பொருளாதாரத்திற்கு உதவும் வேலை!
பாயும் பொருளாதாரம் 9
பொருளாதாரத்திற்கு உதவும் வேலை
யாருடைய செழிப்பிற்கு வேலை உதவுகிறது என்று உள்நோக்கமாக கேட்டால் பதில் சொல்லமுடியாது. பொதுவாக மனிதர்கள் அனைவருமே வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு, உடை, இருப்பிடம் பெறுகிறோம். இதற்கு மேல் காசு இருந்தால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தலாம்.
தொழிலாளர்களை தொடக்கத்தில் எந்த அரசும் பாதுகாக்கவில்லை. அவர்களே ஒன்று திரண்டு போராடித்தான் குறிப்பிட்ட எட்டுமணி நேர வேலைத்திட்டத்தை உருவாக்கினர். இன்று அந்த வேலை நேரத்தை மாற்றிவிட சுரண்டல் தொழிலதிபர்களாக சில பைத்தியங்கள் ஊளையிடுகின்றன. இதற்கு பதிலடியாக, வாகனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இப்படியான வேலை நேரத்தை மேல்நிலையில் இருந்து தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார். நிறுவனர், தலைவர், இயக்குநர் வாரத்திற்கு 90 மணிநேரங்கள் வேலை செய்கிறார் என்றால் அவரின் சம்பளம் அதிகம். தொழிலாளர்கள் அதை வாழ்நாளில் நினைத்து பார்த்திர முடியாத தொகை. அப்படியே உழைத்தாலும் உடல்,மனம் கெட்டுப்போவதுதான் மிச்சமாகும். கையில் காசு ஏதும் கிடைக்காது. பணக்காரன் எது பேசினாலும் சரி என்ற மனநிலையில் குப்பைகளை வாந்தி எடுத்து வருகிறார்கள்.
வலதுசாரி மதவாத கட்சியின் பொற்கால ஆட்சியில் ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்கள், பலவீனப்படுத்தப்பட்டுவிட்டன. இதற்கு, தொழிலாளர்களை மசியவைக்க வேண்டுமென மனநலம் கெட்டுப்போன கிழவாடிகளை வைத்து பேசிப் பார்க்கிறார்கள். சாதி,மதம், இனம், தேசப்பற்று என அனைத்துமே சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிற நாடு இந்தியா. முறையான சம்பளம், அதாவது பாலின பாகுபாடு இன்றி. பாதுகாப்பான பணியிடம், சரியான நேரத்தில் சம்பளம் வழங்கல், குழந்தை தொழிலாளர் இன்மை இதெல்லாமே ஒரு வளமான நாட்டிற்கு அவசியம்.
குறைந்தபட்ச ஊதியம் என்பது நாட்டிற்கு நாடு வேறுபடும். சில நாடுகளில், உள்நாட்டில் சம்பளம் அதிகம் கொடுக்கவேண்டி வந்தால், வேலைகளை மூன்றாம் உலக நாடான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு திருப்பிவிட்டு குறைந்த சம்பளத்திற்கு வேலையை முடித்துக்கொண்டு வளர்ச்சி பெறுவது இயல்பான நடவடிக்கையாகி வருகிறது. இதில் வேலை கொடுக்கும் நாடுகளுக்கு நிறைய பலனும் உள்ளது. மாசுபாடு நிறைந்த தொழில்களை ஏழை நாடுகளுக்கு தள்ளிவிட்டுவிடலாம். பிரச்னை வந்தால் அந்த நாடுகளை கைகாட்டிவிடலாம். குறைந்த கூலிக்கு உழையுங்கள் என மக்களை இந்திய அரசு மறைமுகமாக நிர்பந்திக்கிறது. சாதி சமூகத்தில் விலங்குபோல வாழும் வாழ்க்கையில் கையில் சொற்ப காசும் இல்லையென்றால் நிலைமை என்னாகும்?
மக்கள் வேலையிழப்பது, வேலைக்கான தேவை குறைவது, குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் வேலை செய்வது, குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பது, சம்பளத்தொகை சரிவது, நிறுவனங்கள் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு எடுப்பது... இப்படியான சூழல்கள் இருந்தால் அங்கு வேலையின்மை பெருமளவு நிலவுகிறது என்று அர்த்தம். விநியோகம், தேவை என்ற கொள்கையை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
வேலைக்கு ஆட்கள் தேவை என்ற இடத்தில் பணியாளர்கள் கிடைக்காமல் இருப்பது, பொருளாதார மந்த நிலையில் புதிய ஆட்களை யாரும் வேலைக்கு எடுக்காமல் இருப்பது, வேலைக்கு தேவையான திறன்களை பணியாளர் பெறாமல் இருப்பது, வணிகம் வெற்றிபெறாமல் தள்ளாடும்போது பணியாளரின் பணி நீக்கம் நடைபெறுகிறது. வேலையின்மை நாட்டில் எப்போதும் இருப்பதுதான். ஆனால் அதன் அளவு குறைவாக இருக்கவேண்டும். வேலையின்மை என்பது இளைஞர்களை உடல், மனம் என பல்வேறு நிலைகளில் பாதிக்கக்கூடியது. இதற்கு அரசு என்ன செய்யலாம்?
அனுபவம் இல்லாத இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது, திறன் பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குவது, வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு வரியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்த கொள்கைகளை வகுப்பது என அரசு செய்யும் வேலைகளைக் கூறலாம்.
வறுமை என்பது இந்தியாவில் பழங்குடியினர், மாங்கொட்டை விதைகளை அரைத்து கஞ்சி காய்த்து குடித்து அதிலுள்ள பூஞ்சையால் இறந்துபோனார்களே அந்தளவு சிக்கலாக இல்லை. ஒருவர் வாழும் நாட்டிலுள்ள விலைவாசியைப் பொறுத்து அடிப்படை தேவைகளை அவரால் தீர்த்துக்கொள்ள முடிகிறதா என்பதே விஷயம். உணவு, வீட்டு வாடகை, உடை, போக்குவரத்து செலவு, வெளி உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் சூழல், போன்களை பயன்படுத்துவது என பல்வேறு விஷயங்களைக் கணக்கில் கொள்ளலாம். வாடகை வீட்டில் இருப்பவர், வேலையை இழந்தால் அந்த சூழலை சமாளிப்பது கடினம். விரைவில் அவர் வேலையைப் பெறாதபோது வீட்டு வாடகையை சேமிப்புத்தொகையில் இருந்து முழுமையாக கட்டுவது கடினம். குடும்பம் இருந்தால் இன்னும் சிக்கல். பள்ளி,உணவுச்செலவு என பலதையும் எதிர்கொள்ள நேரிடும். அதேசமயம் சேமிப்பு இருந்து, சொந்த வீடு இருக்கிறது என்றால் கொஞ்சம் சமாளிக்கலாம். பெருநகரம் என்றால் செலவுகள் அதிகம். அதற்கேற்ப வரும்படி இருந்தால்தான் அங்கு மூச்சுவிட முடியும். இல்லையெனில் மூச்சு முட்டிவிடும்.
வறுமை வலை
மதவாத அரசு, பல்வேறு நுழைவுத்தேர்வுகளை வைத்து ஏழை விளிம்பு நிலை மாணவர்களை வடிகட்டி அவர்களை வலுக்கட்டாயமாக உடலுழைப்பு தொழிலாளர்களாக்கி வருகிறது. கூடவே மூத்திரத்தைக் குடி சாணியத் தின்னு எனும் போலி அறிவியல் பிரசாரம் வேறு செய்து வருகிறது. இதெல்லாமே வறுமை, வேலையின்மை, நிர்வாக செயலின்மையை மறைக்கும் பிரசாரங்கள். செயல்பாடுகள். அடிப்படையில் மக்களுக்கான நல்லரசு, அவர்களின் இந்நாள் மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் உழைக்கும். அதற்கான திட்டங்களை தீட்டும்.
வறுமையைப் பார்ப்போம்.
ஒரு சிறுவன் தனது குடும்பத்தில் வறுமை நிலையை அடையாளம் காண்கிறான். இப்படி இருப்பவன் பள்ளி செல்வதே கடினம். நூல்கள் வாங்க, கல்விக்கட்டணம் கட்ட காசு வேண்டுமே? குறைந்த கூலிக்கு பெற்றோர் வேலைக்கு சென்றுவிட மாணவன் பள்ளிக்கு செல்லவேண்டும். அவனுடைய கல்வியில் பெற்றோரின் பங்கு குறைவாகவே இருக்கும். உடல் உழைப்பு தொழிலாளர்களாக பெற்றோர் இருந்தால் அவர்களே பள்ளி சென்றிருக்க மாட்டார்கள். அல்லது குறைவாக படித்திருப்பார்கள். இதெல்லாமே சிறுவனுக்கு பின்னடைவு. வறுமையை சமாளிக்க அவனும் குழந்தை தொழிலாளர் ஆவான்.
அடுத்து, வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. அங்கீகாரம் கிடையாது. குறிப்பாக சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை. அதேசமயம் அவரால் அந்த வேலையைக் கூட கைவிட முடியவில்லை. இதற்கு தொழிலாளருக்கு திறன் இல்லை என்பது முதல் காரணம். அடுத்து, வேலைவாய்ப்பு சந்தை பலவீனமாக இருக்கலாம். பொருளாதார மந்தநிலை பிரச்னை இருக்கலாம். இப்படி குறைந்த கூலிக்கு செல்பவர், அடிபட்டுவிட்டால் வேலை போய்விடும். உடல்நலம் குன்றிய நிலையில் படுக்கையில் கிடப்பார். சோற்றுக்கு கூட அவர் தனது சேமிப்பை பயன்படுத்த வேண்டும்.
மூன்று தலைமுறைக்கு சொத்துள்ளவர் என்றால் அதைக் காத்துக்கொண்டால் போதும். பெரிதாக கூடுதலாக சம்பாதிக்க வேண்டியதில்லை. மாணவன் படிப்பில் சொதப்பினால் கூட ட்யூசன் வைத்துக்கொள்ள முடியும். காசு கொடுத்து அரசு வேலையைக் கூட வாங்கிவிடலாம். சாலையில் செல்பவரை காரில் ஏற்றிக் கொன்றால் கூட காசு கொடுத்து பிணையில் வெளியே வந்துவிடலாம். வல்லுறவு கொலை எல்லாம் பணக்காரப் பிள்ளையின் திறனைப் பொறுத்தது.
உருப்படியான சர்வாதிகாரத்தனம் இல்லாத நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால், யார் காலையும் நக்காமலேயே பதவி உயர்வு சம்பளம் உயரும். வேலை செய்யும் சூழலும் சற்று மேம்பட்டதாக நன்றாக இருக்கும். யாருடைய சிபாரிசில் வேலைக்கு வந்தாய் என கேட்க மாட்டார்கள். சொகுசு கழிவறைக்கு தனி அட்டை இருக்காது. ஒருவேளை காயம் பட்டால் சில நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும். அலுவலகம் வர வாகனங்கள் ஏற்பாடு செய்வது கூட உண்டு. சில நிறுவனங்கள், பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த உதவியும் வழங்காமல் புன்னகையோடு மறுப்பது உண்டு.
பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது, அதிக சம்பள இடைவெளி இல்லாமல் இருப்பது, வேலையின்மையை பெருமளவு நீக்குவது, வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச தொகை வழங்குவது, கல்வியை இலவசமாக அளிப்பது ஆகியவை பொதுவாக வறுமை ஒழிப்பில் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக