ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வரும் தொன்மை மருத்துவர்!

 

 

 




காலம் கடந்து வரும் தொன்மை மருத்துவர்
சீனதொடர்
யூட்யூப்

சீனாவைப் பொறுத்தவரை நிறைய டிவி தொடர்களை ஒன்றாக இணைத்து அதை திரைப்படம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியான டிவி தொடர்தான் இது. அனைத்து டிவி தொடர்களிலும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பெரிதாக சீன எழுத்தில் இருக்கும். மற்றொன்று சிறியதாக ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில சப்டைட்டில் போட்டு உலகளவில் வியாபாரம் பார்க்கிறார்கள். இந்த தெளிவும் வியாபார புத்தியும்தான் சீனாவுக்கு பெரிய பலம்.

இளம்பெண், பாரம்பரிய சீன மருத்துவமனையை நடத்தி வருகிறாள். ஆனால் அவளுக்கு நோயாளிகளின் நோயைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. உண்மையாக என்ன நோய் என்று கண்டுபிடித்தாலும் அதைக்கூறாமல் ஏராளமான மருந்துகளை பரிந்துரைத்து அதையும் தனது கடைவழியாக விற்று காசு சம்பாதிக்கிறாள். இதில் அவளது தம்பியும் உடன் நிற்கிறான். நாயகியின் தந்தைக்கு மகள் முறையாக மருத்துவம் பார்ப்பதே பிடித்தமானது. அவள் தில்லாலங்கடி வேலை பார்த்து காசு சம்பாதிப்பது பிடிக்கவில்லை.
இந்த சூழலில், அவர்களது வீட்டில் மாட்டியுள்ள பழைய தொன்மையான ஓவியத்தின் முன் நாயகி நின்று பிரார்த்தனை செய்கிறாள். அவளுக்காக பாரம்பரிய குடும்பத்தின் முன்னோர்களில் ஒருவர் அங்கு தோன்றுகிறார். அதாவது நவீன காலத்திற்கு மன்னர் காலத்தின் வைத்தியர் வருகிறார். வந்து நாயகியின் பிரச்னைகளை தீர்த்து வைத்து மறைந்துபோகிறார். அதற்குள் இருவருக்கும் நடக்கும் உரசல், காதல், மோதல் ஆகியவை முக்கியமானவை.

இந்த தொடர் சீன பாரம்பரிய மூலிகை வைத்தியத்தை, மருத்துவமுறையை பிரசாரம் செய்கிறது. செய்யும் விஷயங்களை சரியாக செய்தால், அதற்கு கிடைக்கும் பயன் என்பது எல்லையற்றது. எதையும் வேண்டிப்பெறவேண்டியதில்லை. அதுவாகவே கிடைக்கும் என கூறுகிறார் இயக்குநர். தொன்மைக்கால வைத்தியருக்கு அழகுக்கலை, வைத்தியம், ஓவியம், இன்னும் என்னென்னமோ தெரியும். ஆனால், அத்தனையும் வைத்து பணம்பண்ண முடியாது என்பதால், பெண்களுக்கு மேக்கப் போடுவதை மட்டும் செய்து பார்க்க முயல்கிறாள் நாயகி. அதில் வெற்றி காண்கிறாள். நாயகியின் தம்பி உணவு வீடியோ போட முயன்று தோல்வியடைகிறான். காரணம், அவனுக்கு நல்ல தோற்றமில்லை. ஆர்வமூட்டும் பேச்சும் இல்லை. இந்த நிலையில் தொன்மை வைத்தியருக்கு சிகை அலங்காரம் செய்து புதிய நவநாகரிக உடைகளை உடுத்தினால் உடை மாடல் போல அழகாக இருக்கிறார். நண்டு பிராண்டு லுங்கி மாடல் போல கட்டுமஸ்தாக தோன்றுகிறார்.
நாயகி, பாரம்பரிய மருத்துவர்.நாயகன், தொன்மை மருத்துவர். இருவரையும் இணைப்பது ஒரே கல்லில் செய்த இரு பொருட்கள். ஒன்று நாயகி அணிந்துள்ள வளையல், நாயனான வைத்தியர் வைத்துள்ள அடையாள இலச்சினை. இரண்டும் ஒன்றையொன்றை ஈர்க்கிறது. தனியாக பிரிக்க முடியாதபடி மந்திரக்கட்டு உள்ளது. நாயகன் ஓவியத்தில் இருந்து வந்தாலும் பூமியில் முப்பது நாட்கள்தான் இருக்க முடியும். அவனோடு காதல் உறவு கொள்ளும் நாயகிக்கும் ஆயுள் குறையும் அபாயம் இருப்பதை புத்த துறவி கண்டறிகிறார். அதேநேரம்,நாயகியை தீய மனத்து மருத்துவன் ஒருவன் காதல் நாடகம் நடத்தி அவளின் சொத்தான மருத்துவமனையை கைப்பற்ற நினைக்கிறான். இறுதியாக என்னவானது என்பதே தொடரின் இறுதிக்காட்சி.

ஒரு மணிநேரம் ஓடும் தொடர் பெரிதாக சலிப்பு ஏற்படுத்தவில்லை. நவீன காலத்திற்கு வரும் தொன்மை மனிதர்கள், தொன்மை காலத்திற்கு செல்லும் நவீன மனிதர்கள் என இருவகை கதைகளுமே சுவாரசியம் ஏற்படுத்துபவைதான். தொடர் நிறைவடையும்போது, சீன பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வுசெய்ய தொன்மை வைத்தியரின் சாயலில் ஒரு இளைஞன் வந்து சேர்கிறான். நாயகி, அவனைப் பார்த்து வியந்துபோகிறாள்.

சீன சமுதாயத்தில் பெண்கள் தனக்கான ஆண்களை மணம் செய்யத் தேர்ந்தெடுப்பதை நேரடியாக வசனம் மூலமே இயக்குநர் சொல்லிவிட்டார். மகிழ்ச்சி.நாயகன், நாயகி என இருவருக்குமான காதல் காட்சிகள் வேடிக்கையாக படமாக்கப்பட்டு உள்ளன. காலத்தால் பெரிய இடைவெளி உள்ள மனிதர்கள் எப்படி நெருங்குகிறார்கள் என்பது யோசிக்கவே வினோதமாக உள்ளது.

சீன மருத்துவமுறையை உயர்த்திப்பிடிக்கும் தொடர்தான். ஆனால், அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மோசமில்லை. தொடரை அதிக ஜெர்க் இன்றி தொகுத்து ஒன்றாக மாற்றியுள்ளனர்.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்