அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்
பாயும் பொருளாதாரம்
7
அறிவால் பகை வெல்வோம்
கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும்.
பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்னிக்கப்படும். பத்திரிகையாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள். வீடுபுகுந்து துப்பாக்கிச்சூடு நடக்கும். கும்பல் படுகொலை இயல்பாக்கப்படும். பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரம் ஆக்கப்படுவார்கள்.
இடதுசாரி கருத்தியலைப் பார்ப்போம். அரசு, ஏழை, விளிம்பு நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்கும். அவர்களுக்கான மானியங்களை வழங்கும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கும் துறைகளை அரசு பராமரிக்கும். அந்த நிறுவனங்களே முன்னிலைப்படுத்தப்படும். பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும். அடிப்படைத் தேவைகளை அரசு வழங்கும். கல்வி, மருத்துவம் இலவசமாக கிடைக்கும்.
பொதுவாக உள்ள நாடுகளில் இடதுசாரி, வலதுசாரி என இரண்டு கருத்தியல்களுமே கொள்கைகளை வடிவமைக்க பயன்படுகின்றன. கலப்பு பொருளாதாரமாக உள்ளன. அடிப்படை மதவாதம் தொழில்வாய்ப்புகளை குறைக்கிறது. மதக்கலவரம், தீவிரவாத குழுக்கள் நடத்தும் அரசுகளில் நம்பிக்கை இழக்கும் மக்கள், சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்கள். இந்திய ஆட்சித்தலைவரை புகழ்ந்து தள்ளும் மக்கள் எவரும் இந்தியாவில் வசிக்க விரும்புவதில்லை. அயல்நாட்டில் இருந்துகொண்டு ஜெய் சொல்லி கோஷம் போடுகிறார்கள். எதற்கு ஒருநாட்டு மக்கள் இன்னொரு நாட்டுக்கு செல்லவிரும்புகிறார்கள். வாழ்க்கைத்தரம், வசதிகள், முன்னேறுவதற்கான வாய்ப்பு ஆகியவை முக்கிய அம்சங்கள்.
சாதி, மதம், குலம் என தீண்டாமையை கடைபிடிக்கும் இந்தியாவில் அரசு செலவில் தற்கொலை செய்துகொள்ளாமல் படித்து முடித்த மாணவர்கள் கூட கி.மீ. தொலைவில் வரிசையில் அமெரிக்க தூதரக வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் உடனே கடல்கடந்து சென்றுவிடுகிறார்கள். அயல்நாட்டில் திறமைக்கான உதவித்தொகை பெற்று படித்து அங்கு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதிக்கிறார்கள். இந்திய நாளிதழ்களுக்கு மிஞ்சுவது வம்சாவளிப் பெருமை பீற்றல் மட்டுமே. வெளிநாடுகளில் பிரச்னை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா அளவுக்கு திறமைகளைப் புறக்கணிப்பதில்லை. ஊக்குவிக்க முயல்கிறார்கள். இப்போது மெல்ல அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சால், ஆசியர்களுக்கு எதிரான வலதுசாரி தேசியவாதம் வளர்வது உண்மையே. அறிவால் பகை வெல்ல முடியும்.
ஒருவருக்கு வணிகம் சிறப்பாக செல்லவில்லை. எனவே, அவர் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குகிறார். வேலையில் இருந்து நீக்கப்படுபவர், அடுத்த வேலை கிடைக்கும்வரை தடுப்பாட்டம் ஆடி வாழ வேண்டும். அதிக செலவு செய்தால் சேமிப்பு கரைந்துவிடும். இந்த வேலையின்மை பிரச்னையால் மேகி நூடுல்ஸ் கூட அடிவாங்கியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிறிய நூடுல்ஸ் பாக்கெட் பனிரெண்டு தொடங்கி பதினைந்து வரை வந்துவிட்டது. அதுவே மக்களால் வாங்க முடியவில்லை என்றால் இந்தியா என்ன வளர்ச்சியை எட்டும்?
வலதுசாரி அரசு, தனிநபர்களாக உள்ள தொழிலதிபர்களை நம்பி இயங்குகிறது. அவர்களை வைத்தே பொருளாதார வளர்ச்சி என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். ஆட்சித்தலைவர் எங்கெங்கு சென்றாலும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என நாளிதழ் செய்தியை படித்திருப்பீர்கள். இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து தொழில்களை குறைந்த வரி, சலுகையில் தொடங்கலாம்.
இடதுசாரி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை பிரபலப்படுத்துகிறது. அந்த நிறுவனங்களே வலிமையாக திகழும். முக்கிய திட்டங்களை ஏலத்தில் எடுத்து நிறைவேற்றும். இதை சரியாக இயக்குநர் நியமித்து நிர்வாகம் செய்யவில்லை என்றால் ந்ஷ்டம் வரும். அரசின் வரி வருவாய் பறிபோகும். இடது, வலது என இரு அரசுகளும் வேறுபட்ட கருத்தியலை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை வளர்க்கின்றன. இவை எல்லாமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கானவைதான். வேலைவாய்ப்பின்மையை குறைத்து, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அந்நிய செலாவணிக்கு எதிரான உள்நாட்டு நாணய மதிப்பு மிகவும் குறைந்துபோக கூடாது. அப்படி குறைந்தால் நாடு சரிவில் உள்ளது என்று பொருள்.
இன்று ஒரு நாடு, பொருளாதார அடிப்படையில் பல்வேறு நாடுகளுடன் இணைந்துள்ளது. ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது என கள்ள மௌனம் காத்துவிட முடியாது. அதுவுமே கூட நாட்டை பாதிக்கும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்திவிட்டோம். மருந்தின் நேரடி விளைவு நோயைத் தீர்ப்பது என்றால் பக்க விளைவும் உண்டுதான் என்பதை மறந்துவிடக்கூடாது.
பொருளாதாரத்தைப் பார்ப்போம். இதில், தனிநபர் நுகர்வு,அரசின் செலவு, வணிக செலவு, உள்நாட்டு உற்பத்தி என அனைத்துமே முக்கியம். உள்நாட்டு உற்பத்தியை வலதுசாரி மதவாத கட்சிகள் போலியாக உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பொருளாதார வளர்ச்சி எனக்கூறிவிட்டு, மக்கள் வேலையில்லாமல் நூடுல்ஸ் கூட வாங்க முடியாமல் தவித்தால் அதன் பெயர் என்ன? வளர்ச்சியா வீக்கமா?
ஒரு வணிகம் நன்றாக நடைபெறுகிறது. போட்ட முதலீட்டோடு லாபமும் கிடைக்கிறது. அப்போது அதை அவர்கள் ஆராய்ச்சிக்கோ, மேலும் நிறுவனங்களை தொடங்கவோ செலவழிப்பார்கள். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. மக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள், காசை செலவழிக்க மாட்டார்கள். அச்சம் கொள்வார்கள். மக்கள் செலவழித்தால் மட்டுமே அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். இல்லையெனில் பன், ஜாம், பன் பட்டர் ஜாம் என மூன்றுக்கும் மூன்றுவித வரிகளை விதித்து விளையாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, பொருளாதாரம் பரவாயில்லை என்ற ரீதியில் உள்ளது என்று கூறுவதற்கு சான்று. உற்பத்தி அதிகரித்தால் செலவிடுதலும் கூடும்.
உள்நாட்டு உற்பத்தியில் ஒரு நாட்டின் அடிப்படையான பிரச்னைகள் மறைக்கப்பட்டுவிட வாய்ப்புகள் அதிகம். நாட்டிலுள்ள காடுகள் மக்களின் பிராணவாயு தேவைக்கு அவசியம். ஆனால் உள்நாட்டு உற்பத்தியில் காடு உள்ளே வர, அதிலுள்ள மரங்களை வெட்டி, கனிமங்களை தோண்டவேண்டும்.
வீட்டில் பெற்றோர், பெண்கள் செய்யும் உழைப்பு உள்நாட்டு உற்பத்தியில் சேராது. ஆனால், அவையும் மதிப்பு மிகுந்தவைதான். அளவீட்டில் சேராது. பணக்கார நாடு என்று சொல்வார்கள். நாட்டின் மொத்த வளம் ஒரு சதவீத ஆட்களிடம் இருக்கும். செல்வத்தை சரியானபடி பகிர்ந்து கொடுக்காத பிழை. இருட்டில் இருப்பவர்கள் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். முடியும். ஆனால் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு இருட்டில் உள்ள ஏழை மக்களைப் பார்க்க முடியாது. தெரியாது.
உள்நாட்டு உற்பத்தி குறைந்தால் வணிகம் குறைந்தளவு வருமானம் ஈட்டுகிறது என்று அர்த்தம். வேலைவாய்ப்பும் குறையும். சம்பள வெட்டு நடக்கும். எதிர்காலம் புரியாத புதிராக தோன்றும். மக்கள் சோற்றுக்கு அம்மா உணவகத்தில் வரிசையில் நிற்க சண்டை போடுவார்கள். வரியும் குறைந்துவிடுவதால் அரசிடமும் காசு இருக்காது. கல்வி, மருத்துவம், வீடு என அனைத்து துறைகளிலும் நிதிவெட்டு நடக்கும். அப்புறம் என்ன கையாலாகத்தனத்தை மக்கள் அறியாமல் தடுக்க, மதக்கலவரங்களை உண்டாக்கலாம். எல்லையில் தீவிரவாதிகள் என கூக்குரலிடலாம். மதவாத படங்களை அமைச்சரவை சகாக்களோடு உட்கார்ந்து பார்க்கலாம். அனைத்து மாநிலங்களிலும் வரி விலக்கு கொடுத்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கலாம். மக்களின் வேதனைகளைப் பார்க்க சகிக்கவில்லையா, வெளிநாடுகளுக்குப் போய்விடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக