பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1

 

 





இன்செக்ட் டிடெக்டிவ்
சீன தொடர்
யூட்யூப்

ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது.

முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின்.

இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிறார். அதைப்பார்த்து அவரை காப்பாற்ற நினைத்து அதிகாரிகள் உள்ளே போக, தேனீக்களால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். ஜின்னும் கடிபடுகிறது. ஆனால், அவன் அதை பரிசோதனையாக செய்து பார்க்கிறான். ஆனால் காவல்துறையினரோ, பிடிவாதம் காட்டி சுயநினைவை இழக்கும் எல்லைக்கு செல்கிறார்கள்.

மூடநம்பிக்கை, பொறாமை, பாலியல் சுரண்டல், வல்லுறவு, சந்தேகம், பொய், பேராசை ஆகியவையே வழக்குகளின் மையப்பொருள். பொதுவாக வழக்குகள் என பார்க்காமல் அதில் குடும்ப உறவுகள் சார்ந்த உணர்வுகளை இணைத்திருக்கிறார் திரைக்கதை ஆசிரியர், கதை எழுதிய குழுவினர். எனவே, தொடர் நிதானமாக நகர்ந்தாலும் கூட சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பால்கனியில் கீழே விழுந்த செவிலியர் கதையில், ஏராளமான ட்விஸ்டுகள். பார்வையாளர்களுக்கு முதலில் ஒருவர் எப்படியென காட்டிவிட்டு பிறகு அவரைப் பற்றி மற்ற பாத்திரங்கள் அறிய வைப்பது நல்ல உத்தி. அந்த கதையில் எதிர்மறை உணர்ச்சிகள் சற்று அதிகம். ஒரே ஒரு கடுஞ்சொல் எப்படி மனிதர்களை குரூரமானவர்களாக, பழிவாங்கும் இயல்பினராக மாற்றுகிறது, அதற்காக அவர்கள் போகும் எல்லையை விளக்கியிருக்கிறார்கள்.

அதுபோலவே இரட்டையரான ஃபேங்கர் சகோதரிகள் கதையும் மனதை வேதனையில் ஆழ்த்தக்கூடியது. பெண்களை அடிப்பது, உதைப்பது, வல்லுறவு செய்வது இவர்களை தண்டிப்பது பற்றிய வழக்கு. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது கிராமத்தினருக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் அவளை யாருமே காப்பாற்ற முன்வருவதில்லை. பதிலுக்கு இப்படி நடக்கிறதே என்று சொல்பவளை ஊரே ஏசுகிறது. அடித்து துன்புறுத்துகிறது. உண்மையில் அந்த வழக்கில் அந்த பெண் வீடியோ செய்தியை வெளியிடுவது சமூகத்தின் அறம் எப்படி வீழ்கிறது என்பதை கூறுகிற சான்று.

டாக்டர் வென்னை டாக்டர் ஷி காதலிக்கிறாள். ஒருதலையாகத்தான். ஆனால் டாக்டர் வென்னுக்கு காவல்துறையில் பணியாற்றும் ஜின்லிங்கின் மீது அதீத காதல். ஆனால், அதை அவரால் வெளிப்படுத்த முடிவதில்லை. அதற்கு அவரின் சமூக அங்கீகாரம் இல்லாத பின்னணியும் காரணம். கதையில் அது பின்னால் வருகிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஜின்லிங்கிற்கு, ஜின்டானின் அறிமுகம் சற்று புதிதாக உள்ளது. அவன், அவளை ஒரு சோதனை மாடலாக வைத்து சோதிக்கிறான். அப்போது அவளுக்கு கோபம் வந்து அவனை தூக்கி வீசுகிறாள். பிறகு மன்னிப்பு கேட்கிறாள். ஜின்டாங், ஜின் லிங் என இருவருக்குமான உரையாடலே சற்று எதிர்காலத்தில் உள்ளதாக தோன்றுகிறது. இருவர் பேசுவது அவர்களுக்கு மட்டும்தான் புரிகிறது. கொலை வழக்குகளை தீர்ப்பதில் ஜின்டானுக்கு உள்ள புத்திசாலித்தனம் பார்த்தே ஜின் லிங்கிற்கு அவன் மீது பிரியம் உண்டாகிறது. போலீஸ் குழு தடுமாறும் போதெல்லாம் ஜின்டாங், துப்புகளை கண்டுபிடித்து கொடுத்து அதை விளக்கியும் கூறுகிறான். ஒருகட்டத்தில் அவன் புத்திசாலித்தனம் காரணமாக விசாரணைக் குழுவிற்கான ஆலோசகர் ஆகிறான். அதற்கு சம்பளமும் கொடுக்கிறார்கள்.

தொடரில் மருத்துவராக வரும் வென் பாய் உடுத்தும் ஆடைகள் அனைத்துமே வெண்மை. ஜின்டாங்கின் உடைகளில் பச்சையும் வெள்ளையும் இருக்கும். அவனோடு இருக்கும் ஜின்லிங்கும் அதே நிறத்திற்கு தன் உடைகளை மாற்றிக்கொள்கிறாள். வென் பாய்க்காக ஜின்டாங் தன் உயிரையும் கொடுக்க முயல்வான். அந்தக் காட்சி சிறப்பாக உள்ளது. அதை வென் பாய் மறப்பதேயில்லை. உண்மையில், அவனுக்கு தான் யார், ஜின்டாங் யார் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. வென்பாய், ஜின்டாங் என இருவருக்குமே குடும்பம், அதில் அன்பு என்பது கிடைப்பதில்லை. இருவருமே தனிமையில் வளர்ந்து தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். வென்பாய்க்கு அம்மா, அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளாதவள் என்பதோடு, அவளை அம்மா என்று கூப்பிடமுடியாதது சிக்கலாகிறது. அம்மாவை அக்கா என்று கூப்பிடுவது மகனுக்கு எப்படியாக இருக்கும்?

டாக்டர் வென்பாய், சிறுவயதில் செய்த தவறு காரணமாக ஜின்டாங்கின் அம்மா இறந்துபோகிறார். அதன் விளைவாக ஜியான் ஷா என்பவனுக்கு காசு கொடுக்கும் நிர்ப்பந்தம் நேருகிறது. மருத்துவராக வேலை செய்வது, சித்தபிரமையில் உள்ள அம்மாவைக் கவனித்துக்கொள்வது, புதிய உறவாக கிடைத்த ஜின்டாங், தோழி ஜின்லிங் என எதையும் விடுவதற்கு விரும்புவதில்லை. அவன் தனது தவறை உணர்ந்து போலீசில் ஒப்புக்கொடுத்திருந்தால் இந்தளவு பிரச்னைகள் வந்திருக்காது. ஜியான் ஷாவைக் கொன்று அதை டாக்டர் ஷி பார்த்து நிலைமை மோசமாகிறது. அதை வைத்தே டாக்டர் ஷி, தனது காதலை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறாள். வென்பாயை சுற்றி உள்ள பிரச்னைகள் அனைத்துமே மிரட்டல், பணம்பறிப்பு, அல்லாதபோது அன்பை கட்டாயப்படுத்தி கறப்பது என்றே நடக்கிறது. அவனுக்கு ஆறுதலாக இருப்பது ஜின்டாங், ஜின்லிங் ஆகியோரின் நட்பு மட்டுமே.

ஜின்டிங்கைப் பொறுத்தவரை அவனுக்கான நீதி உரியவகையில் கிடைக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அதிக காலம் காத்திருக்கவேண்டியிருக்கவில்லை. ஜின் அவர்களுக்கான நீதியை தனது தேடுதல் மூலமே வழங்குகிறான். பொறியாளனின் மனைவி மூளையில் பிரச்னை ஏற்பட்டு இறக்கும் வழக்கு அதற்கான உதாரணம். மனைவியை சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்துபவனின் சித்திரவதையால் குழந்தை கூட கருவிலேயே கலைந்துபோகிறது. அதற்கும் அவளையே காரணமாக்கி அடித்து உதைக்கிறான். மனைவியைக் கொல்ல தனியாக உழைத்து கருவி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான். அவனது மனதிலுள்ள மனைவி மீதான வெறுப்பு அந்தளவு தீவிரமடைந்திருக்கிறது. மாமியார், மகளின் இறப்பில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறாள். அப்போதுதான் ஜின்டிங் வழக்கினுள் வருகிறான். தொடரில் ஜின்டிங்கிற்கு சவால் அளிப்பது இந்த பொறியாளன் மட்டுமே.

நேரடியாக பார்ப்பது மட்டும் உண்மை இல்லை. ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்கும்போது உண்மை, அதன் கோணம் என நிறைய விஷயங்களைப் பார்க்க முடியும் என வழக்குகளை உருவாக்கி எழுதி காட்சியாக்கிய விதத்தில் ஈர்க்கிறது இத்தொடர்.

கோமாளிமேடை குழு


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்