தினசரி வாழ்க்கையின் அங்கதத்தை விவரிக்கும் கட்டுரைகள்!
நகுமோ லேய் பயலே
செல்வேந்திரன்
கட்டுரை நூல்
எழுத்தாளர் செல்வேந்திரன், இலக்கிய வட்டாரங்களில் புகழ்பெற்றவர். வாசிப்பது பற்றிய நூலை எழுதி தொடக்கநிலை வாசகர்களிடையே கவனம் பெற்றவர். நகுமோ லேய் பயலே என்ற நூல், முழுக்க அவரது தினசரி வாழ்க்கை அனுபவத்தில் அடையாளம் கண்ட நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள் உள்ளன. அவற்றில் தீவிர இலக்கியம் சாராத கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை அனைவருக்குமானது.
இலக்கிய வட்டார அங்கதம் என்பது அங்குள்ள கிசுகிசு, வயிற்றெரிச்சல், பொறாமை, இன்பம், துன்பம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அரசியல் காமெடியை, அதிலுள்ள குத்தல், பகடி புரியாமல் பார்ப்பவருக்கு அதை விளக்கி சொன்னால் நன்றாக இருக்காது அல்லவா? எனவே, மேற்படி இலக்கிய அங்கதத்தை இலக்கியம் படைப்போருக்கு விட்டுவிடலாம். சாதாரணமாக படித்தாலே உங்களுக்கு அதிலுள்ள நகைச்சுவை புரிபட்டுவிடும். தனிப்பட்ட இலக்கியவாதிகளின் உடல், மனம், குணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு சிரிப்பவர்கள் சிரிக்கலாம். அல்லாவிட்டாலும் புன்னகைக்க ரசித்துப் படிக்க நிறைய இடங்கள் உண்டு.
முதல் கட்டுரையிலிருந்தே அண்ணாச்சி நகைச்சுவை தடாலடியாக தொடங்குகிறது. அது, அனுபவமாக அவஸ்தையாக இருந்திருக்க கூடும். ஆனால் வாசிக்க நகைச்சுவையாக உள்ளது. இதற்கடுத்ததாக தூஸ்ரா கட்டுரை, கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டது. தொடக்கத்தில் இக்கட்டுரையில் உள்ள யார்க்கர் ஆறுமுகம் நாயகன் போல அறிமுகமாகி பின்னர் அவரது பெயர்க்காரணம் உள்ளிட்ட பலவும் அங்கதமாக விளக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டத்தை பரபரப்பாக விவரித்திருக்கிறார் எழுத்தாளர் செல்வேந்திரன். இதைப்போலவே பஸ் பயணத்தில் குடிகாரர்களின் கேலிக்கு இலக்காகும் கட்டுரை, நகைச்சுவை கட்டுரைதான். ஆனால் அதுவே இன்னொரு பார்வையில் மர்மக்கதை போல மாறுகிறது. வயதான பெரியவர்தான் அதில் நாயகராக உருவாகிறார். கதையின் போக்கு, துல்லியமான நகைச்சுவை, எழுதும் போக்கிலேயே நகைச்சுவையான சூழல்கள் உருவாக்கப்படுவது என எழுத்தாளர் செல்வேந்திரன், நிறைய உழைத்திருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டும் அல்ல நூல்களிலும் அங்கதம் குறைந்துவிட்டது. பலரும் புராணம், காவியம் என தீவிரமாகிவிட்டார்கள். எனவே செல்வேந்திரனின் நகுலோ லேய் பயலே, வாசிக்கும்போதே பல்வேறு கட்டுரைகளுக்கு இடையில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. அதேசமயம் கட்டுரை எழுத்தாக கச்சிதமான வடிவத்தில் உள்ளது.
எழுபத்தாறு பக்கம் கொண்ட நூலை, தனது தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களை வைத்து நகைச்சுவையாக மாற்றி வாசகர்களை வாசிக்க வைத்திருக்கிறார். சிரிக்கவும் வைத்து மனங்களை வெல்கிறார்.
கோமாளிமேடை குழு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.amazon.in/NAGUMO-PAYALE-selvendhiran-%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D/dp/9388860896&ved=2ahUKEwi1uNWCm4iLAxW1mq8BHVhkBz0QFnoECB4QAQ&usg=AOvVaw1l3saxu2AYk9svdTVef6sL
கருத்துகள்
கருத்துரையிடுக