திட்டமிட்டு எதிரிகளை அழித்தொழித்து ரத்தக்களறியாடும் புரட்சித் தலைவன்!




 


எதிரிகளை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவன்!

ஹெவன்லி டீமன் நாட் லிவ் இன் நார்மல் லைஃப்
சீன காமிக்ஸ் தொடர்
100+---

டிமிட்ரி குடும்பத்தின் மூத்தமகன் ரோமன். இவர் தற்கொலை செய்துகொள்ள அவரது உடலில் தொன்மை காலத்து தீயசக்தி இனக்குழுத் தலைவரின் ஆவி உள்ளே புக, நவீன காலத்தில் நடக்கும் அதிகார மேலாதிக்கம் உருவாகிறது. அதை பேசுகிற கதைதான் இது.

டிமிட்ரி குடும்பம் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்து இரும்புத்தாதுவை தோண்டிஎடுத்து விற்று செல்வந்தர்களானவர்கள். அவர்களின் பின்புலத்தில் அரச குடும்பமோ, அல்லது வேறு சக்தி வாய்ந்த ஆட்களோ இல்லை. எனவே, அவர்களை வடகிழக்கு பகுதியில் செல்வந்தர்களாக மாறினாலும் கூட பிற குடும்பத்தினர் மதிப்பதில்லை. இதை ரோமன் கண்டுகொள்கிறான். வடக்கிழக்கிலுள்ள அத்தனை பேர்களையும் பலத்தைக் காட்டி மிரட்டி தனக்கு அடிபணியச் செய்கிறான். அதேநேரம், கைரோ நாடு நான்கு பிளவுபட்ட சக்திகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இளைஞரான மன்னருக்கு முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லை. குரோனோ, அரிஸ்டோகிரேட், வல்கல்லா என மூன்று சக்திகளோடு சமரசம் செய்துதான் அரசரின் ஆட்சி நடக்கிறது.

ரோமன் உடலுக்குள் தீயசக்தி இனக்குழுத் தலைவரின் ஆவி உள்ளே வந்தபிறகு, மாற்றங்கள் நடக்கின்றன. தெருவில் கந்துவட்டிக்குழு ஒன்று இளைஞனை அடித்துக்கொண்டிருப்பதை ரோமன் பார்த்து, அவர்களை அடித்து வீழ்த்துகிறான். அவன் காப்பாற்றும் கெவின்தான் பின்னாளில் வலிமையான விசுவாசமான பாதுகாவலாக மாறுகிறான். டெவில் ஆப் டிமிட்ரி என பெயர் பெறும் கெவின்தான், ரோமனின் முதல் விசுவாச ராணுவ வீரன். கெவின் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்துவட்டி கடனுக்காக பிளட் ஃபேங் என்று மாபியா குழு அவனை, அவனது குடும்பத்தை சித்திரவதை செய்துவருகிறது. உண்மையை தானாகவே விசாரித்து தெரிந்துகொண்ட ரோமன், அதன் தலைவரை அடித்து நடுத்தெருவில் வீசி படுகொலை செய்கிறான். அதுதான் ரோமனின் பெயர் சொல்லும் முதல் சம்பவம்.

ரோமன் அடித்துக்கொல்லும் பகுதி, லாரன்ஸ் என்ற வணிக குடும்பத்திற்கு சொந்தமானது. அவர்கள் கந்துவட்டி குழுவை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், அவர்களது பகுதிக்கு வந்து ரோமன் கந்துவட்டி குழுவை முற்றாக அழித்து தலைவரைக் கொன்றபிறகு வேறுவழியின்றி ரோமனை அழைத்து விசாரணை செய்கிறார்கள். அவன், இது என்னுடைய பகுதி கிடையாது.உங்களது பகுதிதான். ஆனால், மக்கள் மாபியா குழுவால் பாதிக்கப்படும்போது நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இதற்கு நீங்கள் என்னை பாராட்டவேண்டும் என்று கூறுகிறான். இப்படி பேசுவதற்கு சில காரணங்கள் உண்டு. லாரன்ஸ் அவனது வருங்கால மாமனாராக போகிறவர். மருமகனை எப்படி கொலைக்காக சிறையில் தள்ளமுடியும்? சிம்பிள் லாஜிக்.

வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரான லாரன்ஸ், டிமிட்ரி குடும்பத்தோடு அரசியல் திருமணத்தை திட்டமிட்டிருக்கிறார். அவருடைய மகள் புளோராவை, ரோமனுக்கு கல்யாணம் செய்தால் லாரன்ஸ் குடும்பத்தின் சொத்தை பார்கோ குடும்பத்திடமிருந்து பாதுகாக்கலாம் என திட்டமிடுகிறார். ஆனால், ஆவி உடலில் புகும் முன்னர் தொடக்கத்தில் குடிகாரனாக சுற்றிய ரோமன் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. மகளை அடகு வைத்தாவது குடும்பத்தைக் காக்கவேண்டும் என யோசிக்கிற அயோக்கிய அப்பன் அவர்.

ரோமன், பார்கோ குடும்பத்தைப் பற்றி யோசிக்கிறான். ரோமன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது என ஆராய்கிறான். அப்போதுதான் ஆண்டனி பார்கோ பற்றி தெரிய வருகிறது. அவன்தான், உறவுக்கார பெண்ணுடன் ரோமன் குடிபோதையில் உறவுகொண்டான் என போலியாக தந்திரம் ஒன்றை செய்து லாரன்ஸ் குடும்ப கல்யாணத்தை தடுக்கிறான். அந்த விவகாரம் வெளியே வந்தால் அவமானம் என்று நினைத்து ரோமன் தற்கொலை செய்துகொள்கிறான். பிறகுதான் தீயசக்தி ஆவி, ரோமனின் உடலில புகும்கதை.

தொன்மைக்கால தீயசக்தி இனக்குழு தலைவரான ஜூயுக்தான் ரோமன் டிமிட்ரி என கைரோ முழுக்க புகழ்பெறுகிறார். கதையின் தொடக்கத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் அந்தளவு சிறப்பாக இல்லை. ஆனால் கதை ஓரளவுக்கு நகர்ந்தபிறகு ஓவியங்கள் அழகாக நேர்த்தியாக மாறுகின்றன. ரோமன், தானாகவே ஒருவரை தேடிச்சென்று என்னோடு சேர்ந்துகொள் என்று கூறுகிறார் என்றால் அது கெவின், மெக்பர்னி என்ற இருவர் மட்டும்தான். இவ்விருவருக்குமே உழைப்பு மீது நம்பிக்கை உண்டு. அதேநேரம் அநீதி என்றால் அய்யா நிலைமை இப்படி இருக்கிறது. இதை மாற்றவேண்டும் என உறுதியாக கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். கெவின், நெற்றியில் ரத்தம் வருமளவு தரையில் அடித்து ரோமனை பின்பற்றுவதாக கூறுகிறான். அதற்குப் பிறகு வரும் அவனது குடும்பம், அதுதொடர்பான காட்சிகள் அனைத்துமே சற்று நெகிழ்ச்சியானவை.

ரோமன் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நீ எனக்காக வாழவேண்டும். ஒத்துக்கொண்டால், உன்னை நான் காப்பாற்றுவேன். எப்போதும் கைவிடமாட்டேன் என்கிறான். அதை அவன் காப்பாற்றுகிறான். போர் வந்தால் வீரர்களோடு தோளோடு தோள் சேர்ந்து நின்று முன்னிலையில் சண்டை போடுகிறான். சுரங்கம், ஆயுதங்களை தயாரிக்கும் கொல்லர் பட்டறை என அனைத்து இடங்களுக்கும் சென்று ஊழியர்களோடு பேசுகிறான். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்தும் வைக்கிறான். நிலக்கரி சுரங்க விபத்துகளை தடுக்க அதிக விலை கொண்ட பாதுகாப்பு கருவிகளை வாங்கிப் பொருத்துகிறான். இதெல்லாமே ரோமனுக்கான விசுவாசத்தை மக்களிடையே உருவாக்குகிறது. நமக்கு ஒரு பிரச்னை என்றால் முதலாளி வருவார். உதவுவார் என நம்பிக்கையை உருவாக்குகிறார். வெறும் பசப்பு வார்த்தை, பேச்சு கிடையாது. ஒன்றை செய்கிறேன் என்றால் அதை உறுதியாக நின்று செய்கிறான். ரோமன் பாத்திரம் தலைமைத்துவம் கொண்டது. கதையின் ஒரு கட்டத்தில் தன்னை கொலை செய்யும் திட்டம் வல்கல்லா நாட்டில் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தே அங்கு செல்கிறான். இறுதியாக அங்கு நிறைய போட்டியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வெல்கிறான். அரசோடு இணைந்து வீரர்களுக்கு விஷம் வைத்த பார்போசா என்பவனையும் பிடி சாம்பல் இல்லாமல் காற்றில் கரைக்கிறான். அதேநேரம், மோரல்ஸ் என்ற உண்மையான வீரனுக்காக, பார்போசா பற்றிய உண்மையை நேரடியாக மக்களுக்கு கூறுகிறான். வல்கல்லா, பழங்குடி மனிதர்களைக் கொண்ட தேசம். நவீன வசதிகள் இருந்தாலும் அங்கு, வலிமையே எல்லாம் என்ற எண்ணம் இருக்கிறது. வீரன் என்றால் பெருமை உண்டு.  இதனால், ரோமனுக்கு வல்கல்லா வீரர்களே ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதற்கு வீரர்களுக்கு உரிய போராடும் ஆன்மா ரோமனுக்கு உள்ளது என அம்மக்கள் நம்புவதே காரணம்.

இதுபோலவே தன்னோடு திருமணத்தை மறுத்த, அவமானப்படுத்த முயன்ற லாரன்ஸ் குடும்பத்திற்கு ஆபத்துகாலத்தில் உதவி செய்கிறான். பின்னாளில் அவர்கள் டிமிட்ரியை அப்படியே பின்தொடர்கிறார்கள். புளோரா லாரன்ஸ், ஒருகட்டத்தில் டிமிட்ரி ராணுவத்தில் இணைகிறாள். இதேபோல, ரெட்போர்ட் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிப்பதோடு, அக்குடும்ப தலைவரின் முட்டாள்தனமாக இரக்கம் தவறு என கூறுகிறான். அத்தலைவரை அடித்து வீழ்த்து தங்கத்தை கொள்ளையடித்த ஜாக்குலின் என்பவனை ஒரு சதுக்கத்தில் மக்கள் முன்னிலையில் இரு வீரர்களைக் கொன்றதற்காக சிரச்சேதம் செய்கிறான். அதேநேரம், லார்ட் கவுன்ட் லண்டன் எப்படிப்பட்டவர், மக்களுக்கு உழைத்தவிதம் எப்படி என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறான். நம்பிக்கையை விடாமல் இருந்தால் வாய்ப்புகள் வரும் என லார்ட் கவுன்டிற்கு, அவரது அப்பா முன்காலத்தில் கூறிய வாசகத்தை எதார்த்தமாக கூறுகிறான்.

காமிக்ஸ் கதையில் சமகாலம், தொன்மைக்காலம் என இரண்டுமே பாதிபாதியாக வாசகர்களுக்கு காட்டப்படுகிறது. தொன்மைக்காலத்தில் வாழ்ந்தபோது சந்தித்த மனிதர்களை, ரோமன் நவீனகாலத்திலும் சந்திக்கிறான். அவர்கள் அவனுக்கு முன்பே அறிந்த மனிதர்கள் போல தோன்றுகிறார்கள். ஒரு தலைவனாக வீரர்களை எப்படி வழிநடத்தவேண்டும் என்பதற்கானபாடம், ரோமனுடைய கதையில் உள்ளது. துரோகிகளை அடையாளம் கண்டு சந்தித்த சில நிமிஷங்களிலேயே வெட்டி வீழ்த்துகிறான். அதற்கெல்லாம் அவன் கவலையே படுவதில்லை. சண்டை போடுபவர்களில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள், அயராத மனவலிமை, விட்டுக்கொடுக்காமல் போராடும் சிலரை மட்டும் உயிரோடு விடுகிறான். கவுன்ட் நிக்கோலஸ் என்பவரோடு போடும் சண்டையில் அவரைக் கொல்வதற்கு சாத்தியம் இருந்தாலும் அதை செய்வதில்லை. அடித்து வீழ்த்தி நினைவிழக்கச் செய்கிறான்.

குடும்பத்தின் தலைவர் பதவிக்கு வருவதற்கு நான்கு மாதங்கள்தான் உழைக்கிறான். அனைவருமே அவனை பாராட்டத் தொடங்கிவிடுகிறார்கள். வாள் தயாரிக்கும் மாஸ்டர் ஹென்ட்ரிக்கிற்கு தனது கையால் தயாரித்த வாள் ஒன்றையே பரிசளிக்கிறான். கடந்த காலத்தில் மாஸ்டர் ஓராண்டு கடினமாக உழைத்து செய்த வாளை, திருடி குறைந்த விலைக்கு தெருவியாபாரிக்கு விற்ற வரலாறு ரோமனுக்கு இருக்கிறது. அதுபோன்ற தவறுகளை அவன் மெல்ல சரிசெய்துகொள்கிறான். இதெல்லாம் கடந்து கைரோ நாட்டிற்காக போரில் தென்முனைக்கு செல்கிறான். அங்கு பெறும் பயிற்சிகள், தனக்கென உருவாக்கிய ராணுவப்படையை வைத்து ஹெக்டார் நாட்டு படைகள் பத்தாயிரம் பேரை வீழ்த்துகிறான். இது நாடு முழுக்க பேசுபொருளாகிறது.

பல குழுக்கள் ரோமனை பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றன. ஆனால் அடிப்படையி் ரோமனுக்கு இன்னொருவரின் கீழ் வேலை செய்யும் இயல்பே கிடையாது. அரசருக்கு ஆதரவாக இருக்கிறான். அரசரின் ஆதரவை பங்கு போடும் மூவரைக் கொல்கிறான். அந்த குழுக்களை முற்றாக அழித்தொழிக்கிறான். இதனால் நாடு குழப்பங்களைக் களைகிறது. அதை வைத்தே தனது வடகிழக்கு பகுதிக்கு தன்னாட்சி கோருகிறான். அதையும் இளம் மன்னர் வழங்குகிறார். கைரோ நாட்டின் நூறு தற்காப்புக்கலை வீரர்களை மோதி தோற்கடித்து தன்னை நிரூபிக்கிறான் ரோமன். இதெல்லாம் சாதாரணமான விஷயமா என்ன? இதனால் ரோமனை எதிர்ப்பவர்கள் கூட வாயடைத்து போகிறார்கள். வடகிழக்கு பகுதியில் தற்காப்புக்கலை வீரர்களுக்கான போட்டியை நடத்தி ஆறு குழுவிலும் பிறரை தோற்கடித்து முதலாக வருபவருக்கு தங்க காசுகளை பரிசாக கொடுக்கிறான். அதுவும் அவனது படையினர் வென்றால்  கூடுதலாக தற்காப்புக்கலை நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கிறான். அவனது வலிமையைக் கண்டு ஒரு கட்டத்தில் சாதாரண கொல்லனின் மகன் என பேசியவர்கள் கூட மௌனமாகிறார்கள். வடகிழக்கு பகுதி கூட்டமைப்பு, டிமிட்ரி கூட்டமைப்பு என பெயர் மாற்றப்படுகிறது.
இந்த காமிக்ஸ் அரசியல், தற்காப்புக்கலை என இரண்டு விஷயங்களையும் ஓரளவுக்கு சிறப்பாகவே அணுகி வெற்றி பெற்றுள்ளது. வாசிக்கவும் மோசமாகவெல்லாம் இல்லை. தொடக்கத்தில் ஓவியங்கள் சற்று தரமில்லாததாக இருந்தாலும் பின்னர் அனைத்தும் சீராகிவிட்டது. கதையின் உரையாடல்களில் ரோமன் என்ற பெயரும், டக்குன்னு விஷயத்துக்கு வா என்ற வசனமும் வராத அத்தியாயமே கிடையாது.

வயது வந்தோருக்கான காமிக்ஸ். கதையில் வன்முறை உண்டு. அதை ரோமனின் பாத்திர படைப்பையொட்டி ஏற்றுக்கொள்ளலாம். அந்த பாத்திரம் ஏழை, விளிம்புநிலை குடும்பத்திலிருந்து மேலேறி வருகிறது. அப்போது அவன் சந்திக்கும் சமூக, அரசியல், பொருளாதார எதிர்ப்புகள் என்று பார்த்தால் இக்கதை நிறையப் பேருக்கு பிடிக்கும்.
 

கோமாளிமேடை குழு

thanks 

https://kunmanga.com/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்