மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்
4
பாயும் பொருளாதாரம்
கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது?
மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும்.
பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறார்கள். திருமணமானவர்களுக்கு மட்டும் விடுதி என ஓயோ திட்டம் கொண்டு வருகிறது. இ்ந்தியர்களின் மூளையே மூளை. இதெல்லாம் யாருக்கும் தோன்றாத யோசனைகள். சைவத்திற்கு பச்சை, அசைவத்திற்கு சிவப்பு என்றெல்லாம் கூட உணவுசேவை நிறுவனங்கள் கரசேவர்களாக மாறிய கதைகள் உண்டு. வீட்டுக்கு வீடு புதிய நிறுவனங்களின் இயக்குநர், தலைவர், நிறுவனர் உருவாகி வருகிறார்கள்.
மீன்களை அதிகம் பிடிப்பது அதன் வளத்தை அழித்துவிடும். இதற்காக அரசு குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்துகின்றன. ஆறு பேர் உட்காரும் எம்யுவி எஸ்யுவி என வாங்காமல் யாரும் குடும்பம் நடத்த முடிவதில்லை. இத்தனை வாகனங்களை வாங்கி சாலையில் ஓட்டினால் கண்கொள்ளாத காட்சிதான். மறுக்கமுடியாது. ஆனால், ஒரு மணிநேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு நான்கு மணி நேரம் செலவாவது போக்குவரத்து நெரிசலால்தான். அதிகளவு கார்பன் வாகன புகையால் உருவாகிறது. இதன் விளைவாக அறையில் ஏசியில் பதுங்கினால், நிலத்தில் கால் பதிக்கும்போது வெப்பம் தகிக்கிறது. ஆம். பூமி சூடாகிறது.
ஒரு பொருளை அதிகம் பயன்படுத்தாமல் இருக்க, அரசு விதிகளை, சட்டங்களை வகுத்துள்ளது. ஒருவழிப்பாதை, போக்குவரத்து சிக்னல் என்பதை கடைபிடிக்கவே போலீஸ்காரர்கள் இல்லையா என மக்கள் பார்த்து வண்டி ஓட்டி மகிழும் தேசம். எனவே, இதை மாற்றுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதுதான் மக்கள் குழுவாக இணைந்து அமைப்புகளை அமைத்து விதிமீறல்களைத் தடுப்பது சிறப்பானதாக உள்ளது. அமைப்பாக மக்கள் இணைந்தால், பிரச்னைகளை பேசி முடிவுக்கு கொண்டு வரலாம். இதை அமெரிக்க பொருளாதார வல்லுநர் எலினார் ஆஸ்ரம் என்பவர் கூறியுள்ளார்.
இயற்கை வள ஆதாரங்களை பெருநிறுவனங்கள் அரசு நிறுவனங்களை விலைக்கு வாங்கி வேறு பெயரிட்டு கொள்ளை அடிக்கிறார்களா, அரசு தடுக்க மறுக்கிறதா, அமைப்பாக திரண்டவர்களை வைத்து போராடலாம். அணுக்க முதலாளித்துவமான நாட்டில் போராடுபவர்கள் தேச துரோகிகளாக கருதப்படலாம். செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படலாம். ஆனால், சுரண்டலை தடுக்க வேண்டுமா, மக்கள் ஒன்றாக இணைந்தால்தான் சாத்தியம். இப்படி செயல்படும்போது சுயநலவாதிகளை எளிதாக தடுத்து மக்களின் நலன்களைக் காக்க முடியும்.
மரக்கன்றுகளை நடுவதைப் பார்த்தால் சில முட்டாள்கள் தங்களை புத்திசாலியாக நினைத்துக்கொண்டு இதனால் பூமியின் வெப்பம் குறைந்துவிடுமா என்று கேட்பார்களம். அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சு. செயலாக மாறாது. செயலை செய்தால்தானே அதன் பயனை தெரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான், அல்லது முன்னே இருந்த ஆட்சியாளரின் மீது பழி போடுவதால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? நாம் செய்ய வேண்டிய முயற்சியை பிரயத்தனத்தை செய்யவேண்டும். அதற்குப் பெயர்தான் கடமை.
ஒரு வணிகத்தில் பொருட்களை தயாரிக்க, விற்க என அனைத்திற்கும் காசு தேவை. ஒரு கார் பொம்மையை செய்யவேண்டும் என்றால் அதற்கான அடிப்படை பொருட்களை வாங்கவேண்டும். அடிப்படை பொருட்கள், சம்பளம், குடோன் என இவற்றுக்கான தொகை எப்போதும் கூடியபடியே இருக்கும். இதெல்லாம் இல்லாமல் இடவாடகை, கடன், விளம்பரம் என தொகை எகிறும். பன், க்ரீம், க்ரீம் பன் என அனைத்திற்கும் அரசின் வரி தீவிரவாதத்தை வேறு எதிர்கொள்ளவேண்டும். இதெல்லாம் சமாளிக்க பொருட்களை விற்று லாபம் வரவேண்டும்.
வருமானத்திலிருந்து செலவுகளை கழித்துக்கொண்டால் கிடைப்பதே லாபம். பொதுவாக எந்த வணிகமும் லாபத்தை பெறவே நடத்தப்படுகிறது. நஷ்டத்தில் நடத்தப்படுகிற அதிர்ஷ்டத்தை அரசு நிறுவனங்கள் பெறுகின்றன. ஏழை நாடுகளில் அரசை தனிப்பட்ட சில வணிகர்களே கையில் எடுத்துக்கொண்டு, பொதுத்துறை வங்கிகளில் கடனை தள்ளுபடி செய்யவைத்து லாபம் பெறுகிறார்கள். தனது சட்டவிரோத வணிகத்தை வளர்க்க, விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களைக்கூட வாங்கிக்கொண்டு நாட்டை களங்கப்படுத்துகிறார்கள். இதுபோன்ற இழிவான நிலையை நாம் பார்த்து அனுபவப்பட்டு பழகி வருகிறோம்.
பணவீக்கம் அதிகரிக்கிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் எடை குறைக்கப்பட்டு அதே விலையில் தக்க வைக்கப்படுகின்றன. இதெல்லாம் மார்க்கெட் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்கள். விலையை குறைத்து தரத்தை அதைவிட குறைத்தும் சந்தையில் பொருட்கள் உள்ளன. வைரத்தின் விலையைக் குறைத்து மக்கள் உண்ணும் அரிசி, பருப்பு விலைக்கு வரி உயர்த்தி அதை புன்னகையோடு அறிவிக்கும் நிதி அமைச்சர்களும் நாட்டில் உண்டு. ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். தேசபாதுகாப்பு என்ற பெயரில் ஹூவாய் நிறுவனம் வேட்டையாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டது. நிறுவனரின் மகளைக் கூட அடக்குமுறையைக் கையாண்டு ஓராண்டு சிறையில் வைத்தனர். ஆனால் இன்று அந்த தொலைத்தொடர்பு நிறுவனம், சுயமாக இயக்கமுறைமை, சிப் ஆகியவற்றை உருவாக்கி சொந்த நாட்டில் தனக்கான மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. சவால்களை சாதகமாக மாற்றிக்கொள்ள வணிகம் நடத்துபவர்களுக்கு தெரியவேண்டும்.
பெரிய சிறிய வணிகம் என இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு. சிறிய நிறுவனத்தில் குழப்பம் குறைவு. அதன் கட்டமைப்பை எளிதாக புரிந்துகொள்ளலாம். சிறிய நிறுவனம் என்றால், அதிக சம்பளத்தை தர முடியாது. சில சேவைகளுக்கு வேறு நிறுவனங்களை நாட வேண்டியிருக்கும். பெரு நிறுவனங்களைப் பொறுத்தவரை அனைத்தையும் நிறுவனத்தில் உள்ள பிரிவுகளே பார்த்துக்கொள்ளும்.
கருத்துகள்
கருத்துரையிடுக