும்பாத அளவுக்கு நோய் பெரிதாக உள்ளது. சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி என மூன்று மருத்துவமுறைகளிலும் தாவரம், விலங்கு, உலோகம் ஆகியவற்றில் இருந்து மருந்துகளை தயாரிக்கிறார்கள். இந்த மருந்துகளை நோய்க்காக எடுத்துக்கொள்ளும்போது நிச்சயம் பக்க விளைவுகள் உண்டு. தாவர மருந்து என்றால் பக்க விளைவே கிடையாது என்பார்கள். அதெல்லாம் விளம்பரத்திற்காக கூறுவது. அதில் கிஞ்சித்தும் உண்மையில்லை.
ஆயுர்வேத மருத்துவரான இல மகாதேவன், ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வந்தார். அவர் தான் எழுதிய நூல்களில் கூட ஆயுர்வேத மருந்துகளின் பக்கவிளைவைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். நிறைய மருத்துவர்கள் தயங்கிய வேளையில் அதை தைரியமாக செய்தார். நிறைய மருத்துவர்கள் காசு கிடைப்பதால், அதை கெடுத்துக்கொள்வானேன் என சொல்ல மாட்டார்கள். இப்போது ஹோமியோபதி மருத்துவம் பற்றி பார்ப்போம்.
நோயுள்ளவர்களுக்கு கொடுக்கும் வேதிப்பொருள் ஒருவருக்கு மருந்தாக செயல்படும். நோயில்லாதவருக்கு விஷமாக மாறும். ஹோமியோபதியில், நோயை உண்டாக்கும் காரணியை நீர்த்துப்போன வடிவில் கொடுக்கிறார்கள். இதனால், அந்த நோய் அதிகரித்து பிறகு குறையும். நோயின் காரணம், அதை தீர்க்கவும் உதவுகிறது என்பதே அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியில் கிருமிகளை விலங்கிடம் இருந்து பெற்று அதை பலவீனப்படுத்தி மனிதர்களின் உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக செய்கிறார்களோ அதே முறைதான்.
காக்கா வலிப்பு உள்ளவருக்கு ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டால், அவருக்கு அந்த வலி அதிகரித்து பிறகு மெல்ல குறையும். அந்த வேதனையை அவரால் சமாளிக்க முடிந்தால் சிகிச்சையை தொடரலாம். மருந்து தின்னும் ஒவ்வொரு முறையும் வலிப்பு தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான நோயாளிகளுக்கு வலிப்புக்கான மருந்தை அலோபதியில்தான் தேடுவார்கள். வலி, வேதனையை ஒருவர் தாங்க வேண்டுமே? அலர்ஜி மாதிரியான விவகாரங்களில் ஹோமியோபதி மருந்துகள், கை, கால்களை மரத்துப்போகச் செய்கின்றன. கூடுதலாக அலர்ஜி பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. அதாவது, நோயாளிக்கு என்ன நோய் உள்ளதோ அது பலமடங்கு பெருகி பிறகு குறையும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதைத் தாங்கிக்கொள்ள மனவலிமை, உடல் வலிமை என இரண்டுமே தேவை.
ஹோமியோபதி மருந்துகள் வெளிச்சந்தையில் குறைவான விலை என்று மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அவை என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி பேசுவதே இல்லை. பெண்களின் எடை குறைப்பு, பருக்களை நீக்குவது என்ற வகையில் மருந்துகள், தாய் திராவகம் கிடைக்கிறது. எடை குறைப்பு என்பதை எப்போதும் முறையான உணவு, உடற்பயிற்சி இன்றி தாய் திராவகத்தை, மாத்திரைகளை நம்பியே கடைபிடித்தால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படும். எனவே, வழிபாட்டு உணர்வை கைவிட்டு உண்மைகளை அகக்கண் போட்டு பார்க்க முனைய வேண்டும்.
நன்றி
டிடபிள்யூடிவி தமிழ்
கருத்துகள்
கருத்துரையிடுக