தமிழ் இணையம் 2024 செயற்கை நுண்ணறிவு
தமிழ் இணையம் 2024
செயற்கை நுண்ணறிவு
உலககெங்கும் கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. சந்தையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு துறைகளிலும் ஆய்வுகளை செய்துவருகின்றன. வணிக ரீதியாக செயற்கை நுண்ணறிவை இணையத்தில் பயன்படுத்தும் முறையை ஓப்பன் ஏஐ நிறுவனம், நவம்பர் 2022ஆம் ஆண்டு செய்து காட்டியது. இதன் வழியாக கிடைத்ததுதான் சாட்ஜிபிடி சேவை. அறிமுகமான ஒரு வாரத்திலேயே பல கோடி மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து உதவும் கருவிகளை மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் கொண்டிருந்தன. ஆனால் அவை வணிகரீதியாக துல்லியமாக இல்லை. சாட்ஜிபிடியின் வருகை இணையத்தில் அதுவரை இருந்த தேடுதல் வணிகத்தையே மாற்றியமைத்திருக்கிறது.
பொதுவாக தேடுபொறியில் ஒரு தகவலைத் தேடும்போது, இணையதளங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காண்பிக்கப் பெறும். ஆனால், சாட்ஜிபிடியில் தேடும் தகவலே சுருக்கமாக வந்துவிடும். குறிப்பாக உளவியலில் வாசிக்க வேண்டிய முக்கிய நூல்கள் ஐந்து அல்லது பத்து வேண்டும் என்றால் சில நிமிடங்களில் பதில் கிடைத்துவிடும். இதற்கு, முன்னர் போல தேடுபொறியில் கிடைக்கும் பல்வேறு வலைத்தளங்களை ஒருவர் சொடுக்கி தேடிக் கொண்டு இருக்க தேவையில்லை. எந்தளவு கேள்வியைத் துல்லியமாக அமைத்து தேடுகிறீர்களோ பதிலும் அந்தளவு சரியாக நேர்த்தியுடையதாக கிடைக்கும்.
மக்களின் பங்களிப்பு
செயற்கை நுண்ணறிவில் மேம்பட்ட தொழில்நுட்பம் என சாட்ஜிபிடியைக் குறிப்பிடலாம். அமெரிக்காவில் ஐந்து சதவீத நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தம் வணிகத்தில் பயன்படுத்தி வருகின்றன. 2024-2027 வரையிலான காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையங்களின் வழியாக இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவழிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு மாடல்களை உருவாக்க பேரளவிலான மின்சார ஆற்றலும், தகவல்களும் தேவைப்படுகின்றன. இந்த மாதிரிகள், துல்லியமாக செயல்பட வேண்டுமெனில், அவற்றுக்கு தகவல்களைக் கொடுத்து சிறப்பாக பயிற்றுவிக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவுகள் அதிகம்.
கல்வி, வேளாண்மை, போக்குவரத்து, பாதுகாப்பு, மனிதவளம் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சேவையை, பெரு நிறுவனங்களை விட மக்களே அதிகம் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டித் தருகின்றனர் என்பது ஆச்சரியம் தரக்கூடிய செய்தி.
செயற்கை நுண்ணறிவு மூலம், எதிர்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு ஆகிய இருதுறைகளிலும் முக்கியமான கண்டுபிடிப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கலாம். தொழில்துறை பணியாளர்கள், செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பயம், தயக்கம் இருந்தாலும் காலத்திற்கேற்ப மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களை முற்றாக எதிர்க்க முடியாது.
எதிர்வினைகள்
தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைக்கு வந்தபிறகு, அதைப் பயன்படுத்திக்கொண்டு பணியிடங்களைக் குறைத்து தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதும் நடந்து வருகிறது. பொதுவாக, புதுமைத்திறன்களோடு, புதிய தொழில்நுட்பத்தை ஏற்று பணிபுரிவதற்கு தன்னை தயார் செய்துகொள்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது. கலைத்துறையினருக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் இழப்பை விட பயன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
செயற்கை நுண்ணறிவு தன்னை மேம்படுத்திக்கொள்ள இணையத்தில் உள்ள பல்வேறு தகவல்களை முறையான அனுமதி பெறாமல் எடுத்துக்கொண்டது. இதற்கு எதிராக, அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ, இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேபிளிலிட்டி ஏஐ ஆகிய நிறுவனங்கள் மீது காப்புரிமை மீறல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளை, அத்தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுத்துள்ளன. ஆனால் மறுபக்கம் ஓப்பன் ஏஐ நிறுவனம், தகவல்களை இடையூறுகள் இன்றி பெறுவதற்காக இருபத்தொன்பது ஒப்பந்தங்களை பல்வேறு நிறுவனங்களோடு செய்துகொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு சில நாடுகளும் தயாராகி வருகின்றன. ஜப்பான், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் காப்புரிமை விதிகளை திருத்தி, காப்புரிமை பெற்ற தகவல்களை அனுமதியின்றி, கட்டணமின்றி பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளன. இதன்மூலம், செயற்கை நுண்ணறிவு மாடல்கள் தகவல்களை எளிதாக கற்க முடியும். ஐரோப்பிய கூட்டமைப்பும் கூட தனது காப்புரிமை விதிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர ஏதுவாக மாற்றிக்கொண்டுள்ளது. எதிர்மறையாக சாதி, மதம், இனவெறுப்பு, பிரிவினை, வன்முறை, கலவரம் ஆகியவற்றை தூண்டும் விதமாக போலிச்செய்தி, காணொளி காட்சிகளை, ஒலித்தொகுப்பை உருவாக்குவதும் நடந்துவருகிறது. இதை எதிர்கொள்ள நாளிதழ்கள், அரசுகள் போலிச்செய்திகளைக் கண்டறிவதற்கான குழுக்களை அமைத்து வருகின்றன.
கொள்கைத் தொடக்கம்
என்விடியா என்ற அமெரிக்க நிறுவனம், தனது செயற்கை நுண்ணறிவு சிப்களை தைவான் நாட்டின் டிஎஸ்எம்சி என்ற நிறுவனத்தோடு இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு, காலம் சென்ற கணிதவியல் வல்லுநரான டேவிட் பிளாக்வெல் என்பவரின் பெயரைச் சூட்டியுள்ளது. மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை தங்களது கணினி, ஸ்மார்ட்போன், இணைய தேடுதல் சேவைகளிலும் இணைத்து வருகின்றன.
1956ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில், கணினி தொழில்நுட்பம் சார்ந்த மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற ஜான் மெக்கார்த்தி, மார்வின் மின்ஸ்கி, நாதானியல் ரோச்ஸ்டர், கிளாட் சனோன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினர். அதற்குப் பிறகுதான் தொழில்நுட்ப வட்டாரங்களில் செயற்கை நுண்ணறிவு வார்த்தை, ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் புழக்கமாகத் தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பயிற்றுவிக்கப்படும் தகவல்களைப் பெற்று தன்னை மேம்படுத்திக்கொண்டு, மாற்றிக்கொண்டு பரிணாம வளர்ச்சி பெறக்கூடியது. வணிகரீதியாக இதைப் பயன்படுத்த செய்த முயற்சியின் விளைவாக தானியங்கு உரையாடி(Chatbot), மெய்நிகர் உதவி(Virtual assistant) ஆகிய வசதிகள் மேம்பட்டன.
சவாலும் வாய்ப்பும்
செயற்கை நுண்ணறிவோடு பிளாக்செயின், எந்திரக் கற்றல், ஆழ் கற்றல் என பல்வேறு தொழில்நுட்பங்களும் இணைந்து வருகின்றன. அடிப்படையில் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சிக்கலான, ஒரே மாதிரியானசெயல்பாடுகளை எளிதாக திட்டமிட்டு அமைத்துக்கொள்ள முடியும்.
உலகமயமாக்கலின் காலத்தில், நிலம், மொழி, கலாசார வேறுபாடுகளைக் கடந்து எளிதாக பிற நாடுகளை அணுகுவதற்கு பாலமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு, வாய்ப்பு சவால் என இரண்டையுமே கொண்டுள்ளது. அதை நமது நாட்டிற்கான ஆக்கப்பூர்வ பார்வையில் கண்டுபிடிப்புகளாக மேம்பாடுகளாக மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள், இதற்கான பதிலை அளிப்பார்கள் என நம்பலாம்.
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக