சுதந்திர வணிகம்!
பாயும் பொருளாதாரம் 11
சுதந்திர வணிகம்
ஒரு நாடு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இன்னொரு நாடு அதே பொருளை தயாரிக்க அதிக செலவாகிறது. நினைத்த அளவுக்கு தரமும் மேம்படவில்லை. ஆனால் வேறு சில பொருட்களை சிறப்பாக தயாரிக்கிறது. இந்த சூழலில் பொருளை சிறப்பாக தயாரிக்கும் நாடு, அதை தயாரிக்க விட்டுவிடலாம். அதே பொருளை சிறப்பாக தயாரிக்க முடியாத நாடு, அம்முயற்சியை கைவிட்டு தனக்கு எளிதாக தயாரிக்க முடிகிற பொருளைத் தயாரிக்கலாம். இப்போது இருநாடுகளும் வணிகம் செய்தால் இரு பொருட்களை ஒருவருக்கொருவர் குறைவான விலையில் விற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். பரவலாக அனைத்து மக்களும் வாங்குகிற இயல்பில் இருக்கும்.
அமெரிக்கா விமானங்களை சிறப்பாக தயாரிக்கிறது என்றால் அதை இன்னொரு நாடு வாங்கிக்கொண்டு பயன்பெறலாம். தற்சார்பு என்ற பெயரில் முழங்கால்களை தரையில் தேய்த்துக்கொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை.
சீனா, வெளிநாட்டு வரி தீவிரவாத செயல்களை சமாளித்து கணினி,அலைபேசிகளுக்கான சிப்களை கூட உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. அவ்வளவு ஏன் ஓப்பன் ஏஐயை அடிப்படையாக கொண்டு அதைவிட மலிவாக டீப்சீக் ஆர்1 என புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கூட நடைமுறையில் கொண்டுவந்துவிட்டது. அதை ஆராய்ச்சிக்கு அந்தளவு செலவழிக்க முடியாத, அறிவியல் வளராத ஆசியாவில் உள்ள பிற நாடுகள் அல்லது உலக நாடுகள் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். மீண்டும் நானே உருவாக்குகிறேன் என நேரத்தை பணத்தை மனித வளத்தை வீணாக்க வேண்டியதில்லை. சுதந்திர வணிகம் என்பது யாரால் என்ன முடியுமோ அதை தயாரித்து பிறருடன் வணிகம் செய்துகொள்வதுதான்.
அனைத்து நாடுகளுமே உள்நாட்டு வணிகத்தை காக்க சில கட்டுப்பாடுகளை செய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முழுக்க ஏகபோகமாக இல்லாமல் இருக்க வரி விதிக்கின்றன. வரிகள் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் போட்டியிட வளர வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தற்சார்பு என்ற பெயரில் இன்னொரு நாட்டில் தயாரித்த பொருட்களை ஒன்று சேர்த்து உள்நாட்டில் தயாரித்தது என விற்கும் கோல்மால்களும் நடக்கின்றன. அதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. வாங்குபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தரமே இல்லை எதற்காக அதிக விலை கொடுத்து உள்நாட்டுப் பொருட்களை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் பலரும் கேள்வி கேட்பவர்களை தடுத்து வாயை மூட நினைக்கிறார்கள். அணு உலை, ஆயுதங்களை விற்பது ஆகிய வியாபாரங்களை இரு நட்பு நாடுகள் மட்டுமே தங்களுக்குள் செய்துகொள்கின்றன. சந்தேகம் கொண்டால் இவ்வகை வணிகம், ஒப்பந்தம் ஆகாது.
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றது. விளைவாக, அமெரிக்காவில் பாக் தீவிரவாத இயக்கங்கள் பல தாக்குதல்களை நடத்தினர். ஏழை நாடுகளில் வளர்ந்த நாடுகள் அமைக்கும் அணுஉலை பாதுகாப்பாக அமைக்கப்படுவதில்லை. இதில் வெளியாகும் கதிர்வீச்சு பல கோடி மக்களை பாதிக்க கூடியது.
அணு உலைகளில் பயன்படும் தனிமங்கள் கதிர்வீச்சு தாக்கம் கொண்டவை. சந்தையில் வாங்குவது கடினம். வளர்ந்த நாடுகள், வளரும் நிலையிலுள்ள நாடுகளுக்கு குறிப்பிட்ட நிபந்தனை அடிப்படையில் வழங்குகின்றன.
வணிகப்போர்
சீனா, பொருளாதார வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்கா, ஜனநாயகம் இல்லை, பற்பசையில் உப்பு இல்லை, வைரஸ் பரவுகிறது என பயத்தில் உளறி வருகிறது. சீன இறக்குமதிக்கான வரியை உயர்த்தி வருகிறது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க நாட்டு இறக்குமதி பொருட்கள் மீது வரி விதித்து வருகிறது. இதை வணிகப்போர் என்று கூறலாம். இப்படியான வரி விதிப்பிற்கு தேசப்பாதுகாப்பு என சர்க்கரை கோட்டிங் வேறு கொடுக்கிறார்கள்.
1930ஆம் ஆண்டு அமெரிக்காவில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பொருட்களை சந்தையில் விற்க முடியாமல் தடுமாறினார்கள். அவர்களுக்கு உதவ அரசு, இறக்குமதி பொருட்களுக்கு வரியை பலமடங்காக உயர்த்தியது. இதனால் இறக்குமதி அளவு குறைந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் வரியை விதித்ததால், ஏற்றுமதி குறைந்துபோனது. இதனால் வேலைவாய்ப்பின்மை உருவானது. பல நிறுவனங்கள் மூடப்பட்டன. 1934ஆம் ஆண்டு அமெரிக்க ஜிடிபி பாதியாக குறைந்தது.
பிரிக்ஸ், குவாட், ஆசியான் என நிறைய கூட்டமைப்புகள் உள்ளன. இதில் உள்ள நாடுகள், முக்கியமாக குறிப்பிட்ட நாடுகளை எதிர்த்து போராட முனைகி்ன்றன. வணிக ரீதியாக ஒப்பந்தம் இல்லாமல் சுதந்திர வணிகம் செய்வதும் அமைப்பாக திரண்டு செயல்படுவதில் உண்டு. இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடுகளுக்கும் கூட சில நிபந்தனைகளின் படி வணிகத்தில் சலுகைகளை அளிக்கிறார்கள். இப்படியான அமைப்புகள் வணிகம், அரசியல் ஆகியவற்றை சார்ந்துள்ளன. ஐரோப்பிய யூனியன் என்பது கூட பல நாடுகளின் கூட்டமைப்பு. இதில் மக்கள், நிதி, வணிகம், அரசியல் என அம்சங்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள மக்கள், தங்கள் உறுப்பினர் நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம். அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்குள் யூனியன் சட்டப்படி வரி செலுத்தினால் போதும்.
உலகளவில் நடைபெறும் வணிக விவகாரங்கள், பூசல்கள், சண்டை ஆகியவற்றை உலக வர்த்தக கழகம் தீர்க்கிறது. புதிய ஒப்பந்தங்களை இந்த அமைப்பு மூலம் உருவாக்கிக்கொள்ளலாம்.
உலக நாடுகளின் பேரளவு பொருளாதாரத்தை குறிப்பதே உலகமயமாக்கம்.சுதந்திர வணிகம் மூலம் உலக பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துள்ளது. தகவல்தொடர்பு, கன்டெய்னர்கள் மூலமாக உலகமயம் பிற நாடுகளுக்கு எளிதாக பரவலாகிவருகிறது.
உலகில் எழுபது சதவீதம் கடல்தான். எனவே, வணிகம் கடலில் கப்பல்கள் மூலமே அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பயன்படும் இரும்பு பெட்டிகளை கன்டெய்னர் என்று கூறலாம். 1945ஆம் ஆண்டு, ஒரு கப்பலிலிருந்து பொருளை இறக்கி வைத்து ஏற்ற ஒரு வாரம் தேவைப்பட்டது. இப்போது ஆறுமணிநேரம் தேவை. இணையம், குறுஞ்செய்தி ஆப்கள் வந்துவிட்டதால் தகவல்தொடர்பு வேகமாகிவிட்டது. எளிதாக உரையாடி வணிகத்தை செய்யமுடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக