நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா!
நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா!
இயக்கம் சுந்தர் சி
இசை விஜய் ஆண்டனி
2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம். தலைப்பில் சொன்னது போல, பள்ளி வாத்தியார் ஒருவரின் மகள் கல்யாணத்திற்கு நான்கு நண்பர்கள் வருகிறார்கள். அந்த கல்யாணத்திலேயே மணப்பெண்ணுக்கு பெரிய விருப்பமில்லை. அவள் தனது அப்பாவின் வழி மாமனைக் காதலிக்கிறாள். ஆனால்,திருமணமோ, அம்மாவின் வழி மாமனோடு நடக்க ஏற்பாடு ஆகிறது.அதாவது பகையாக உள்ள இரு குடும்பங்களை திருமணம் இணைக்கிறது. ஆனால், இதில் நம் நாயகன் உள்ளே புகுந்து கல்யாணத்தை காதல் கல்யாணமாக்கி பிரச்னையை சரி செய்கிறார். அடிதடி, பன்ச் வசனங்கள் இன்னபிற அனைத்தும் உண்டு. அனைத்தையும் தாண்டி காமெடி வருவதுதான் படத்தைக் காப்பாற்றுகிறது.
படத்தில் அஞ்சலி, வரலட்சுமி என இரு நாயகிகள். இருவருமே கவர்ச்சி நடனம், மார்பகம் தெரிய குனிந்து யோகா செய்வது, இடுப்பைத் தொட்டவுடன் காதல் வருவது, கிணற்றில் நாயகனுடன் ஒன்றாக த்ரீசம்மாக குளிப்பது, கிராமத்து வாய்க்காலில் கிளுகிளு ஆடையில் குளிப்பது என என்னென்னமோ செய்கிறார்கள். படத்தின் கடைசியில் சதா வேறு பாடல் ஒன்றுக்கு வந்து ஆடுகிறார். ஆக மொத்தம் நாயகிகள் காட்சி வரும்போதெல்லாம் கிளுகிளுப்போ கிளுகிளுப்பு.
கதையில் என்னாகும் என ஊருக்கே தெரியும் இல்லையா? அம்பானி அதானி போல நாளிதழ், பத்திரிக்கை, மதவாத கட்சிகளை நடத்தும் ஒருவர்தான் வில்லன். அவருடன் ஏற்படும் ஈகோ மோதலை ஃபேன்டசியாக காட்டியிருக்கிறார்கள். இறுதியாக நாயகன் ஆறு படிக்கட்டுகளோடு தோன்றி, வில்லனை அடித்து உதைத்து அவரின் காசை திருடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிறார். கவர்ச்சி வெல்கிறது. கூடவே காமெடியும். வேறு என்னத்தைச் சொல்ல?
கிராமத்தில் இருந்து நகருக்கு வந்து அங்குள்ள வில்லனை வெல்வது ஒரு கமர்சியல் டெம்பிளேட். படத்தை பெரும்பகுதி தாங்குவது நடிகர் சந்தானம், அரசியல்வாதியாக வரும் மனோபாலா மட்டுமே. படத்தில் பேசப்படும் காட்டப்படும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. எடுத்துக்கொண்டால், சிறையில் தள்ளப்படும் வாய்ப்பே அதிகம். கவர்ச்சி, காமெடிக்கான படம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக